ஏன் பிரித்தாய் கடலே

தமிழினத்திற்கு ஈர் தாயகமாம்
தமிழ்நாடொன்றும்
தமிழீழம் மற்றொன்றும்
எங்களை ஏன் பிரித்தாய்
கடலே! ஏன் பிரித்தாய்?

காலக்கொடுமையிது
காலக்கொடுமையிது
சிங்களனிடம் அடிமையானோம்
இந்தியனிடம் அடிமையானோம்

ஒருத்தாய் பிள்ளைகள்தான்
சகோதரம் அடிபட்டு
துடித்து வேதனையில் அழும்போது
ஏதும் செய்யமுடியா பாவிகளாய்
கையைப் பிசைந்து கொண்டு
கண்ணீர்விட்டு அழுதோமன்றி
என்ன செய்ய முடிந்தது?
எங்களால் என்ன செய்ய முடிந்தது?

ஏன் பிரித்தாய் கடலே?
எங்களை ஏன் பிரித்தாய்?

உயிரைக் காக்க படகேறி
தப்பித்து இங்கு வந்த
விருந்தாளிகளைக் கூட
வரவேற்று விருந்தளிக்க
வக்கற்றவர்களாய் தானே
நாங்கள் இருக்கிறோம்

வந்தவர்களுக்கு இங்கு
அகதி முகாமெனும்
சிறைச்சாலையைத் தானே
நாங்கள் பரிசளித்தோம்

ஏன் பிரித்தாய் கடலே?
எங்களை ஏன் பிரித்தாய்?

கடலே! தமிழர் கடலே!-உன்மீது
சோழன் காலத்தில் கூட
வீரப்படை கூட்டி
வெற்றி முழக்கமிட்டு படகுவிட்டோம்
அட! அதை விடு
ஆங்கிலேயன் காலத்தில் கூட
அதிகாலையெழுந்து வந்து
திரைப்படம் பார்த்து விட்டு
அந்திசாயும் வேளை வீடு சென்றோம்

பெண்னெடுத்தோம்
பெண் கொடுத்தோம்
ஆனால் இப்போது பார் கடலே!
இப்போது பார்!
உன்னை நம்பி வந்த தமிழ்மகன்
உடல் செத்து மிதக்கிறது
உன்மீது

ஏன் பிரித்தாய் கடலே?
எங்களை ஏன் பிரித்தாய்?

இலங்கையின் இறையாண்மையெனும்
கூமுட்டையை அடைகாக்கிறதாம்
நாளை கறிக்கடைக்குச் செல்லவிருக்கும்
இந்திய இறையாண்மைக் கோழி

தேசிய இனங்களை அடிமையாக்கி
அட! தேசம் கண்டவர்களை
எப்படி எங்களால்
விடுதலைப் போராட்டவீரர்களாய்
எடுத்துக் கொள்ள முடியும்?

ஏன் பிரித்தாய் கடலே?
எங்களை ஏன் பிரித்தாய்?

என் கவிஞன் புதுவை சொன்னானே
“தாம்பத்தியம்
தள்ளாடும் போது
விவாகரத்துத் தான்
விமோச்சனம் அளிக்கும்”
ஆமாம் எங்களுக்கு
விவாகரத்து தேவை

ஆணாத்திக்கத்தை செலுத்தி-எங்களை
அடிமையாக்கத் துடிக்கும்
அயோக்கிய கணவன் தேவையில்லை
எங்களை விட்டுவிடுங்கள்-ஆமாம்!
எங்களை விட்டுவிடுங்கள்
நாங்கள் பிறந்த குடும்பத்தோடு
சேர்ந்து வாழ விரும்புகிறோம்

ஏன் பிரித்தாய் கடலே?
எங்களை ஏன் பிரித்தாய்?

கடலே! தமிழர் கடலே!
ஒருதாய் பிள்ளைகள் நாங்கள்
உன்னால் தானே பிரிந்து வாழ்கிறோம்
எங்களை இணைத்துவிடு
இல்லையெனில் எதிரிகளிடமிருந்து
எங்களைப் பிரித்துவிடு

ஏன் பிரித்தாய் கடலே?
எங்களை ஏன் பிரித்தாய்?

எழுதியவர் : வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார் (5-Apr-14, 12:21 pm)
பார்வை : 212

மேலே