===+++அருத்தியனின் காதல்+++===

கார்குலாம் நைல் நதிபோல்
கருங்குஞ்சி நீண்டவளே
ஆயக்காலை வேளையிலே
ஆற்றோரம் வந்திடடி...
அல்வந்து அணைக்குமுன்னே
அன்புன்னை அணைத்திடவே
முரிதிரையாய் குதிக்கிறதே
முறைமாமன் மனதல்லவோ...
செறுபெற்ற செவ்வாழை
செழிபருவம் கொண்டவளே
அருகில் மாமன் வந்தாலே
அரியைப்போல நாணுவாயோ...
நுதலழகாய் விரிந்திருக்கும்
அதிலிந்து முளைத்திருக்கும்
பேரழகை கண்டிடவே
பித்தனாகிப் பிதற்றுகிறேன்..
நயனமிரண்டும் பகழிவீச
நற்காதல் துளைத்ததடி
அருத்தியன் நானகப்பட்டேன்
அதுசுகமே விளம்புகிறேன்...
காதல்நினைவு கடலாக
தத்தளிக்கும் நாவாய் நான்
தடக்கையால் தழுவிடவா
தணல்தீயைப் போக்கிடவா ...
அருவற்று வந்த காதல்
ஆட்கொண்டதென்னை இன்று
யாக்கை எரிக்கும் பிரிவைதீர்க்க
என்னவளே வந்துவிடு...!!!
---------------- நிலாசூரியன்.