ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்-2

ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்-2.
தமிழ் கவிதை- வேர்களும் விழுதுகளும்.

எழுத்து தளத்தில் உலா வரும் பல்லாயிரக் கணக்கான கவித் தோழமைகளின் படைப்புகளைப் படித்து ரசித்து வருபவன் என்ற வகையில் தமிழ் கவிதைகளின் வளர்ச்சி ப|ற்றி சிந்தித்துப் பார்க்கத் தோன்றியது. இத்தளத்தில் பதியப்படும் கவிதைகளை மட்டும் என அல்லாமல் பிற தளங்கள், புத்தககவெளியீடுகள், தமிழ் நாளேடுகளில் வெளி வந்தவை ஆகியவற்றை பரிசீலித்துப் பார்க்கையில், தமிழ்க் கவிதை எனும் விருட்சம் வேர் விட்டு விழுதுகள் பரப்பி, வீரியமாய் வளர்ந்து வருவதைக் காண முடிகிறது என்பதில் பெரு மகிழ்வே ஏற்படுகிறது.
தமிழ் கவிதைகளை, குறிப்பாக, இந்த தளத்தின் கவிதைகளை திறனாய்வு செய்ததில் கீழ்வரும் எண்ணச் சிதறல்களை தள உறுப்பினர்களாகிய சக படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்ளவே விழைகிறேன்..

தமிழ் கவிதைகள் என இத்தளத்தில் பதியப்படும் கவிதைகள் பலவற்றுள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கதில் இருந்தது போலவே இன்னும் பலர் இலக்கணத்தையும் மரபினையும் கட்டிப் பிடித்துக் கொண்டு பயணித்து, எதுகைக்கும் மோனைக்கும் ஏங்கித் தவித்து, பாடு பொருளின் தடம் மாறி, ஊடு பயிர்போல் பல எண்ணக் குவியல்களைத் திணித்து படைப்புக்கள் அளிப்பதையும் காண்கிறோம். அதே நேரத்தில், பலர் இவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு, விடுதலை வீரர்களாய், தங்கள் படைப்பாற்றல் மிளிர்ந்திடும் வகையில், கண்ணிக்குக் கண்ணி ஆர்வம் கூட்டுவதில் திண்ணியராய் இருப்பதையும் காண முடிகிறது..
மொத்தத்தில் இக் கவிஞர்களின் படைப்புகளில் காணும் ஒற்றுமை வேற்றுமைகள் யாதெனின்:

1. எல்லா கவிஞர்களைப் போலவே இவர்களும் சமூக அக்கறை கொண்டு உலா வருகின்றனர். அக்கறை இல்லாதவரையும் அக்கறை கொள்ள வைக்கின்றனர். ஆயினும் வழமையான சமுதாய சிக்கல்களுக்கு இவர்கள் ஆயத்த தீர்வு ஏதும் சொல்லி விடாமல், சொல்லாமல் சொல்லும் பாங்கிலேயே கவிதை வடிக்கின்றனர்.

2. இதைச் சொன்னால் சிலருக்கு மன வருத்தம் ஏற்படும். ஏனெனில், தெளிவின்மையை தனி பிறப்புரிமை போல் கொண்டு, பாடு பொருளை படிப்பவரே புரிந்து கொள்ள வேண்டும் என்பதுபோல் புரியாத புதிராக குழப்பத்துடன் படைப்பினை அளிக்கின்றனர்.

3. பன்னாட்டு இலக்கிய வகைகளில் கவிதைகள் படைத்து அதற்கான மரபு மீறிய
தமிழாக்கத்தில் சிக்கித் திணறி, உரை நடைக் கவிதைகள் என ஏற்க இயலா கவிதை மரபினை புதிதாய் தோற்றுவித்து உள்ளனர். இது தமிழுக்குச் சேவை எனக் கொள்ள இயலாது.

4. ஹைக்கூ, சென்றியூ, போன்ற அயல் நாட்டு இலக்கிய வகைகளில் துளிப் பாக்கள் எனப் படைத்து குறுகத் தரித்த வரிகளில் நிறைவான சிந்தனைகளை நிரப்பித் தருகின்றனர். ஆயினும். ஹைக்கூவின் இலக்கணமான, அந்த உடைக்கும் சொல்லும்,
எடுத்துரைக்கும் பருவ காலமும் இல்லாத நிலையில் இவை வரிப் பாக்கள் எனும் புதிய
அவதாரம் எடுத்துள்ளன.

5. எல்லா கவிஞர்களையும் போல் இவர்களும் காதலை மட்டும் பாடாமல், காதோடு கேட்ட ரகசியங்களையும் அம்பலப்படுத்தும் வகையில், எவ்வித இலக்கிய ரகத்திலும் சேராத படைப்புகளையும் பதிவு செய்கின்றனர்.

6. கவிதை எனபது உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அதனால் வாழ்வில் சந்திக்கும் மகிழ்ச்சி, சோகம், வலிகள், இன்பங்கள், துன்பங்கள், அதிசயங்கள் ஆகியவற்றை திறத்துக்கேற்ப படைத்து தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை தன்னை அறியாமலேயே சேர்த்துப் பிடித்து வைத்துக் கொள்கின்றனர். இது ஓரினத்துப் பறவைகள் என்ற கூற்றுக்கு ஒத்துப் போவதாக கூட இருக்கலாம்.

7. 7. இறுதியாக, ஈழப் பேரிடரை எடுத்தியம்பும் ஓலப் பாடல்களைப் படைத்தே சிலர் எட்டா உயரம் சென்று விட்டுள்ளனர்.

படைப்பாளிகள் தங்கள் படைப்பில் சொல் பொருள் இலக்கணம் போன்ற குற்றங்கள் நீக்கி தங்கள் படைப்புக்களை அளித்தால், இத்தளத்தில் பதியப்படும் கவிதைகள் கல்லில் எழுத்தென நின்று நிலை பெறும். எழுத்து, சொல் யாப்பு, அலங்காரம் என இலக்கண நூல்கள் எடுத்து இயம்பும் முக்கிய நாற்பொருட்கள், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை மட்டுமே ஆகும்.. அனைத்து தமிழ் கவிதைகளையும் இந்த பெரும் தலைப்புக்களுக்குள் எந்த கால கட்டத்திலும் அடக்கி விடலாம் எனும் பொழுது கவிதைகள் மாட்சி உடைத்தனவாக அமைதல் வேண்டும். இத்தகைய மாட்சியாவன:

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்,
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்
முறையின் வைப்பே உலக மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு தாரணத்(து)
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே.

என்று கவிதைக்கும் ஒரு கவிதை நூலுக்கும் மாட்சிகள் பத்து என வட நூலாகிய “மீமாங்கிசை”யின் தமிழ் மொழி பெயர்ப்பாகிய குவலயானந்தம் எனும் அணி நூல் அழகுபடக் கூறுகிறது. இந்த வகை மாட்சிக்கு நேர் எதிரான குற்றங்களும் பத்து ஆகும்.

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை
என்றிவை யீரைங் குற்றம் நூற்கே.

என்பதால் படைப்புகளில் இப்பத்து வகை குற்றங்கள் தவிர்த்து படைப்பது நலம் பயக்கும்.

(வளரும்).

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (8-Apr-14, 5:05 pm)
பார்வை : 145

மேலே