பொம்முவின் தேடல் - 1

"ஹேப்பி பர்த்டே " என்று எல்லாரும் பாட ஆரம்பித்தனர் . வீடே தோரணங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது . ஏனென்றால் இன்று அரவிந்தின் பிறந்தநாள் . 13 வயது தொடங்கும் அரவிந்தின் பெற்றோர் இம்முறை அவன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர் .
அரவிந்த் கேக்கை வெட்டி தன் பெற்றோருக்கு மகிழ்ச்சியுடன் ஊட்டினான். ஆனால் சஞ்சய் மட்டும் முகத்தில் வெறுப்போடு நின்றிருந்தான் . அவன் தான் அரவிந்தின் ஒரே தம்பி, வயது 10. சஞ்சய்க்கும் அரவிந்துக்கும் எப்போதும் போட்டியும் சண்டையும் தான். அரவிந்த் சஞ்சையை பார்த்து பல்லிளித்தான். சஞ்சய் முறைத்தபடி தன் அண்ணனை மிரட்டினான்.
பிறந்த நாளுக்கு வந்திருந்த விருந்தினர்கள் அரவிந்துக்கு பரிசை குடுத்து விட்டு செல்ல ஆரம்பித்தனர். அன்று அரவிந்த் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான். அவன் தன் பிறந்தநாள் பரிசுகளை பிரித்துப் பார்க்கும் நேரம் வந்தது.
நேரம் 9.30, அரவிந்த் உணவு உண்டப்பின் தன் அறைக்கு சென்றான். தன் படுக்கை நிறைய பரிசுகள் காத்திருப்பதை கண்டு புன்னகைத்தான். படுக்கை மேல் அமர்ந்து தன் பரிசுகளை பிரித்துப் பார்க்க ஆரம்பித்தான் அரவிந்த். விடியோ கேம்ஸ் , புத்தகங்கள் , அழகு கடிகாரம் என்று ஒவ்வொரு பரிசுகளையும் வியப்புடன் கண்டான். எல்லா பரிசை பிரித்து பார்த்து முடித்தான் அரவிந்த்.
குடுகுடுவென அவன் அறைக்கு ஓடிவந்த சஞ்சய் "நான் வர்றதுக்குள்ள எல்லாப் பரிசையும் பிரிச்சிடியா?" என்று கோவது கேட்டான்.
"இதெல்லாம் என்னோட பரிசு கண்ணா ! உனக்கு எதுக்கு காட்டணும்?" - அரவிந்த்
"ரொம்ப பண்ணிக்காத ! எனக்கும் அடுத்த வர்ஷம் பிறந்த நாள் வரும். அப்போ பாத்துக்கிறேன்! கீழே ஒரு பரிசு கிடக்கு பாரு! அதையும் நீயே பிரிச்சிடு !" என்று கோவத்துடன் சஞ்சய் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அரவிந்த் தன் படுக்கை கிழே குனிந்து பார்த்தான். அவன் பார்த்த மற்ற பரிசுகளை விட கொஞ்சம பெரிதான பரிசு அங்கே இருந்தது. வேகமாக சென்று அதை எடுத்தான் அரவிந்த். இவ்வளோ பெரிய பரிசை இவ்வளவு நேரம் தான் காணவில்லை என்று நினைத்தான். காகிதத்தால் சூழப்பட்ட அந்த பரிசின் மேல் ஒரு பொம்மை கடையின் விலாசம் மட்டும் இருந்தது.
அரவிந்த் அது என்ன பரிசாக இருக்குமென ஆர்வத்துடன் அதை பிரிக்க ஆரம்பித்தான். கடைசியில் அதில் ஒரு அழகான பெண் பொம்மை ஒன்று இருந்தது. சிவப்பு கவுனும் , அரையளவு கூந்தலும், அழகான கண்களும் கொண்டிருந்தது அந்த பொம்மை. ஆனால் அந்த பொம்மையை கண்டு அரவிந்துக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை.
"வெறும் பொம்மையா?" என்று அரவிந்த் அந்த பொம்மையை தன் அலமாரியில் போட்டு அதன் கதவை மூடினான்.
அரவிந்த் படுகையில் படுத்து உறங்க ஆரம்பித்தான். அலமாரியில் இருளில் கிடந்தது அந்த பொம்மை.
*****
வழக்கம் போல அரவிந்த் பள்ளி சென்றான். வகுப்பிலேயே நண்பர்கள் இல்லாமல் தனியாகவே இருக்கும் ஒரே ஜீவன் அரவிந்த் மட்டும் தான். எப்போதும் தனியாகவே பள்ளியில் இருப்பான். இதன் காரணமாகவே அவனை ஏமாற்றும் மாணவர்கள் சிலர் இருகின்றனர். அதில் ஒருவன் தான் அன்பரசு.
அன்பரசு ஒரு முரட்டுச் சிறுவன். தனக்கென ஒரு நான்கு சிறுவர்களை விட்டுக்கொண்டு வகுப்பையே மிரட்டி வருபவன். அவனுக்கு யார்ரும் அடிப்பணியவில்லை என்றால் அடி உதைதான்.
அன்று உணவு நேரம் வந்தது. அரவிந்த் தன் உணவு டப்பாவை பையிலிருந்து எடுத்தான்.
“என்ன தம்பி? இனிக்கு என்ன லஞ்ச்சு?” என்று அன்பரசு அரவிந்தை மிரட்டியபடி கேட்டான்.
“இனிக்கு எனக்கு ரொம்ப பசிக்குது..நான் உனக்கு நாளைக்கு லஞ்ச்சு கொண்டு வறேன்” என்றான் அரவிந்த் பாவமாக.
“ஒழுங்கா நீயே குடுத்திடு! இல்லனா தேவை இல்லாம அடிவாங்குவ “ என்று தெனாவட்டாக கூறினான் அன்பரசு. அரவிந்த் தயங்கிபடி பார்த்தான்.
உடனே அன்பரசின் நண்பன் ஒருவன் அரவிந்தின் உணவு டப்பாவை பிடுங்கினான். தடுக்க நினைத்த அரவிந்துக்கு மூக்கில் அடிப்பட்டு லேசாக இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
“சொன்னா கேக்கணும் இல்லனா இப்படிதான் ஆகும்” என்று கேலிசெய்து விட்டு அன்பரசு கிளம்ப அவன் நண்பர்கள் அவன் பின்னே சென்றனர்.
அரவிந்துக்கு அன்பரசு மட்டும் ஒரு பிரச்னை என்று சொல்ல முடியாது. தனக்கு நண்பர்கள் யாருமே இல்லை இல்லை என்று பள்ளிக்கு சேர்ந்த நாளில் இருந்தே வருந்தி வருவான். என்றாவது தனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் அரவிந்துக்கு இருந்ததது.
நாட்கள் இப்படியே சென்றது. அன்று வழக்கம் போல சோகமாகவே வீட்டிற்கு வந்த அரவிந்த் தன் அறைக்கு சென்று தன் பையை இறக்கி வைத்தான். தன் அறையே குப்பையாக இருப்பதைக் கண்டான் அரவிந்த்.
“அய்யயோ அம்மா பார்த்தா திட்டிட்டே இருப்பாங்களே..சீக்கிரம் சுத்தப்படுதணும்” என்று புலம்பியபடி அறையை சுத்தப்படுத்த ஆரம்பித்தான்.
தன் அலமாரியை எதிர்ச்சியாக. திறந்த அரவிந்த் தான் வைத்த அந்த பொம்மை இருட்டில் இருப்பதை கண்டான்.தன் உணர்வை போல அந்த பொம்மைக்கும் இருக்கும் என்ற எண்ணத்தில் அதை எடுத்து தன் படுக்கை மேல் அமரவைத்தான்.
இம்முறை அரவிந்துக்கு அந்த பொம்மை அழகாக தெரிந்தது. அதனிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.
“என்னை மன்னிச்சிடு! உன் உணர்வு எனக்கு தெரியும். என்னை போல நீயும் தனியாக இருக்கணு இப்பதான் புரிஞ்சுது” என்றான் அரவிந்த்.
எந்த உணர்வும் இல்லாத அந்த பொம்மையிடம் பேசுவது அரவிந்துக்கு பிடிக்க ஆரம்பித்தது.
“உன் கூட பேசறது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இனிமே நீயும் நானும் நண்பர்கள்! சரியா?” என்று அந்த பொம்மையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான் அரவிந்த்.
“ஒய் சின்ன பையா! என்ன பொம்மைக்கிட்ட பேசிக்கிட்டு இருக்க? என்று சஞ்சய் அரவிந்தின் அறை வாசலில் நின்று கேலி செய்தான்.
“உனக்கு என்ன வேணும் இப்போ ?”என்றான் அரவிந்த் வெறுப்பாக.
“அம்மா உன்னை தோட்டத்துக்கு தண்ணி ஊத்த சொன்னாங்க!” என்று சொல்லிவிட்டு சென்றான் சஞ்சய்.
“ஆனா என் ரூம் ரொம்ப குப்பையா இருக்குடா..நான் சுத்தப்படுத்தணும். நீயே அதை செஞ்சிடுடா ப்ளீஸ்” என்று மெல்ல கூறினான் அரவிந்த்.
“அது உங்க பிரச்சனை சார்! “என்று சிரித்துக்கொண்டே சென்று விட்டான் சஞ்சய்.
அரவிந்த் தோட்டத்துக்கு சென்று தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தான். சிறிது நேரம் சென்றது.
“அரவிந்த் ! நான் சஞ்சயைதான தண்ணீர் ஊத்த சொன்னேன்! அவன் எங்க?” என்று சமையில் ஜன்னல் வழியாக அரவிந்தின் அம்மா தேவி குரல் கொடுத்தார்.
“டேய் குட்டி பிசாசே!”என்று அரவிந்த் தம்பியை தேடி ஓடினான்.
வெளியே மற்ற சிறுவர்களோடு சஞ்சய் விளையாடுவதை கண்டான் அரவிந்த். அரவிந்துக்கு மீண்டும் ஏக்கம் வந்தது. தானும் அவனை போல நண்பர்களோடு விளையாட முடியவில்லை என்று நினைத்தபடி தன் அறைக்கு சென்றான்.
ஆச்சர்யத்தில் வாயை பிளந்தான் அரவிந்த். அவனுடைய அறையே சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தது. பொருட்கள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது.
அரவிந்துக்கு காபி கொண்டு வந்தார் அவன் அம்மா தேவி.
“பரவா இல்லையே அரவிந்த் ...உன் ரூமை சுத்தமா வச்சிருக்கியே..”என்றார் தேவி.
“என்ன சொல்றீங்க? ரூமை நீங்கதான சுத்தம் செஞ்சிருக்கணும்?” என்று புரியாமல் கேட்டான் அரவிந்த்.
“முளை குழம்பிடுச்ச்சா? இப்பதான் உன் ரூம் பக்கமே நான் வறேன்” என்று தேவி எந்தவித உணர்வில்லாமல் சொல்லிவிட்டு சென்றார்.
“என்ன இது ? ரூமை யார் சுத்தம் செஞ்சிருப்பாங்க?”என்று குழப்பத்தில் தன் அறையை சுற்றிச் பார்த்துக்கொண்டே இருந்தான் அரவிந்த்.
அவன் படுக்கை மேல் அமர்ந்திருந்த அந்த பொம்மை உணர்வில்லாத சிரிப்பை காட்டியபடியே இருந்தது.

எழுதியவர் : லோகேஷ் (26-Apr-14, 11:43 am)
சேர்த்தது : lokesh jayagopi
பார்வை : 96

மேலே