யாதுமாகி
பிரபஞ்சத்தில்
ஒரு
நுண் துகளென
தூவப்பட்டுள்ளது
உன் மீதான
என் நினைவு !
ஆயினும்
நீர், நிலம்
நெருப்பு , காற்று
ஆகாயமடங்கிய
பேரண்டமென
பெருகிப் பாய்கிறது
என்னுள் உன் நினைவு !
என் சுவாசித்தலின்
சிறப்பென்பது
உன்னை சுகித்தலின்றி
வேறொன்றில்லை !
நீ எனை நீங்கும்
வேளைகளில்
கவியும் முடியாத
பகல்களிலும்
விடியாத இரவுகளிலும்
ஆறு ,கடல்
மலை தாண்டி
என் நாளங்களில்
கூட
உன் பெயரெழுதிப் போகிற
உன் நினைவுகள்
தக்க கோபத்திற்கான
ஆயுத எழுத்துக்களையும்
அதி நேசத்திற்கான
உயிரெழுத்தாய்
மாற்றிப் போகிற
மர்மம் புரிய வில்லை !
என் உயிரெழுத்து
தாங்கி வரும்
உனது குறுஞ்செய்திகள்
உன் மூச்சின் சுகந்தத்தை
மற்றெல்லா எழுத்துக்களுக்கும்
பரப்பி
செய்தி முழுக்க
சாத்திய மாக்குகிறது
உன திருப்பை !
சர்வ சதா காலமும்
உன்னை ரசித்த படியிருக்கும்
என் வானத்து வெண்ணிலா
நீயில்லா வேளைகளில்
துக்கம் தாளாது
உதிர்த்து விட்டுச் செல்கிறது
தன தத்தினை நட்சத்திரங்களையும் !
காலமற்ற காலமதில்
வரப்போகும்
இலையுதிர் காலங்களில்
உனது காலடித் தடங்களின்
மென் பஞ்சுப்பதியலுக்காக
உதிரப் போகும்
இலைகளோடு சேர்ந்து
என் நினைவுகளும் -
கண்களில் நீர் முட்ட
களிப்பெய்திக் கிடக்கிறது
என்னைப் பற்றிய
உன் நினைவுகளின் ஸ்பரிசத்திற்காக .