பரதேசி

தொட்டில் ஆடுமுன்னே
தூக்கிவிடவெண்டுமென்ற ஆவல்!
அட்டவணையமைத்து தாலாட்டும் தவிப்பு!
பனியில் நனைந்த பன்னீர் ரோஜாவை
மடியில் தாலாட்ட தாய்மாமன்களுக்குள் போட்டி!
அழவிடாமல் அள்ளிவைத்துக் கொஞ்சிக் கொண்டு
சொர்க்கமெனும் பொருள் தரும்
ஆங்கில கவிஞரின் பெயரைச் சூட்டி
அழகு பார்த்த சித்திமார்கள்!

தாய்மடியில் தவழ்ந்த நாட்களைவிட
தாய்மாமன்களில்தோள்களில்
தூங்கிய நாட்கள் தான் அதிகம்!
பிஞ்சுப் பாதத்தை நெஞ்சில் மிதிக்க வைத்து
வேடிக்கைப் பார்த்து தான் வாங்கும்
சொற்ப சம்பளத்தின் தொண்ணூறு
சதவிகிதத்தையும் எனக்கு
பிஸ்கட் வாங்க செலவழித்து விட்டு
மற்றவர்களிடம் ஏச்சு வாங்கி
தான் செய்த கசப்பு மருந்திலும்
ஒரு சொட்டை என் நாக்கில் வைத்து
சப்புக் கொட்ட வைத்த
தாய் வழி வைத்தியர் தாத்தா!

முள் குத்திக் கால்கள் வலித்துவிடுமென்று
பத்துவயதிலும் இடுப்பில் தூக்கி சுமந்து!
கடைகளிலும் துறைகளிலும் சென்று
அதிசய தின்பண்டங்களை வாங்கித் தந்து
அழுகின்ற என்னைக் குஷிப் படுத்த
குட்டிக் குட்டிப் பாடல்கள் பாடி
தள்ளாத வயதிலும் நர்த்தனமாடும்
தாய் வழிப் பாட்டி!

நூறு ரூபாயில் ஐம்பதை என்னிடம் தந்து
இருபத்தைந்து உனக்கு மீதியில் நான் சாகும் போது பத்தி வாங்கி வை என்று
மாதம் தவறாமல் காசு தந்து
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும்
பாப்பாத்தி காலைத் தூக்கி
எடுத்து எட்டு வைத்து நடந்து போ
எனக் கூறும் தகப்பன் வழித்
தாத்தாவின் குரல் இப்பொழுதும்
ஒவ்வொரு அடியிலும் கேட்கிறது
என் காதுகளில்!

மகனின் முதல் குழந்தை பெண்ணல்லவா!
வானத்து தேவதை வையகத்தில் வந்த சந்தோசம்
அழகழகாய் புதிது புதிதாய் தினுசு தினுசாய்
வருடமொரு கொலுசணிந்து வரும்
என்னைப் பார்க்க அப்படியொரு ஆசை
என் தகப்பன் வழிப் பாட்டிக்கு!
என்னைப் பேச விட்டுக் கொஞ்சிப்
பேசும் தமிழைக் கேட்பதில்
ஒரு ஆனந்தம் என் இரத்த வழி உறவுகளுக்கு!

சித்திகளின் திருமணத்தின் போது
புகுந்த வீட்டில் நுழையும் அவர்களின்
முதல்குழந்தையும் செல்லக்குழந்தையும் நான்தான்
இரு வாலிப பிள்ளைகளுக்கு நான்
தாயானபின்பும் என்மீதுகொண்ட பாசம்
எள்ளளவும் குறையவில்லையெனும் போது
நான் கொடுத்து வைத்த மகாராணிதான்!
என் பிள்ளைகளுக்கு அந்தப் பாசம்
கிடைக்கவில்லையெனும் போது
நான் இன்னும் பஞ்சப் பரதேசி தான்!

.......................சஹானா தாஸ்!

( இப்படைப்பு என்னைத் தோளில் தூக்கித் தாலாட்டிய என் உறவுகளுக்குச் சமர்ப்பணம்!)

எழுதியவர் : சஹானா தாஸ் (23-Apr-14, 7:30 am)
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே