சிறப்புக் கவிதை 4 காதல் தேன் வெண்பாக்கள் ஆதிநாடா
தாயின் குலப்பெருமை தாங்கும் மகளொருத்தி
யாயின் அவள்வாழ்வு யௌவனம்-தோய்கின்றப்
பூங்கா வனத்து புதுமணமாய் இன்பத்தால்
நீங்கா திருக்கும் நிலைத்து.
தூண்டா மணிவிளக்கே தூங்கா ஒளிவிளக்கே
வேண்டா இருளகற்ற விண்ணகத்தில் -நீண்டெரியும்
தண்மின் விளக்கே தனிமலராய் நீவிரிய
பண்சுரந்து ஊற்றெடுக்கும் பார்.
ஜன்னல் நிலவிடத்து சாகசம் காட்டுகின்ற
கன்னல் முகில்பிடித்துக் கையடக்கும் -மின்னல்
பொழுதின்மேல் மெய்மறக்க பூஞ்சிரிப்பால் காட்சி
பழுதாக்கும் பத்தினியாள் பண்பு.
பூக்களின் காதினிற் பாக்களைப் பாடிடும்
சாக்கினில் வண்டினம் சாடையாய் - நோக்கிடும்
ஈக்களின் எண்ணம் எளிதாய் புரிகின்ற
நோக்கத்திற் கில்லை நொடிப்பு.
வண்டுண்ணா பூந்தேன் வழியும் மலரிதழில்
கொண்டுள்ள போதை குறையாமல்-கண்ணாலே
வந்துண் எனவிளித்தே வஞ்சி இளமானும்
தந்தா லதுகாதல் தேன்.