வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 17
ப்ரேம பிரபா...வின் இந்தத் தொகுப்பின்
கடைசிக் கவிதை..."ஒரு கோடி முத்தங்கள்"
இந்த முத்தம் கருவின் முத்தம். தான் யாரென இன்னமும் மற்றவர்கள் அறியாத ஒரு கரு அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த படி...அம்மாவிற்கு முத்தம் தருகிறது. தன் உதையைக் கூட முத்தமாய் நினைக்கும் அம்மாவை நினைத்து நெகிழ்ந்து போகிறது.
கள்ளிப் பாலும்...
எருக்கன் குச்சிகளும் இன்னமும் உயிரோடு இருக்கும் நிலத்தில்...தன் கதி எது எனத் தெரியாவிட்டாலும்...தான் பெண்ணாகவே பிறந்து
அம்மாவிற்காக ஒரு கோடி முத்தங்களைச் சுமந்து வருவதாகப் பேசுகிறது அந்தக் கரு.
சமூகத்தின் சிதைவை மெல்லிய கோடென வரைந்திருக்கும் இந்தக் கவிதை...அம்மா என்னும் குணத்தின் அழகிய பண்புகளைப் பேசுகிறது.
தாய்மை ஒரு பெண்ணிற்குள் வளர்க்கும் நுண்ணிய, உன்னத குணங்களைச் சொல்கிறது.
பூமியின் மீது தன் முத்தத்தைத் துவங்கி...
தாயின் மீது ஒரு கோடி முத்தங்களாகத் தொகுப்பில் தன் கவிதைகளை நிறைவு செய்திருக்கிறார் ப்ரேம பிரபா.
எப்போதும் முத்தம்தான் வலிமை மிக்கது ...
வார்த்தைகளை விட.
என் வார்த்தைகளைவிட...
ப்ரேம பிரபாவின் இந்தத் தொகுப்பில் உள்ள முத்தங்களை நீங்களும் படித்துப் பாருங்களேன்...அவர் கவிதைகளின் பேரழகைத் தெரிந்து கொள்ள.
மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு...
புதிய கவிஞரின் ...புதிய கவிதைகளோடு.