மகத்தான மழைநீரை மறவாமல் சேகரிப்போம்

மாலை நேர வேளையிலே
மயில் அகவும் சோலையிலே
தோகை மயில் விரித்தாட
மாஞ்சோலை மதிமயங்க

வறட்சியில் வறண்ட பூமி
வருணனிடம் வரம் கேட்க
வருணனும் வரம்தரவே
வருகை தந்தன மேகங்கள்

கார்மேகம் கூடி நிற்க
கருக்கு ஓலை சரசரக்க
காற்றிலாடி கையசைக்க
பார்திருந்த பனை மரங்கள்

தழுவி நின்ற மேகங்களை
தரை இறங்க தலையசைக்க
மேகங்கள் மோகம் கொண்டு
மோதிக்கொண்டு இடி இடிக்க

கொக்கு நாரை கூடு திரும்ப
காகம் கரைந்து கலைத்து நிற்க
சிட்டுக் குருவி கட்டிய கூடு
சிலுசிலுத்து காற்றிலாட

ஈரக் காற்று இதயம் வருட
மண்வாசனை மனதைப் பறிக்க
மண்ணிலே வெள்ளி முத்தாய்
துள்ளி விழும் தூறல் மழை

சடசடவென விழுந்த சாரல்கள்
படபடவென பட்டுத்தெறிக்க
சட்டென மழையாய் மாறி
சார சராய் தோரணம் கட்ட

சங்கு முழக்கமிட
சரவெடியாய் இடி இடிக்க
பட படக்கும் இடியோடு
இலவசமாய் வானவேடிக்கை

தவளைகள் கவலைகள் மறந்து
பண்பாடி பாட்டிசைக்க
மறைந்து வாழ்ந்த மண் புழுக்கள்
மறுமழை வேண்டி வீதி உலா

மறு மழையும் தெளித்டவே
புல்வெளிகள் துளிர்த்திடுமே!
தூங்கிய விதை மணிகள்
துயில் துறந்து துளிர்த்திடுமே !

பசியிலே வாடிய உழவர்
குசியிலே துள்ளிக் குதிக்க
மறுதினமே மாடு பூட்டி
மனம் குளிர விதை விதைப்பார்

அழகிய தருணங்கள்
அடிக்கடி நிகழ்ந்திடவே
மகத்தான மழைநீரை
மறவாமல் சேகரிப்போம்!

கவிஞர்- (அ.சு ) அழகர்சாமி சுப்ரமணியன்

எழுதியவர் : (அ.சு ) அழகர்சாமி சுப்ரமணிய (23-Apr-14, 12:44 pm)
பார்வை : 878

மேலே