போய்விடுவேன்
நீல நீர் நீள்வெளிக்
கடலின் கரையிலிருந்து
நம்பிக்கைத் தவத்திலொன்றி
உள்ளுயிரின் ஒலிபெருக்கி
உன்னைக் கூவியழைக்கிறேன் !
என் தடாகத்தின் அதிதவிப்பில்
தாமரைகள் தீப்பிடிக்கின்றன -
வெண்ணீர் , வெந்நீர் என
கொதித்து ஆவியாகி
அனைத்தும் தீர்ந்து
மகிழ்வின் நொடியழித்து
தீர்ந்து தூர்ந்து
பொட்டலாகுமுன்
என் ஆனந்தப் பொன் மீனே
வந்து விடு !
ஊர் தூங்கும் வேளையிலும்
ஒரு பொட்டு தூங்காத
அலையோசையில் அடங்கியதா
மூச்சுகளதிரும் எனதிந்தக்
கூக்குரல் -
அல்லது
அண்ட பகிரண்டம் அலற
நானெழுப்பும்
பரிச்சயமான பாசமொழி
மறந்ததா ?
எனதுயிரினும் மேலான
என் பொன்மீனே !
நேசமொழி ஒன்றைத் தவிர
உன்னைச் சிறை செய்யும்
வலைமொழி , தூண்டில் மொழிஎனச்
சதி மொழி ஏதுமறியாதவனின்
உயிர் மொழி
உன் துறையடைந்து
துடித்திடும் துயரறியாது
துயில்கிறாயா ?
என்றாவதொரு
பௌர்ணமிப் பொன்னொளியில்
யாருமற்ற நள்ளிரவில்
காதலால் என்னையகழ்ந்து
மேலும் ஒளியுறவே -
என் தடாகத்தின் மேற்பரப்பில்
தங்க மீனென துள்ளிடும்
என் மீன் -
அதை எனதாக்கும்
முயற்சி எதுவுமின்றி
காதல் கூம்பிக் கட்டவிழும்
உயிர்த்துளியொன்று
சொட்டியதிர்கிற
ஓசை கேட்காத் தொலைவினில்
எட்டயிருந்து பார்த்துவிட்டு
எட்டாத் தொலைவிற்கு
என்றைக்குமாய் போய்விடுவேன் !