தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதை சாலையோரத்தில் நாங்கள்-அவேளாங்கண்ணி

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதை.
சாலையோரத்தில் நாங்கள்-அ.வேளாங்கண்ணி
--------- ----------------- --------
“கவிதைக் கடைவீதியில்”,உலாப் போகும் நேரத்தில் வண்ணங்களால் மின்னும் வார்த்தைகளைக் கோர்த்த சரங்களும்,கண்ணைக் கூசச் செய்யும் பெருவெளிச்சம் கொண்ட விளக்குகளும்,புரியாத சித்திரங்களும்,புரிந்தால் அருவெறுப்பாக இருக்கும் ஓவியங்களும்,இரைந்து கிடக்கத்தான் செய்கின்றன.

இந்தக் களேபரங்களுக்கிடையில்,ஏதோவொரு மூலையில் எரிந்து கொண்டிருக்கும் சிறுவிளக்கோ, ஒரு மெழுகுவர்த்தியோ,அது கொண்ட அமைதியால், நமது கவனத்தை சட்டென்று கவர்ந்து விடுவதுண்டு.

கவிஞர் அ.வேளாங்கண்ணியின் “சாலையோரத்தில் நாங்கள்” என்ற கவிதையும் அப்படித்தான்.

இக்கவிதையின் தலைப்பே, மேல்தட்டுவர்க்கமும், நடுத்தர வர்க்கமும் எப்போதும் தனது கவனத்தில் கொள்ளாத எளிய மனிதர்களைப் பற்றிப் பேசப் போவதாய் நமக்கு அறிவிக்கிறது.

சாலையோரத்தில் இருப்பவர்களாக நம்மை எப்போதாவது கற்பிதம் செய்து கொண்டிருக்கிறோமா..? நமக்கெல்லாம் சாலை என்பது கடந்து செல்கின்ற ஒரு இடம் மட்டுமே. அதனையும் வேகமாகக் கடந்து செல்வதில் நமக்குள் போட்டிகளே உண்டு.இந்த வேகம், சாலையோரங்களில் உள்ளவற்றை மறைத்து விடுகிறது.அல்லது காண மறுத்து விடுகிறது.

இந்த மறைப்பிலும்,மறுத்தலிலும் “மறைந்துவிடுபவை” எவையெல்லாம் என்று பார்த்தால்,உயிர்ப்புள்ள மனிதர்களின் உருவமும், அவர்களிடையே அன்றாடமும் நிகழ்ந்து வரும் வாழ்க்கையும், அதிலுள்ள ஆயிரம் சிக்கல்களும், அதனைக் கடப்பதில் உள்ள முயற்சிகளும், வெற்றிகளும், பெரும்பான்மையான தோல்விகளும்.., என பெரும் பட்டியலே உண்டு.இந்தப் பட்டியலில் நமது மனிதாபிமானத்தையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்..!

நமக்கு “சாலையோரமாக” என்று தோன்றுகின்ற வாழ்க்கை, அவர்களுக்கு “சாக்கடையோரமாக..” என்பதாகவும் இருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்.!

இந்தப் பின்னனியைக் கவனப்படுத்துவதாக உள்ள இக்கவிதையில்,சாலையோரத்தில் வசிப்பவர்கள், சொந்தங்கள் இல்லாத அநாதைகளாக இருக்கும் அவர்கள், தண்ணீரின்றி துடிக்கும் மீன்களாகத் தெரிகிறார்கள்.

தங்களின் வியர்வையே தங்களை உண்ணும் விதமாய்,தாங்கள் உழைப்பதில் குறையில்லை.. ஆனால் அதற்காகப் பெறுகின்ற வருவாய் என்பதோ பெரும் குறை.

தற்போது பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்காய் சுரண்டப்படுவதை நம்மில் பலர் நேரில் கண்டிருக்கலாம்.ஏறக்குறைய அறிவிக்கப்படாத கொத்தடிமைகளாய் அவர்களை நடத்திக் கொண்டிருக்கும் "நல்லவர்கள்", நம்நாட்டிலும் நிறையப் பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்..? என்றும் நினைவூட்டிப் போகிறது கவிஞரின் வரிகள்.


அன்றாடமும் குளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தலைமுறைகளாய் போதிக்கப்பட்டவர்கள் தான் நாம். வசதியிருப்பவனுக்கு அது சரி. சாக்கடையோடுகின்ற சாலையோரத்தில் வசிப்பவன் கதி..?

இவர்களின் உழைப்பிற்கேற்ற கூலியின்றி, உணவுக்காகவேனும் தொடர்ந்து உழைக்கின்ற கொடுமை கண்டு, “மேகப் பெண்ணவள் ஒரு தாயைப் போல-மனம் நொந்து அழுதால், அன்றைக்குத்தான் குளியல்..” என்றும், “அதுவே எமக்கு வெளிச்ச விடியல்..”என்றும் சொல்கிறார் கவிஞர்.

குளியல்..வெளிச்ச விடியல் என்ற வார்த்தைகள் வெறும் சந்தத்திற்காகக் கோர்க்கப்பட்டதா..?.., அல்லவே அல்ல, நாம் காலையில்,-அல்லது விடிந்த பின் என்று வைத்துக்கொள்ளலாம்- குளிப்பது என்பதுதான் வழக்கமாக இருக்கிறது. அதனால்தான் அன்றே குளியல்,வெளிச்ச விடியல் என்ற வரிகளை கவிஞர் சமைத்திருக்கலாம் என்பதும் வெளிச்சப்படுகிறது.

ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும் சாமானியனுக்கு, அளிக்கப்பட்ட உரிமைகளாக, குடும்ப அட்டையும்,வாக்களிக்கும் உரிமையும் இருக்கும் நிலையில்,இவை எதுவுமின்றி அரசால்,சக மனிதர்களால் ஒதுக்கப்பட்டோராய்.. சாலையோரம் ஒதுக்கப் பட்ட நிலையில், வாழுகின்ற நிலை இவர்களுக்கு ஏன் வந்தது..?

சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருக்கும் யாரோ ஒருவர் தமது உறவினர் என்றோ,நண்பர் என்றோ.. சொல்லிக் கொள்வதில் பெருமையுற்றுப் பழகிப் போன நமக்கு,இவர்களை தமது சொந்த பந்தம் என்றோ,நமக்கு எப்போதும் தேவைப்படுபவர் என்றோ,நாம் பெருமை கொள்ள இவர்களிடத்தில் “ஏதும் இல்லை..” அப்படியானால்,அவர்கள் ஏதிலிகளாக சாலையோரத்திற்குத்தானே போக வேண்டும்,வாழவேண்டும்.? சொத்துக்களை கையகப் படுத்தியபின், விரட்டப்படும் முதியோர்களான பெற்றோர்களைப் போல..!

“எல்லோரையும் நல்லா வாழ வைக்கும் ஊரு..! ஆனால்,எங்களுக்கோ வாழ்க்கை பெரும் போரு.!”

உயிர்த்தலுக்கும்,பிழைத்தலுக்கும் இடையே மாட்டிக்கொண்டு நாட்களை நகர்த்திச் செல்லும் அவலநிலை.., உண்பதற்காகவே வாழ்ந்து பழகிய மனிதர்கள் நடுவே,வாழ்வதற்காக உண்ணப் பாடுபடுகின்ற நிலை என்பது பெரும் போர் தானே..?

கவர்ச்சியான வார்த்தைகள் இல்லை.கட்டுக் கோப்பான வரிகள் இல்லை.நினைத்ததை எளிமையாய்ச் சொல்லிப் போகும் இந்தக் கவிதையில் ஊடாடி நிற்கும் வாழ்வின் இன்னொரு கோரமான முகத்தை,கருவாக வெளிக்காட்டிப் போகும் தன்மையால்,அமைதியாகச் சுடர்விடும் மெழுகுவர்த்தியைப் போல இந்தக் கவிதை கவனம் பெறுகிறது.

கவிஞர் வேளாங்கண்ணியின் கவிதையை வாசித்த போது,உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது என்னவெனில், வீட்டைவிட்டு வெளியேறும் "சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும்,போதைக்கு அடிமையாவதும்,சமூக விரோதிகளுடன் சேர்ந்து மாறுபட்ட குணமடையவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.குழந்தைகளின் உரிமைகள் பல்வேறு வகையிலும் மறுக்கப்படுகின்றன. இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றன. சாலையோர பெண்குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப் படுகின்றனர்.

இந்த நிலையை மாற்றும் வகையில், சாலையோரத்தில் ஆதரவற்ற குழந்தைகளைக் கண்டால்,1098-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்,குழந்தை நலத் தொண்டு நிறுவனங்களும் சாலையோர சிறுவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்ட ஒரு சட்டத்தின்படி,
“சாலையோர சிறுவர்கள்,இளைஞர் நீதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்-2000.திருத்தப்பட்ட சட்டம்.2006 பிரிவு 2.டி. யின் படி,பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்”

பாதுகாக்கப் பட்டுவிட்டதா..? நாமும் அந்தப் பணியில் எப்போதாவது நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறோமா..? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்வோம்..!

இனி நாம் சாலையோரங்களையும் கவனிப்போம். இயன்ற உதவிகளையும் செய்வோம்..!


அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (25-Apr-14, 12:13 pm)
பார்வை : 431

சிறந்த கட்டுரைகள்

மேலே