தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதை- மொழிந்திடுவாய் மனமே-கவிஞர்வெகண்ணன்

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதை-
மொழிந்திடுவாய் மனமே-கவிஞர்.வெ.கண்ணன்
கவிதை எண்-191074
----------------------------

காதல்..!

எத்தனை முறை சொன்னாலும் இனிக்கின்ற வார்த்தை.!

எந்தக் கதையாக இருந்தாலும் அதில், இது மட்டும் ஊடாடிநின்றுவிட்டால் அது வாசிப்பிற்கு ஊக்க மருந்து.!

நமக்குள்ளிருக்கும் அழகையெல்லாம் ஊருக்கும் வெளிச்சம்போடும் பெருவிளக்கு..!

ஏழுநாளில் சிவப்பழகைத் தரும் விளம்பரத்தை மிஞ்சி,மூன்றுநாளில் முகவசீகரத்தைத் தரும் மந்திரம்..!

கொலையாளியைக்கூட,ஓரிரவில் நல்லவனாய் மாற்றிவிடுகின்ற அருமருந்து..!

சொல்லப்போனால் பிரதமர் வேட்பாளராய் நின்று,பிரதமராகவே ஆகிவிட்ட..மகிழ்ச்சியைத் தருவது இந்தக் காதல்..!

வேறு எந்த உணர்ச்சியையும் போலன்றி இருக்கும் இந்தக் காதல் மட்டும் இன்னும் எத்தனையோ அதிசயங்களை நமக்குள் தொடர்கதையாக நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கிறது.

அதனால்தான் காதலித்தவர்கள் எல்லோரும் கவிதை எழுதியிருக்கிறார்களோ இல்லையோ.. கவிதை எழுதுபவர்கள் எல்லோருமே- ஒரு தலையோ,இருதலையோ- காதலித்தவர்களாயிருக்கிறார்கள்.

“நான் நானாயிருந்தேன்
நீ நீயாய் வந்தாய்
நடுவில் காதல் வந்தது
நானும் நீயும்
நாமாகிப் போனோம்..!”-- இன்போ அம்பிகா-
என்று,காதலில் சாதித்தவர்கள் வெற்றியைக் கொண்டாடுவதும்,

“நீயும் நானும்
சொல்லத் தயங்கிய சொல் ஒன்று
நம்மைச் சுற்றி வருகிறது
இத்தனை காலத்திற்குப் பிறகும்”-- ரமேஷ் ஆலம் -
என்று தோல்வியில் மறுகுவதுமாய்..இந்தக் காதல்,மனிதனைப் பாடாய்ப் படுத்திவிடுகிறது.

காதலில் வெற்றியோ தோல்வியோ... அது கவிதைக்கு அள்ளியளித்துள்ள விஷயதானம் இருக்கிறதே,அதனை ஒப்பிடும்போது இந்தப் பிரபஞ்சம் அதனிலும் சிறிதே.!

இப்படிப்பட்ட காதலிலிருந்து,ஒரு அனுபவத்தை எடுத்து, மொழிந்திடுவாய் மனமே என நமக்குப் படைக்கிறார் கவிஞர்.வெ.கண்ணன்.

--“மொழிகள் அர்த்தமற்றுப் போய்விடுகின்ற நிலையினில் மௌனம் பொருள்சுமந்து அழகாகின்றது..” நிழல்கள் தீண்டிக்கொள்ளா நடை பயணத்தில் விழிகள் கைகோர்த்து நடக்கின்றன”--

தங்களின் காதல் துணை இதுதான் என்று முடிவு செய்துகொண்டுவிட்ட நிலையில்,காதலை முதலில் யார் சொல்வது..? என்று ஒரு சிக்கலான நிலை வந்தே தீரும்.அதுவொரு சுகமான அவஸ்தை.!

அந்த நிலையில் இருவரும் சேர்ந்தே இருப்பார்கள், சேர்ந்தே நடப்பார்கள்..இதோ சொல்லிவிடப் போகிறேன்..என்று இருவருமேதான் நினைப்பார்கள்.ஆனாலும் சொல்வதற்குள்ள தயக்கமும்,கால்களை வந்து மோதி,மோதித் திரும்பிச் செல்லும் கடற்கரை அலைகளும் ஒன்றாய் இருக்கும்.மனம் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டேயிருக்கும்..! என்பதைக் காட்டும் சித்திரமாக துவங்குகின்றது இக்கவிதை.

யாரோ ஒருவர் இப்போது காதலை சொல்லத்தான் போகிறார் என்று,மற்றவர் வாய்திறக்கும் போதெல்லாம் இருக்கின்ற எதிர்பார்ப்பும் அது கொடுக்கும் ஏமாற்றமுமாய் கழிகின்றது காலம்..!
எப்படியெனில்..--”பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்,காதல் நீக்கப்பட்டது பட்டவர்த்தனமாய்த் தெரிகிறது..!”--

கவிதைச் சூழலை அழகாய்க் காட்சிப் படுத்தும் விதத்தில் இருக்கிறது படைப்பின் வெற்றிக்கான சூட்சுமம்.

காதலில் சிக்கியவர்கள் படும்பாடு இதோடு முடிந்துவிடுவதில்லை என மேலும் பல சூழல்களை விளக்குகிறார் கவிஞர்.வெ.கண்ணன். அது இப்படியாகத் தொடர்கிறது.

--“சந்திக்க மறுக்கும்
சந்தர்ப்பங்கள்
சொல்லிவிடுகின்றன
சிந்தித்து முடிவெடுத்த
சிந்தனைக்குப் பின்னால்
காதல் பயம்
ஒளிந்துள்ள சூட்சுமம்..!”--

--“எதுவும் இல்லை
என்று சொல்வதில்
எல்லாம் அடங்கிவிடுகின்றது.
எதிலோ
மனம் இருப்பதனை
விடைபெறாத தருணம்
வெளிப்படையாய்க் காட்டுகிறது..” -- என்பதைப் போன்ற வரிகள்,உண்மையில் காதலித்தவர்களின் நெருக்கமான அனுபவத்தோடு பொருந்திப் போகின்ற நெருக்கத்தை இக் கவிதையும் நமக்குத் தருகிறது. அதனாலேயே இக்கவிதை சிறப்பானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

காதலித்தவர்கள் தங்கள் நினைவை மீட்டுக் கொள்ளவும்,காதலிப்பவர்கள் தங்கள் நிலையை சரிபார்த்துக் கொள்ளவும்,பயணப்படவேண்டிய ஒரு கவிதைப் பல்லக்காய் இருக்கின்ற இதனில் நீங்களும் போய் வரலாமே ஒரு சுற்று.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (24-Apr-14, 8:10 pm)
பார்வை : 226

சிறந்த கட்டுரைகள்

மேலே