வாரணம் சொல்லும் காரணம்
வனத்தில் வலம்வந்து
வளமாய் களித்த களிறு நான்
மனிதன் எனைப்பிடித்து
சங்கிலி பிணைத்து வாரணமானயெனை
வர்ணம் கொண்டு பட்டை நாமமிட்டு
வர்ணபிரிவினைக்கு வழிவகுத்து
கோ வாசலில் தினம் நிறுத்தி
இருபுறமும் புடைசூழ
மதமெனக்கு பிடிக்கச் செய்து
முதல்வனென சொல்லிச் சொல்லி
வாயிலில் பிச்சையும் எடுக்கச் செய்து
நல்லாசி நான் வழங்க தும்பிக்கையை
தூக்கி தூக்கி என் நம்பிக்கையும்
பொய்யாய் போச்சு
கட்டுகரும்பு திண்ணூம் களிறு நான்
கட்டிவைத்து சோளத்தட்டை தந்தான்
அங்குசத்தால் மேனி துளைத்து
சங்கிலியில் கட்டி வைக்க
சம்மதமற்றச் செயலால் மதம்கண்டு
மதம்கொண்டு பிளிறி வனம் நோக்கி
வீறுகொண்டோட
இடைமறித்தோரை சம்ஹாரம் செய்ய
என்னை பழித்திடல் முறையோ
தட்சணை போடச் சொல்லி தட்டினை நீட்டும்
அர்ச்சகர் செயலை செய்ய என் மனம் ஒப்பாது
விநாயகன் என எனை நினைக்கும் பக்தர்க்கு
வரம்தர முடியாது கையேந்தல் முறையோ
மத்தள வயிறு எனக்கே ஒவ்வாதிருக்கையில்
கையளவு வயிறுனக்கு வாயில் பொய்யுரைத்து
பை நிறப்பி பக்தனெனும் வேசமெதற்கு