உயிரோடு விளையாடி

"இவனுகளுக்கு வேற வேலையே இல்லை. பள்ளிக்கொடத்தை லீவு விட்டுடக்கூடாது. ஒடனே ஊரு மேய கெளம்பிடுவாணுக. ஆளுகளையும் மூஞ்சிகளையும் பாரு அடுப்புல வெந்த ஆமக்கறி மாதிரி.போங்கடா போயித் தொலைங்க"
என காலையிலேயே லோக்கல் சுப்பிரபாதம் பாடிக்கொண்டு இருக்கிறார் வேலுவின் அம்மா.

வேலுவின் நண்பன் சிவராமன்,வேலு அம்மாவின் திட்டலுக்கு பயந்து பத்தடி தூரத்தில் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்கிறான். வேலுவும் சிவராமனும் ஆறாம் வகுப்பு ஆ பிரிவை செர்ந்தவார்கள்.

பொழுது விடிந்து கொஞ்ச நேரம்தான் இருக்கும். ஊமையாத் தேவர் வீட்டு சேவல் இப்போதுதான் கண் முழித்து கூவுகின்றது. பொழுது விடிந்தும் விடியாததுமாக சிவராமன் வேலுவின் வீட்டு வாசலில் அவனை கூட்டிக்கொண்டு ஊர் சுற்ற காத்து நிற்கிறான்.
வேலுவோ பாதி தூக்கத்துடன் பல்லுகூட சரியாக விளக்காமல். பழங்கஞ்சி குடித்துக்கொண்டு இருக்கிறான். தொட்டுக்க நார்த்தங்கா ஊறுகாய்.

சிவராமனுக்கு, வேலு கஞ்சியை சலுப்பு சலுப்பு என வாய்க்குள் அப்லோடு செய்வதும் அந்த சத்தமும் பசியை தூண்டுவது போல இருந்தது. அதை வேடிக்கை பார்த்தபடியே நின்று கொண்டு இருக்கிறான். வேலுவின் அம்மா அவர்களின் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் மாட்டு கொட்டகைக்குள் பால் பீய்ச்ச போனதுமே சாப்பிட்டுக்கொண்டு இருந்த கஞ்சியை அப்படியே வைத்துவிட்டு கைகளைக்கூட கழுவாமல் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என பின்னங்கால் பிடனியில் அடிக்க ஓடி கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஒரு அடி பைப்பில் சிவராமனை அடிக்க சொல்லி கையையும் இன்னொரு முறை முகத்தையும் கழுவிக்கொண்டான் வேலு.

அன்று வேலுவும் சிவராமனும், எங்கே செல்வது என எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. ஆனால் பள்ளி விடுமுறை நாளை எப்படியாவது கழிக்க வேண்டும். அவர்களின் ஊர் பெரிய சிட்டி கிடையாது மிஞ்சி போனால் ஒரு டீக்கடை அந்த டீக்கடைக்கு சேது பாவா கடை என பெயர். அந்த பெயர் எதற்க்கு என அந்த ஊர் மக்களுக்கு தெரியாது. ஏன் அந்த கடைக்காரனுக்கு கூட தெரியாது. இத்துனூண்டு கடை, ஓலை குடிசைதான். கடையின் முன்னாடி ஆஸ்பிட்டால் சீட்டு தாழ்வாரம் எடுத்து இருக்கும். அந்த டீ மாஸ்டரையும் அவர் கழட்டாமல் போட்டு இருக்கும் புள்ளி பனியனையும் பார்த்தாலே டீ குடிக்க நமக்கு தோணாது.

சுல்தான் பாய் மளிகைக்கடை, பேருதான் மளிகை கடை ஆனால் கடைக்குள் ஏகப்பட்ட பலசரக்கும் , பழைய சரக்கும்தான் இருக்கும் , உள்ளே நுழைந்த உடனே கருவாடு வாசனைதான் வரும், கடையின் முன்னாடியே காய்கறிகள் அதுவும் காஞ்சி கருவாடகாதான் இருக்கும். அந்த ஊரு மக்கள் பிரஷான காய்கறி வாங்கணும்னா பத்து பதினைந்து கிலோ மீட்டர்ல உள்ள டவுனுக்குத்தான் போகணும்.

இந்த ரெண்டு கடைகளை தவிர்த்து ஒரு விறகு கடை, சைக்கிள் கம்பனி ( வாடகைக்கு) இந்த நாலு கடையும் அங்கும் இங்குமாக பரவி கிடக்கும், வயல் காட்டுல தானியம் தூவுன மாதிரின்னு வச்சிகிடுங்களே.

இந்த ரெண்டு பயலுகளும் இப்பதான் சுல்தான் பாயோட மளிகை கடைக்கு போறானுக.

"அண்ணே ! ஒரு ஆறு பம்பரம் வேண்டும்னே !" என வேலு கேட்டான்

காலையிலேயே மொதோ வியாபாரம் ஆறு பம்பரம், என உள்ளுக்குள்ளேயே கணக்கு போட்டுக்கொண்டு, பம்பரம் இருக்கும் பிளாஸ்டிக் பையை தேடினார் அந்த சீரோ வால்ட்டு மஞ்சள் பல்பு வெளிச்சத்தில், பத்தி வாசனை வேற மூக்கை துளைக்குது அதுவும் சாம்பிராணி பத்தி. கட கட கட என கரகாட்டம் போடும் மேசைக் காற்றாடியை எட்டி பார்கிறான் சிவராமன். இன்னும் பம்பரத்தை தேடி எடுத்த பாடில்லை.

சுளுவா எடுங்கனே காலையிலேயே எங்களுக்கு ஏகப்பட்ட வேல கெடக்கு. இவ்வாறு சிவராமன் சொல்லிவிட்டு வேலுவை பார்த்து கண் அடிக்கிறான். வேலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆங் ...கெடச்சிடுச்சி என மெல்லிய சிரிப்புடன் அந்த பாய் ஒரு பெரிய பாலித்தீன் பையை எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைக்கிறார். அந்த பம்பர பைக்குள் களமிறங்கி தேட ஆரம்பித்தவர்கள் கால் மணி நேரம் கழித்து ஆறு பம்பரத்தை எடுக்கின்றானர்.

"அண்ணே எவ்வலோதுன்னே" என சிவராமன் கேட்கிறான்.
விட்டத்தை பார்த்து கணக்கு போட்டவர், அப்படி இப்படி என

"ஒரு பம்பரம் ஆறு ரூவா ஆறு பம்பரம் நுப்பத்தி ஆறு ருவா, ஒனக்கான்டி நுப்பத்தி அஞ்சு ரூவா குடு,

சிவராமனும் வேலுவும் மாற்றி மாற்றி முகத்தை பார்த்து கொண்டனர்.
பிறகு,

"அண்ணே அதெல்லாம் சரி பட்டு வராது, எங்களுக்கு இருபது ரூபாய்க்கு வேணும்"

"அடப்பாவியலா இருவது ரூவாய்க்கா ? போங்கடா காலையிலேயே தாலிய அறுக்க வந்துட்டானுவ"

"என்ன அண்னே கோவப்படாதிய , சரி கொஞ்ச கொறச்சி குடுங்க"

"அடே பயலுவளா ஆறு பம்பரத்துல ஒரு பம்பரத்த கொறச்சிட்டுன்னா தாரேன், வெலைய மட்டும் கொறைக்க மாட்டேண்டா ! "

இப்படி மாபெரும் வாக்கு வாதத்திற்கு இடையில் ஒரு அக்கா வந்தது

"அண்ணே ரெண்டு ரூவாக்கி இஞ்சி குடுங்கண்ணே ! "


"ம்க்கூம் ... என்ன தாயி ரெண்டு ரூவாக்கி , ஒன்னே முக்கருவாக்கின்னு, அம்பது இஞ்சி அஞ்சி ரூவா வாங்கிட்டு போயி வைய்யி தாயி இதெல்லாம் கெட்டு போற பொருளு இல்ல.
சரிண்ணே குடுங்க, என வாங்கிச்செல்கிறது அந்த அக்கா"

"சரி நமக்கு என்ன ?" என வேலு கேட்கிறான்.

"டேய் ஓடிப் போயிருங்கடா காலையிலேயே மண்ட சூட்ட ஏத்தாதிய."

இருவரும் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கடையை விட்டு கொஞ்ச தூரம் ஓடிப்போய் கெக்க புக்கன்னு சிரித்தனர. உண்மையிலேயே அவர்கள் பம்பரம் வாங்க போகவில்லை. சும்மா மளிகை கடை பாயை கலாய்க்கவே.

"ம்ம்ம்ம்ம்... காலையிலேயே ஒரு நல்ல காரியம் பண்ணியாச்சு. அடுத்து என்னடா பண்ணுவோம்?"

என வேலு சிவராமனிடம் கேட்கிறான்.

"அடே எனக்கு பசி வயித்த பொராண்டுது, சேது பாவா கடைக்கி போவோம்."

"எங்கிட்ட ஒரு ரூவா கூட இல்ல... "

"உன்னைய யாரு காசு குடுக்க சொன்னா ? எங்கப்பா அங்கதாண்டா உக்காந்து கத பேசிகிட்டு இருப்பாரு. அவருகிட்ட போயி கேட்ப்போம். வா மத்தத நா பாத்துக்கிடுறேன் !"

இருவரும் பொடி நடையாக தெருவில் போகும் நாயி பேயெல்லாம் வம்பிழுத்துக்கொண்டு. கடைசியாக சேது பாவா டீக்கடையை அடைகின்றனர்.

அங்கு சிவராமன் சொன்னது போலவே அவனின் அப்பா உட்கார்ந்து ஊரு கத ஒலகத்து கதையெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்.

"என்னாங்கடா காலையிலேயே பெரிய மனுஷனாட்டம் டீக்கடைக்கேல்லாம் வந்துகிட்டு ? என்ன விஷயம்"

என பேசியவாறே இடுப்பில் சொருகி வைத்திருந்த செய்யது பீடியை பற்றை வைக்கிறார். குபுக்குன்னு ஒரு ஊது ஊத்தி விட்டு மறுபடியும் கேட்டார். அவர் மறுபடியும் கேட்கும் பொது இருவரும் பெஞ்சில் உட்கார்ந்து சூடான போண்டாவை ஊத்தி ஊத்தி பேப்பரில் வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

"என்னாங்கடா ஒரு பெரிய மனுஷன் கேக்குறேன் பதிலையே காணோம். ? "

"அட இருப்பா வளருற புள்ளைய சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. அதுகளுக்கு போயி கொடச்சல குடுத்துக்கிட்டு "

என சொல்லியவாறே அந்த டி மாஸ்டர் இருவரின் கையிலும் டீ யை கொடுக்கிறார்.

ம்ம்ம்ம்ம்ம்.... என மேலும் கீழுமாக சிவராமனின் அப்பா இருவரையும் ஸ்கேன் செய்கிறார்.

"என்னடா இதுக்கெல்லாம் காசு ஏது ? "

இப்போது இருவரும் வந்த வேலையை முடித்து விட்டு கைகளை இருவருமே தங்களது சட்டையில் துடைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

"ப்பாஆ.... என்னப்பா நீதானே காசு குடுக்க போறா ? குடுத்துருபா ... "

சிவராமன் சொல்லியபடியே தனதுஅப்பாவின் அருகில் சென்று

"நாலு போண்டா ரெண்டு டீ, மொத்தம் பதினாறு ரூவா குடுத்துருப்பா... "

அடப்பாவி காலையிலேயே செலவு வச்சிட்டியா ? என சொல்லாமல் மனதுக்குள் நினைத்துக்கொண்டு. தலையை மட்டும் அசைத்தார்.

"வா மாப்ள வந்த வேல இதுவும் முடிஞ்சிரிச்சி."

இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சேதுபாவா டீக்கடையிளிருந்து ஒரே நேர் ரோடு. ஒரு கிலோ மீட்டர் இருக்கும். அதில் நடக்கத் தொடங்கினர். போற வழியில் கிடக்கும் தீப்பெட்டியை எடுத்து ஆங்காங்கே குட்டி குட்டியாக சிதறிக்கிடக்கும் வைக்கோல்களை சேர்த்து எரித்து விட்டு நடக்கின்றார். அதில் ஒரு ஜாலி.

"டே மாப்ள எனக்கு வயித்த வலிக்கிதுடா ... "

"என்ன பாக்க வச்சி கஞ்சி குடிச்சியல்ல அதுதான்."

"டே லூசு மாதிரி பேசாதடா எனக்கு அது வருதுடா .... "

"சனியன போயி தொலை நான் இங்கேயே உட்கார்ந்தது இருக்கேன்."

"ம்ம்ம்ம் அதெல்லாம் இல்ல நீயும் வரணும்..."

"இதுக்கு கூடவா தொணக்கி ஆளு வரணும் ?"

"சரி இங்கேயே இரு நா போயிட்டு வாறன்.. "

(கால் மணிநேரம் கழித்து வேலு வருகிறான்..)

"அடே இதுக்கு இவ்வுலோது நேரமாடா ? போயி என்னடா பண்ணுனா ?"

"அத யாண்டா கேட்குறா ? "

"ச்சீ ... அத கேப்பானுகளா ? எதுக்கு இவ்வுலோது நேரமுன்னு கேட்டேன் ."

"அடே அந்த வாய்காலுல தண்ணி வேற வரலடா.. சுத்தி முத்தி பார்த்திபன் வீட்டு போர் கொட்டகையில கொஞ்சூண்டு தண்ணி கெடந்துச்சி... நல்ல வேல தப்பிச்சீண்டா இல்லன்ன என்ன ஆயி இருக்கும் ? "

"அதானே ஆயி இருக்கும் ! "

இருவரும் மெளனமாக முகத்தை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டனர்... பிறகு அவன் சொன்ன காமெடிக்கு மீண்டும் வயிறு வலிக்க சிரித்து முடித்தனர்.( இது வேற வயித்து வலி ;) ).

"டே எனக்கு காலு வலிக்கிதுடா செத்த நேரம் இங்கேயே உட்கார்ந்துதிட்டு போவோமா ? "

"ஆமாண்டா எனக்குகூட கொஞ்ச அசதியாதான் இருக்கு"

என்று சிவராமன் சொன்னான்.

கொஞ்ச நேரம் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. இயற்கை அவர்களின் வாய்க்கு பூட்டு போட்டு தனது வனப்பினால் மயங்க வைத்துக்கொண்டது. அப்போது திடீர் என கொஞ்சம் சத்தம் குறைவாக சிவராமன் கேட்கிறான்.

"எண்டா ? நாமெல்லாம் பெரிய ஆளா ஆவுனதுக்கு பெறவு இந்த வயக்காடெல்லாம் இருக்குமா ? இந்த காத்து அந்த வத்தின கொலம், பார்த்திபன் வீட்டு கெணறு போர் கொட்டகை ? இந்த ஒடஞ்சி போன பாலம், ஒத்தையடி பாதை, அந்த வேலிக்கருவ மரம் ...? "

"ம்ம்ம்ம்ம்ம்.... "

மட்டும் வேலு பதில் சொல்லிவிட்டு மீண்டும் அந்த வனப்பின் போதையில் மயன்க்கிடந்தான் ...

மீண்டும் அதே அமைதி நிலவியது...
இப்போது வேலு சொன்னான்

"அதாண்டா எனக்கும் தெரியல , நேத்து தமிழ் சார் சொன்னது மாதிரி , இருக்குற வயக்காடு எல்லாம் வீடு கட்டுற நெலமா மாறிக்கிட்டு வருதாம்ல, இப்புடியே போனிச்சினா சாப்புட நெல்லு இல்லாம அத உருவாக்க வயலு இல்லாம, கடலுல போற கப்பல் மேலதான் மண்ணை அள்ளிப்போட்டு சாகுபடி பண்ணுவாகளாம். அப்பொல்லாம் ஒரு கிலா அரிசி ஆயிரம் ரூவா , ரெண்டாயிரம் ரூவான்னு விக்கிமாம். "

"ஆமான்ட நான்கூட சார் சொல்லும்போது கவனிச்சேன், ஆனா அப்போ கொஞ்ச தூக்கத்துல இருந்தேன் அதாண்டா ஒரு எழவும் புரியல, ஆனா சாமி நம்மள அப்படிலாம் கை விட்டுடாதுடா , "

"ஆமாண்டா , சாமிதாண்டா இவ்வுலோது நாலா சோறு போட்டிச்சி இனியும் போடும்."

இவ்வாறு பேசிக்கொண்டே வேலு அருகில் இருந்த புளிய மரத்தை பார்த்தான்.

"டேய் புளியங்கா சாப்பிடுவோமா ? "

"ம்ம்ம் ... நல்ல செங்காவா பாத்து அடிடா , "

இரண்டு பேரும் அந்த உடைந்த பாலத்தில் இருந்து ஒரே தாவாக தாவி , புளியங்காயை அடிக்க கல்லை தேடினர் , கொஞ்ச பெரிய கல்லாக ஒன்றும் சிக்க வில்லை , பிறகு ஒரு முள் புதருக்குள் கிடந்த செங்கல்லை எடுத்து பல துண்டாக உடைத்து, புளியங்காயை அடித்தனர். இரண்டு பெரும் மாறி மாறி அடித்தனர். புளியங்காய் விழுந்த பாடில்லை, ஆனால் ஒரே ஒரு குருவிக்கூடு மட்டும் தரையில் இரண்டு குருவிகளுடன் பசக் பொடக் என விழுந்தது. அந்த பசக் சத்தம் கூடு தரையில் விழுந்தது, பொடக் சத்தம் கீழே விழுந்த இரண்டு குருவிகளில் ஒரு குருவியின் கால் உடைந்தது.

ஓடிப்போய் இரண்டு பெரும் அந்த இரண்டு குருவிகளையும் கூட்டுடன் சேர்த்து எடுத்தனர். கால் உடைந்த வலியுனால் அந்த தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது. அந்த இரண்டு குருவிகளும் பிறந்து இருபது நாட்களே இருக்கும்.

"டேய் இன்னக்கி நமக்கு செம வேட்டைடா ... இந்த ரெண்டு குருவியையும் அப்படி தோல உறிச்சிட்டு மொளகாத்தூள் போட்டு எண்ணையில பொரிச்சி எடுத்து சாப்பிட்டா ... ஷ்ஷ்ஷ்ஷ்..... ஆஅஹ்ஹ்ஹ்... செமையா இருக்கும்ல... " என்று வேலு சொன்னான்.

"அடக்கருமாதி புடிச்சச்சவனே இத போயி யாரும் சாப்பிடுவாங்களா ? "

"ஒய் ...உனக்கு என்ன தெரியும் நான் நெறையா தடவ சாப்ட்டு இருக்கேன்... சரி வா வா எங்க வீட்டுக்கு போயி எங்கமாக்கிட்ட கொடுத்து கொளம்பு வச்சி கேட்போம், ஆளுக்கு இரு ஒரு குருவி சரியா"

சொல்லும்போதே சிவராமனுக்கும் மனதிலும் நாக்கிலும் எச்சில் ஊறியது.

இது பொருந்துமோ பொருந்தாதோ என்கிற அரை மனதுடன் சிவராமனும் வேலுவும் சென்றான்.

வெய்யில் வேறு அனலாய் கொதிக்கிறது, கால் ஒடிந்த சிட்டுக்குருவியோ வலியால் துடிக்கிறது. இன்னொரு குருவியோ பயத்தால் நடுக்கிங்கிப்போய் கிடக்கிறது, அந்த கூட்டுக்குள் இரண்டு குருவிகளையும் சுற்றி வேலு இறைச்சி வேட்கையுடன் வீடு விரைகின்றான் கூடவே சிவராமனும்.

வேலுவும் சிவராமனும், வேலுவின் வீட்டு வாசலை நெருங்கி ஆயிற்று, தயக்கத்துடன் சிவராமன் வேலுவிடம் கேட்டான்,

"வேலு.... "

"சொல்லுடா..".

"இந்த குருவியை நாளைக்கு கொழம்பு வச்சிக்கிடலாமா ? இன்னைக்கி மட்டும் இந்த ரெண்டு என்கிட்டேயே இருக்கட்டுமா ?"

"அடே எனக்கு வேற வாயி வயிறெல்லாம் ஊருது அதெல்லாம் சரி பட்டு வராது இன்னக்கே இத சாப்பிட்டு ஆகணும் "

"டே ... ப்ளீஸ் டா இன்னக்கி மட்டும் என்கிட்டே இருக்கட்டுமே "

"ம்ம்ம்ம்... சரி நாளைக்கி காலையில எங்க வீட்டுல கொண்டு வந்து கொடுத்துடணும் சரியா ? "

ம்ம்ம்ம் சரிடா ... என்று மகிழ்ச்சியுடன் அந்த குருவி கூட்டுடன் வீடு விரைந்தான் சிவராமன்.

அந்த நாள் இரவு வரை அவைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடினான் அவைகளுக்கு தானியங்களை கொடுத்தான். அவைகளை பார்க்கும் பொது சிவராமனுக்கு மிகவும் பாவமாக இருந்தது. இதனை வேலுவிடம் காலையில் கொடுத்தால் குழம்பு வைத்து தின்று விடுவான். ஆகையால் கலையில் பொழுது விடிந்தும் விடியாததுமாக இந்த குருவிகளை இருந்த புளிய மரத்திலேயே கொண்டு வைத்து விட வேண்டும். என முடிவு செய்தான்.

அந்த இரண்டு குருவிகளையும் ஒரு அட்டைப்பெட்டிக்குள் வைத்து காற்று போக சிறு சன்னல் போல செய்து விட்டு வீட்டின் மூலையில் வைத்துவிட்டு உறங்கச் சென்றான்.

பொழுதும் புலர்ந்தது காலையில் அந்த அட்டைப்பெட்டி இருக்கும் இடைத்தை நோக்கி ஆவலுடன் வந்தான். அங்கு அட்டைப்பெட்டி நாசம் செய்யப்பட்டு கிழிந்து கிடந்தது. அட்டை பெட்டியினுள் எட்டி பார்த்தான் குருவியின் உடைந்த காலும் இறக்கையும் மட்டுமே இருந்தது. குருவிகளை காணவில்லை.


அய்யா குருவிய பூனை திண்டுட்டு போச்சியா .. பாவம் அத நேத்தே அங்கேயே விட்டுட்டு வந்திருக்கலாம்ல, பாவம் அதோட அம்மா குருவி தேடிக்கிட்டு இருக்குமே !

என சிவராமனின் அம்மா சொனார்.

சிவராமன் கண்ணீருடன் அவனின் அம்மாவை பார்த்தான்.

- முடிந்தது -

எழுதியவர் : தமிழ் ஹாஜா (19-Apr-14, 10:19 pm)
Tanglish : uyirodu vilaiyaadi
பார்வை : 301

மேலே