சிறப்புக் கவிதை 3 சிறுங்கை சேதுபதி
மழை இல்லை.
உழவில்லை
வேளாண்நிலம் இல்லை.
புத்தாண்டை-
சின்னத்திரைகளில் மாற்றி மாற்றிக்
கொண்டாட்டமாகப்
பார்த்துக் களிக்கும்
எத்தனை பேருக்கு
நினைவில் வரும்,
கட்டியெழுப்பிய நம் வீடுகள்
வயல்களை விழுங்கி
எழுந்தனவென்று?
சூடேறிய வெப்பக் காற்றைக்
கிழித்தபடி
நாற்கரச்சாலையில்
விரையும் நம் வாகனங்கள்,
வண்டி மாடுகளின்
குருதி குடித்து வளர்ந்தவை
என்றும்
உலகையே விழுங்கி
ஏப்பம் விடத்துடிக்கும்
ஒவ்வொருவரும்
பாட்டனுக்குப் பாட்டனும்
பாட்டிக்குப் பாட்டியும்
ஊட்டி வளர்த்த
ஒரு தானிய மணியின்
மீச்சிறு அணுவில் இருந்து
உதிர்ந்தவர்கள்
என்றும்
உணராமல் சொல்லும்
வார்த்தையில்
புத்தாண்டு
எப்படி மலரும்?
HAPPY TAMIL NEW YEAR
என்று
வாழ்த்துகிற யாரும்
தமிழராய்
வாழவும் இல்லை;
வாழ
விடவும் இல்லை.
கசப்புகளை
வென்று
இனிக்க வாழும்
சூத்திரம் சொல்ல
மிச்சம் இருக்கும்
பூக்களைத் தூவி
வரவேற்கும்
வேப்பமரத்திற்குத்தான்
என் வாழ்த்தும்
வணக்கமும்.