கண்ணீர் தேசம்

கண்ணீர் தேசம்:

வான் மழையும் வர அஞ்சும் ராவண தேசம்
கண்ணீரில் கடல் நனையும் கண்ணீர் தேசம்

உயிருக்காக அழவில்லை நாங்கள்
உயிர் மண்ணுக்காக அழுகிறோம்!
உரிமைகளை இழந்தாலும்
உணர்வுகளை இழப்பானோம்!

சொத்து சுகம் ஏதுமில்லை
சொந்த பந்தம் யாரும் இல்லை!
சொந்த மண்ணில் வாழ்வதற்கே
எங்களுக்கு உரிமை இல்லை!

தனி நாடும் தேவையில்லை!
தங்கம் மீதும் ஆசை இல்லை!
தன்மானம் மட்டும் போதும்
தனியாகவே நாங்கள் வாழ்வோம்!

கண் முன்னே கற்பிழக்கிறாள்
கன்னி அவள் தமிழச்சி!
காமகனை என் செய்யென்?
கண்ணீருடன் கட்டுண்டேன்!

ஈழத்து பறை சாற்ற
இரக்கத்தோடு யாரும் இல்லையா?
இறைவனுக்கும் இங்கு வர
இயன்றதோர் வழி இல்லையா?

குண்டுகள் ஒவ்வொன்றும் குருதியில் மிதக்கின்றன!
குற்றங்கள் செய்யாமலே குரூரம் இழைக்கின்றன!

அகதிகளாக அடைக்கலம் தேடுகிறோம்!
அனாதைகள் போலே அன்புக்கு ஏங்குகிறோம்!
உலகத்து நாடுகள் கண்ணீருடன் பார்க்கிறது!
உறவான நாடோ கைகட்டி நிற்கிறது!
வான் பரந்த புறாக்கூட்டமும்
கழுகாக மாறியது!
வயல் வெளிகள் எல்லாம்
பிண விளைச்சலில் ஊறியது!

புத்தன் வாழ்ந்த பூமியிலே
புண்ணியம் செத்துப் போனது!
புன்னகை சிந்தும் பூக்களும்
கண்ணீர் வாசம் சேர்க்குது!

மண்புழுக்கள் போலவே
மண்ணுக்குள்ளே ஒளிகிறோம்!
மரண பீதி அல்லவே
மானம் காக்க தானவே!

உண்டு வாழ்ந்த காலம் போய்
குண்டு பட்டு கால்கள் போய்
ஊனமாக நிற்கிறோம்
உதவி செய்ய யாருமில்லை!

வாழ வழிகள் இல்லாமல்
வாழ்க்கை ஒன்று வாழ்கிறோம்!
வார்த்தைகளில் சொல்ல இயலாத
வலியில் நாங்கள் சாகிறோம்!

கேள்விக்குறியான வாழ்க்கையில்
கேட்பாரற்று கிடக்கிறோம்!

தண்ணீர் சூழ்ந்த தேசமிது!
இன்று கண்ணீர் தேங்கும் தேசமானது!

தீர்மானங்கள் தேவையில்லை
அவமானங்கள் அழிந்தால் போதும்!
சுயமரியாதை ஒன்று போதும்!
சுதந்திரமே எங்கள் தாகம்!

கண்ணீர் தேசமென்று கண்கலங்கவும் வேண்டாம்!
கருணைப் பார்வை காட்டவும் வேண்டாம்!
காலத்தின் மாற்றத்திலே
எங்கள் காயங்களும் மாறிடுமே!!
ஈழத்தின் மறுவிடியல்
புதுவீரத்துடன் பிறந்திடுமே!!

எழுதியவர் : venkadeshkumar (25-Apr-14, 6:45 am)
Tanglish : kanneer dhesam
பார்வை : 318

மேலே