சிறப்புக்கவிதை 10 - நட்சத்திரமாய் நீ - ஈஸ்வரன் ராஜாமணி

காதல் ...இந்தக் காதலை நீராக்கி , நீர்கொண்ட தேகத்தின் வழியே நிரம்பிக் கிடக்கும் உயிராக்கி அதன் பின் உடலாக்கி , உள்ளமாக்கிச் ,செதுக்கிச் சிலையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர் .ஈஸ்வரன் ராஜாமணி ...

தென்றல் தீண்டாத காதல் , திங்கள் காணாத காதல் , திரைகள் ஓயாத கடலின் உள்ளோட்டச் சிதறல்களாய் உள்ளோடு சிதறுகின்ற காதல் ...இப்படிக் காதலை இன்னமும் சொல்லமுடியாத உணர்வுகளோடு ஊற்றிக் கொடுத்திருக்கிறார் ஈஸ்வரன் , கவிதையென்னும் கோப்பைக்குள்....

ஈரமில்லா நிலத்தில் விழும் ஒரு துளிச் சிதறல் உயிராகுதல் போல , நெடுந்தூரக் கோடை வசமானது நிழல் கிடைக்கச் சொர்க்கம் கண்டது போல ,அவரது காதலி வானவில் சேலையுடுத்தி வருகின்றாள் , தாளாது களைத்துக் கொண்டிருக்கும் தாகங்களுக்குத் தரிசனமாய் . இவ்வண்ணம் கவிஞரின் கைவண்ணம் கீழ்க்கண்ட வரிகளாய் .....

"கோடிப் பறவைகள் - நிழல்
தேடிக்களைத்து பின்
வாடி வடித்த நீர்
வழியெங்கும் நிறைக்கும்,
வாட்டும் வெயில் பருவத்தில்,
வந்தெதிர் நிற்கிறாய்,
வானவில் சேலையுடுத்தி .."

குளிர் பொழியும் அவள் விழிகளிலே மேகங்கள் கரைந்திருக்கலாம் என்று ஆகாயம் வெறிக்கின்றது இந்த விமர்சனம் ..அந்தோ பரிதாபமாய் கடும்போட்டி அவ்விழிகளின் இமையோரம்...மின்னலையும் , இடியையும் , மழையையும் வேதனைக்குட்படுத்தியிருப்பதில், சிலிர்க்கும் ரோமக்கால்களுக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுக்கிறது பெண்ணவளின் விழிமோட்சம் ....

நிலவினைப் புறம்தள்ளிப் போவதில்லை காதல் உலகம் ... கூந்தலைக் கூரையாக்கி , நிலவினைக் குடிவைக்கும் உலகமொன்றில் சுழல்வதாக இருவருக்குமான காதலின் ஏகாந்தம் உணர்த்துகின்றார் ஈஸ்வரன் ...

"அமாவாசைகள் தோற்ற ஓர்
அடர்ந்த ராப்பொழுதொத்த,
இருள் கூடிக்கூச்சலிடும்
இதயத்தின் ஆழ்குகைக்குள் - என்
எழுஜென்ம இன்பம் பிசைந்து
சாறெடுத்து, சாந்தாக்கி
எழுப்பிய நினைவுப்பேழையுள்,
அடைத்து வைக்கிறேன்,
உன் சிரிப்பின் பொழுதுகளை. "

இதுவல்லவா காதலின் கோலம்...எழுஜென்ம இன்பம் பிசைந்து கொடுத்திருக்கும் வரிக் கவளங்களுக்குக் காத்திருந்த கவிதையொன்று பசியாறிப் போயிருக்க வேண்டும் எழுஜென்மத்துக்கும் ....

ஒரு ஜென்மம் போதாது காதலின் ஆழத்தினின்று மீளவும் ..அதே ஒரு ஜென்மத்தில் பல ஜென்மங்கள் கண்டுவிடத் துடிக்கின்றது இந்தக் காதல்..காதலை வசப்படுத்தும் காட்சிகள் கவிதையின் திருப்பங்கள் தோறும் ....

இந்தக் காதல் வரையறையில் அடங்கிப் போவதில்லை.சிலருக்கு அது கைக்கு கிடைத்த பூவாய் , சிலருக்குத் தேனாய் , சிலருக்கு கவிதையாய் , சிலருக்கு காற்றாய்க் காணத்துடிக்கும் ஒன்றாகிவிடுகின்றது..
எல்லாக் காதல்களும் அர்த்தப்பட்டு போவதில்லை..தேடாத காதலும் தேடுகின்ற காதலும் நேராக எதிர்நிற்கும் போது ஒருவருக்கான சோலையில் மலர்கள் உதிரலாம் அல்லது இருவருக்குமான சோலையில் மொட்டுகள் அரும்பலாம் ...இந்த வாழ்க்கையில் அவரவர்க்கான காதலை அவ்வளவு எளிதில் கண்டறிந்துவிட முடிவதில்லை...சில வேளைகளில் கண்டறிந்த போது அது எங்கேயோ வாழ்க்கைப்பட்டுவிடுகின்றது..ஒன்றல்ல ஒருவருக்கான காதல் வலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் ..சொல்லாத காதல்களும் உண்டு ...சொல்லி வாழாத காதல்களும் உண்டு..
இக்கவிதையில்,

"என்னுயிர் குடிலின் இண்டுகளிலும்,
நிறைந்து, வியாபித்து, விரிந்து,
இறந்த இதயவிளக்குத் திரிதூண்டி,
காதலூற்றி, ஒளியேற்றும்,
நட்சத்திரமாய் நீ. "

காதலி மீதான இரண்டாம் காதலின் ஒளியாகவும் இருக்கலாம் அது இறந்தபின் வாழும் காதலாகவும் இருக்கலாம்... நினைவுப்பேழையுள் காதலியின் , மெருகு குறையாத சிரிப்பின் பொழுதுகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் இதயத்தின் மீட்டல் "நட்சத்திரமாய் நீ "

எழுதியவர் : புலமி (25-Apr-14, 2:18 am)
பார்வை : 130

மேலே