தோற்ற மாயைகள்----அஹமது அலி----

காண்பதும் கண் தான்
காட்சியும் முன் தான்
ஆயினும் மாயைகள்.....

[0]-----

கண்ணுக்குள் பொருட்கள்
வெளியே பிம்பங்கள்
ஒளியில் காட்சிகள்
என்ன நிலைகள்...?

[0]-----

பூமிப்புள்ளி
சமுத்திரச் சொட்டு
ஆகாயக் கூரை
நூலாம்படை மேகம்
மழையொழுகள்
விழிகளில் விழுகல்
விலகல்.....

[0]----

சல்லடை வானம்
மின்னல் தோரணம்
ஒலியுருளுமிடி
ஓடி ஒளியும் நிலா
காணத் துடிக்கும் விருப்பு
காட்சிகள் மறுப்பு.......

[0]----

நண்பகல் சாலை நதி
நடுநிசி சிந்தும் அமைதி
வெண்பனி குளிரும் விதி
வெஞ்சுடர் உமிழும் கொதி
காணப் பிரியம்
இல்லை உபயம்....

[0]----

மின்சார ஓட்டம்
மின்மினிக் கூட்டம்
மிதவை தோட்டம்
மேகார ஆட்டம்
ரசிக்க ரசிப்பு
ரசனை தவிப்பு.....

[0]-----

மோகிக்கும் ஆவல்களை
தகிக்கும் நாவல்களாய்
மர்மங்கள் மருள
தொடர்கிறது
தோற்ற மாயைகள்....

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (26-Apr-14, 8:06 am)
பார்வை : 224

மேலே