அகன் அவர்கள் தேர்ந்தெடுத்த -சிறப்புக் கவிதை 2 -புலமி அம்பிகா -விமர்சனம்
ஒரு தேவதை தேடும் மிருகத்தைப் பற்றியது.... இந்த கவிதை....
அல்லது ஒரு தேடல், தேடித் தொலைய திட்டமிட்டு தேவதையாவது இந்த கவிதை.....
அல்லது ஒரு மிருகம் தன்னை தேவதையாக்க அழுது அடம் பிடிப்பது இந்த கவிதை....
கவிஞர் புலமி....யின் பார்வையில் வெடித்து சிதறிய இந்த கவிதை எனது பார்வையில் சிதறி வெடிக்கிறது.....
இது தீண்டிடும் துயரம்..... தேடிய பின்னும் இனித்திடும் துயரம்.. துயரமாகினும் ஆழ் மனம் வேண்டிடும் துயரம்.....
கோடை மழைக்குள் கறுப்புத் துயரமாய் ஒரு குடை, நிழல் தேடித் திரிகிறது....வெற்றி தோல்வி வேண்டாத வினோத சிரிப்பில் விழி நீர் துளிர்ப்பதை காகிதத்தில் கவிதையாக்கி, காணாமலே போகிறது ஒரு பெண்ணின் மீளவே முடியாத காதல்..... அழகாகவே சொல்கிறார் கவிஞர்.... அழ வைத்து விடுவது போல....
அவனை ஆதியாக்கி, பாதியாக்கி, விடியாச் சூரியனை மனதுக்குள் சுமந்து சுமந்தே மழை பொழியும் விழிகளை வரமாய் வாங்கி வந்த அந்த பெண் காதலையே காதலிக்கிறாள் என்பதாக ஒரு மாய வலையை ஒரு இருள் சூழ பின்னிக் கொண்டே நடக்கிறாள்..... அவள் பாதையெங்கும்... அவன் பாதங்களாய் இருப்பதுதான் நமது பார்வை....அந்த கவிதையில்...
கவிஞர் ஒரு இடத்தில் மூளை சுருக்கி யோசிக்க வைக்கிறார்..... 'காதலை பறித்துக் கொண்டு விலகிக் கொண்டவன், கல்யாணம் செய்து கொண்டான்..... என்று.....'- கல்யாணம் என்பது பொதுவாக சாப்பாடும், தாலியும் முன் நிற்கும் ஒரு நிகழ்வாக எனக்கு கற்பிக்கப் பட்டிருக்கிறது..... இங்கே கல்யாணம் என்பது வேறு.... அது காதலின் உச்சம்.. கவிதையின் மிச்சம் போல... அங்கே அவனும் அவளும் மட்டும் தீரா சண்டையுடனும், தீரா தேகத்துடனும், தீரா பார்வையுடனும், தீரா சிந்தனையுடனும்.... அவன் அவளாக மாறி, அவள் அவனாக மாறி, உயிர் மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் நடந்து விட்ட ஒரு ஜென்ம பந்தமாக பார்க்கப் படுகிறது.....
காரணமின்றி அவன் கதை சொல்வான்.. காரணம் இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு அவள் கதை கேட்பாள்..... அது பனிமூட்டங்களின் ஈரக் கசிவு....
அவளின் வானம், மூச்சு திணறுவதாக ஒரு மாயத் தோற்றத்தை சூடிக் கொள்ளும் தேவதைகளின் தலைவியாக அவள் இருக்கிறாள்..... அவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அவனின் நெடுந்தூர இடைவெளியின், கண்ணீர் கடலின் உப்புக் கனவு....
தன் இதயம் பிழிந்தவனை, இதயமற்றவன் என்று சொல்லி, தன்னை ஒரு பேயாக மாற்ற முயற்சிக்கிறாள்....அவள் பேயாக இருப்பினும் அவன் அவளை தேவதை என்றே, கத்தி சொல்லி, இடைவெளி நிரப்பும் புன்னகையை விதைப்பவனாக இருப்பதையே அவளும் விரும்புவதாக கவிஞர் சொல்வதாக நான் பார்க்கிறேன்.........
எதையும் ரசிப்பவனாகவே அவன் இருக்கிறான்....அவளும் புரிந்தவளாக காட்டிக் கொண்டு புரியாதவளாக மாற்றுருவம் எடுத்து,இரவை கொத்தி கொத்தி ஓட்டையிடும் விண்மீனின் விரல்களை சூடிக் கொண்டே சிரிக்கிறாள்....அதையும் அவன் ரசித்து, மீண்டும் தன் போதியை அவள் மீதே உதிர்க்கிறான்..... அவள் உதிர்ந்தே போகிறாள் என்பதே அவனின் விலகி செல்வதற்கான பாதையாகத் தெரிகிறது....
திட்டுகிறாள்...... சிணுங்குகிறாள்..... அழுகிறாள்.. அணைத்துக் கொள்கிறாள்....அங்கே காதல், ஒரு வித மனநிலை பிறழ்ந்த குழந்தையை கிள்ளி அழ வைத்து விட்டு, தூக்கி தோளிலும் போட்டுக் கொண்டு தாளாட்டுவதாகவே, இந்த கவிதை எனக்கு சொல்கிறது.....
கடைசியில் அவனை கானல் நீராக்கி விட்டு கடந்து செல்கிறாள், தீரா மழையை சுமந்து கொண்டு....
அவன்.... அங்கு இல்லாமல் போகிறான்..... அங்கு தான் இல்லையே தவிர அவள் எங்கும் அவனாக மாறிப் போன கதையை காலம் கவிதையாக படித்துக் கொண்டிருக்கிறது.....
காதல் சுகம் தான்..... அங்கு இணைவது, பிரிவது ஒன்றுமில்லை....அது உணர்வது....
வாழ்த்துக்கள் புலமி...
கவிஜி