இன்னொரு உலகம்

இன்னொரு உலகம்......
======================

விழி மூடிய வேளையில்
வெளியேறிய என் ஆன்மா
காற்றில் மிதக்கிறேன்
இலேசான உணர்வுடன்!!!

என் உடலை நானே காணும்
விந்தை நிகழ்வு
சாத்தியப் படுகிறது
ஆன்மா உடலைப் பிரிதலில்!!!

வலிகளும் அழிவும்
உடலுக்குத்தான்
ஆன்மாவிற்கு அல்ல
வலியற்ற ஆன்மா
வளியோடு வளியாய்...

சொந்தபந்தங்கள் எனை சுற்றி
கண்ணீர் உகுத்தபடி
என் ஆன்மா அழவில்லை
ஆன்மாவிற்கு கண்ணீருமில்லை!!!

புலப்படாமல் போகிறேன்
மனிதர்களின் பார்வைக்கு
என் காட்சிகளில்
அனைவருமாய்... அனைத்துமாய்..

ஒரு சுகமான
பயணத்தின் துவக்கம்
மரணத்தின் முடிவில்
காற்றடைத்த பலூனைப் போல்
மிதக்கிறேனா??
அன்றியும் பறக்கிறேனா??

காற்றோடு என் ஆன்மா
கைகோர்த்துக் கொண்டு
பூமியைவிட்டு நழுவி
வான் நோக்கி மேலெழுந்தவாறே
ஓர் உன்னத அனுபவமாய்...

கட்டிடங்கள் கோபுரங்கள்
அனைத்தும்
என் பார்வையின் கீழே
சிறு... சிறு... புள்ளிகளாய்....
சுருங்கிவிட்ட மனித மனங்களைப் போல...

விமானத்தில் பறக்கவில்லை
மரண சீட்டு வாங்கிகொண்டு
ஓசியில் ஆகாசப் பயணம்
மேகக் கூட்டத்தை உரசிக் கொண்டு!!!

நீரை சுமந்த மேகக் குளிர்ச்சியில்
ஊடுருவியும் கடந்தும்
கும்மிருட்டுக்குள்
ஆன்மாவின் பயணம்
ஒளிவடிவில் பிரகாசமுடன்
உயரத்தில்...அதி உயரத்தில்....

இனம்புரியாத ஓரிடம்
ஆங்காங்கே ஒளி உருவங்கள்
என் தந்தை.. என் உறவினர்கள்
என்றோ உடலைத் துறந்தவர்கள்....

வரவேற்கிறார்கள் உருவமின்றி
உணர்கிறேன்
ஒளி தோற்றங்களில்
அவரவரின் அடையாளங்களை

சில ஆன்ம வெளிச்சங்கள்
அடுத்த பயண ஆயத்தங்களில்
உடல் கிடைத்த ஆனந்தத்தில்
பூமி நோக்கிய பயணங்கள்
பிறவி ஆசை விடாதவர்கள்...

சுற்றிலுமாய் நோக்குகிறேன்
பிரம்மாண்ட ஒளி வெள்ளம்
வினவுவதற்குள் விடைகள்
இறைவனாம்
இயம்பியது ஒரு ஒளி!!!

பேரொளியைச் சுற்றிலும்
ஒளிக் கும்பல்கள்
பிறவிகளைக் கடந்தவர்களாய்
இறைவனை சரணடைந்து...
மகிழ்ச்சிக் கடலில்
நான் மூழ்கியபடி....

நான் பேராசைகொண்ட
இடம் வந்துவிட்டது
இன்பமயமான உலகம்
இனி பூமிவரும் ஆசையில்லை
உடல் தேடும் எண்ணமுமில்லை...

இறையொளிக்கற்றையின்
பேரழகு உறைவிடத்தில்
என் பிறவிப் பயணம்
இனிதே முடிவடைகிறது
ஆன்மாவுடன்...
ஆத்ம திருப்தியுடன்...

* ~ * ~ *~ * ~ * ~ * ~ * ~ *~ * ~ * ~ * ~ * ~ *~ * ~ * ~ * ~ * ~ *~ *

===============================================
நமது தள சகோதரர் திரு லாரென்ஸ் அவர்கள் "இன்னொரு உலகம்" என்கிற தலைப்பினைக் கொடுத்து என்னை எழுதுமாறு பணித்திருந்தார். இதற்கு அவர் கொடுத்த குறிப்பு

"நாம் சாலையோரம் நிற்கும் போது நம்மை கடக்கும் 108 இல் இருக்கும் ஒருவருக்கு அது இன்னொரு உலகமாக இருக்கும் . இது போல இன்னொரு கோணத்தில் இருந்து கவிதை சொல்லப்பட வேண்டும்"

இந்த வாசகங்களை மனதில் நிறுத்தியும் ஆன்மாக்களைப் பற்றிய விவரங்களை சேகரித்தும் கொஞ்சம் கற்பனை கலந்து இதனை எழுதினேன். இத்தலைப்பினை கொடுத்து என்னை வித்தியாசமாக சிந்திக்க வைத்தமைக்கு என் நன்றிகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================================

எழுதியவர் : சொ. சாந்தி (16-Apr-14, 3:46 pm)
Tanglish : innoru ulakam
பார்வை : 195

மேலே