ஒன்றே ஒன்றே 0தாரகை0

ஒன்றே குலம்
ஒருவனே தேவனென்று
ஏட்டிலே படித்ததுண்டு!
பாட்டிலே கேட்டதுண்டு!

ஒன்று ஒன்று என்று
ஓயாமல் உரைத்துவிட்டு
உண்மையை தூரமாக்கி
பன்மையை பரவலாக்கி

காணாத அவ்வொன்றைக்
கண்டதோடும் ஒப்பீடு!
பார்த்திராத அவ்வொன்றைக்
பலவற்றோடு பங்கீடு!

ஒன்றுதான் உண்டென்று
உள்ளம் உணர்ந்த போதிலும்
ஒன்றை வணங்க வேண்டுமென்று
உள்ளுணர்வு உரைத்த போதிலும்

தெளிவாக தெரிந்த ஒன்றை
தேடுவதில் என்ன லாபம்?
முறையாக அறியாமல்
மூடுவதில் என்ன பலன்?

உலகத்தை ஆளுவது ஒருவன்
என்பதே சத்தியம்.
ஒன்றுக்கு மேலிருக்க
எவ்வாறு சாத்தியம்?

எனக்கு தாய் ஒன்று தந்தை ஒன்று
என்று சொல்லி கேட்டதுண்டா?
அவை ''ஒன்று'' ஆக இருப்பதுதான்
கண்ணியத்தின் அடையாளம்.
கற்பிற்கு மணிமகுடம்.
இதில் ஏதும் மறுப்புண்டா?

வீட்டிற்கு ஓர் தலைவன்
நிம்மதியின் பிறப்பிடம்!
நாட்டிற்கு ஓர் அரசன்
அமைதியின் அடையாளம்!
உலகிற்கு ஓர் இறைவன்
ஊரறிந்த இரகசியம்!

மக்களுக்கு அநீதி
மன்னனிடத்தில் முறையீடு!
மன்னனுக்கு அநீதி
யாரிடத்தில் முறையீடு?

எனக்கு அநியாயம் இழைக்கப்பட்டால்
இறைவனிடத்தில் முறையிடுவேன்!
இறைவனுக்கே இணைவைப்பு
எங்கு போய் குறை தீர்ப்பேன்?

படைத்தவனை விட்டுவிட்டுப்
படைப்பினத்தை வணங்குவது
பாவம் என்று அறிந்த பின்பு
பரிகாரம் தேடுவதே மாண்பு.

உற்றார் உறவினர்
ஊர்மக்கள் சமூகம்
என்ன சொல்லும் நம்மைப் பார்த்து
என்ற எண்ணம் தலை தூக்கும்.

சத்தியத்தில் நடை போட
சகிப்புத்தன்மை வேண்டுமம்மா!
நித்திய ஜீவனையே
நித்தம் வணங்க வேண்டுமம்மா!

எழுதியவர் : தாரகை (7-Apr-14, 7:44 am)
பார்வை : 222

மேலே