வெட்டிச் சாய்ப்போம் வெயிலை

தாகம் தவிக்க தேகம் களைக்க
>>>>> கத்திரி வெயிலில் மண்டைகாயும் !
தலையும் சுற்ற கண்கள் சொருக
>>>>> இரத்த அழுத்தம் மிகஏறும் ...!!

வியர்வை நனைக்க நாற்றம் எடுக்க
>>>>> கோடை வெயில் எரிச்சலூட்டும் !
வியர்க்குரு அரிக்க வதனம் கருக்க
>>>>> வெப்பத் தாக்கம் மிகவாட்டும் ...!!

தோலில் நமைக்க புழுக்கம் வதைக்க
>>>>> காயம் காயப் பட்டேபோகும் !
தோன்றும் புதிதாய் வேனல் கட்டி
>>>>> படையும் சிரங்கும் உடன்சேரும் ...!!

காற்றும் தகிக்க அனலும் அடிக்க
>>>>> வீட்டிற் குள்ளும் சூடிறங்கும் !
கதிரும் கொதிக்க தாரும் உருக
>>>>> வீதியில் நடக்கையில் நெருப்பாய்சுடும் ...!!

சித்திரை வெயில் உச்சி பிளந்து
>>>>> உடலுள் ஊடுரு விச்செல்லும் !
சிரமப் படுத்தும் கொடூர வெயிலை
>>>>> வெட்டிச் சாய்க்க மனம்துடிக்கும் ...!!

உஷ்ண மிகுதியால் வரும் நோய்கள்
>>>>> மனிதனை மிகவும் வறுத்தெடுக்கும் !
உடல்நலம் பேணத் தவறி விட்டால்
>>>>> உள்ளம் கூட ஆட்டிப்படைக்கும் ...!!

பசியும் மறந்து தூக்கம் வெறுத்து
>>>>> படுத்துக் கிடப்பதும் சுமையாகும் !
பனிக்கட்டி மழையில் நனைந்து களிக்க
>>>>> பாழும் மனமும் மிகஏங்கும் ...!!

கோடை மழையும் பொழிந்து விட்டால்
>>>>> இதயம் உவகையில் குளிர்ந்துவிடும் !
கோடி இன்பம் கிட்டினாற் போல்
>>>>> இருகரம் கூப்பி நன்றிசொல்லும் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (23-Apr-14, 7:51 am)
பார்வை : 134

மேலே