உள்ளெரியும் தீ - கே-எஸ்-கலை

சாதிமதம் சிரமேற்றி
சாதிக்க மாட்டேன் - துவேட
சத்தமிட்டு உரமேற்றும்
சாத்தானாக மாட்டேன் !

அறியாமை தலைசூடி
ஆட்டம்போட மாட்டேன் - சிறு
அகங்காரம் மனம்சூடி
அலைபாய மாட்டேன் !

உறவுக்காக உணர்வழித்து
உளறிநிற்க மாட்டேன் - வெறும்
உணவுக்காக பாட்டெழுதி
உயிர்சுமக்க மாட்டேன் !

வாய்முழுக்க பொய்நிறைத்து
வாழ்த்துரைக்க மாட்டேன் -தினம்
வாடும்பயிர் சோகம்பாடி
வாகைச்சூட மாட்டேன் !

காசுபரிசு மோகம்கொண்டு
காலில்விழ மாட்டேன்-வெறும்
காதல்மட்டும் பாடிவிட்டு
காடுபோக மாட்டேன் !

தீமைக்கொண்டு சாற்றினாலும்
தீர்ந்துப்போக மாட்டேன் - சினத்
தீயெடுத்து கொளுத்தினாலும்
தீய்ந்துப்போக மாட்டேன் !

வெறுஞ்சினத்தில் வெகுண்டெழுந்து
வேகம்காட்ட மாட்டேன் - தலை
வெட்டிமுண்டம் ஆக்கினாலும்
வெற்றிதுறக்க மாட்டேன் !

சோகம்எனை வாட்டினாலும்
சொல்லியழ மாட்டேன் - பெரும்
சோதனைகள் தூற்றினாலும்
சொல்லில்விழ மாட்டேன் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (7-Apr-14, 10:16 pm)
பார்வை : 199

மேலே