கருவாச்சி காவியத்தில் பெண்ணியச்சிந்தனைகள்

வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தில் பெண்ணியச் சிந்தனைகள்

முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் மனித உரிமைக் கூறுகளில் ஒன்றான பெண்ணிய விடுதலையையும் சமத்துவத்தையும் வேண்டி பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசுகளும் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக பல சட்டங்களை இயற்றி சமத்துவம் பேண விழைகின்றன. பெண்கள் காலங்காலமாய் அனுபவித்து வரும் பல்வேறு இன்னல்களைக் காத்தல் பொருட்டு படைப்பாளர்கள் தம் படைப்புகளின் மூலம் போர்க்குரல் எழுப்புகின்றனர். அத்தகைய படைப்பாளர்களுள் வைரமுத்து குறிப்பிடத் தக்கவர்.

பெண்ணியம் – விளக்கம்
ஆங்கிலத்தில் உள்ள ‘feminisam’ என்ற சொல் பெண்கள் பற்றிய அறிவுத்துறை சார்ந்த ஒரு சமூக விஞ்ஞானமாகும். இச்சொல் தமிழில் பெண்ணியம் என்று வழங்கப்படுகிறது. “feminisam என்பது “femina’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரிபு ஆகும். இச்சொல் முதலில் பெண்களின் பாலியல் பண்புகளைக் குறிக்கவே பயன்பட்டு வந்தது. பின்பே பெண்களின் உரிமையைப் பேசுவதற்காகக் குறிப்பிடப்பட்டது”. (சி. என். குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப. 4).

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 1894 ஆம் ஆண்டு தம் பதிப்பில் ‘பெமினிசம்’ என்ற சொல்லுக்கு முதன் முதலில் விளக்கம் தந்துள்ளது. “பெமினிசம்” என்ற சொல் பெண்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது (இரா. பிரேமா, பெண்ணியம், ப. 11) என்ற பொருளைக் கூறுகிறது என்பர்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதி”feminisam ’ என்பதற்கு “பெண் உரிமை ஏற்புக் கோட்பாடு பெண்ணுரிமை ஆதரவு” (madras university English tamil dictirnary) என்று பொருள் கூறியிருக்கின்றது.

delux ஆங்கிலத் தமிழ் பேரகராதி femnisam என்பதற்குப் ‘பெண்களின் உரிமையை வற்புறுத்தும் ஓர் இயக்கம்’ (deluxe dictirnary) என்று விளக்கம் தந்துள்ளது.

பெண்ணிய வகைள்
1. மிதவாதப் பெண்ணியம் அல்லது தாராளப் பெண்ணியம் { liberal feminisam)
2. தீவிரவாதம் அல்லது தூய பெண்ணியம் (radical feminisam)
3. சமதர்மப் பெண்ணியம் அல்லது சோசலிசப் பெண்ணியம் {socialist feminisam)
4. ஆன்மிகப் பெண்ணியம் {spiritual feminisam)
5. கிறித்துவப் பெண்ணியம் (Christian feminisam)
6. கலாச்சாரப் பெண்ணியம் {cultural feminisam)
7. மனைப் பெண்ணியம் அல்லது இல்லப் பெண்ணியம் (domestic feminisam)
8. தலைமைத்துவம் வேண்டாப் பெண்ணியம் (anarcha feminisam)
9. கருப்புப் பெண்ணியம் (black feminisam)
10. சூழல் பெண்ணியம் {eco feminisam)
என பெண்ணிலை வாதங்களின் அடிப்படையில் பெண்ணிய வகைகள் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

வைரமுத்து படைப்புகள் மிதவாதப் பெண்ணியம் அல்லது தாராளப் பெண்ணியம் கொள்கையோடு வெளிப்பட்டுள்ளது. ஆணும், பெண்ணும் நிகர் என்னும் நிலையில் படைப்புகள் காணப்படுகின்றன. அவருடைய கருவாச்சி காவியம் பெண்ணியச் சிந்தனைகள் கொண்ட தனி நூலாகப் படைக்கப்பட்டுள்ளது.

இந்நூல் பெண்ணியச் சிந்தனைகள் தோற்றம் கொள்வதற்கான சமூகக் கூறுகளைக் கூறுகிறது. பாமர பெண்கள் தம் அடிமைச் சூழலை விதி என்று எண்ணினாலும் அதனோடு ஆணை எதிர்க்கும் சிந்தனைகள் துளிர்விடுவதும் அறியமுடிகிறது. கருவாச்சியைப் பற்றி “அந்த வாழ்வுக்குள் இல்லாத எதையும் படைப்புக்குள் கொண்டுவரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தேன். வாழ்வின் இருப்பு வேறு, எதிர்ப்பார்ப்பு வேறு, எதிர்ப்பார்ப்பை இருப்புக்குள் திணிப்பது காலமயக்கம் என்ற கடுங்குற்றத்துக்கு ஆளாகிவிடும். வறண்ட நிலத்தின் ஒரு விவசாய வெளியில் நூற்றாண்டுகளாய் வாழப்பட்ட வாழ்க்கையைத் தானும் வாழ்ந்து கழித்தவள் கருவாச்சி அவளைத் தீவிரப்படுத்துவதோ, புரட்சிக்காலம் பூசுவதோ சத்தியத்தின் கோடுகளைத் தாண்டுவதாகும். அவள் அவளாகவே வாழ்ந்திருக்கிறாள்” படைப்பாளிக்கு அதில் பங்கில்லை.

திணிக்கப்பட்ட யுத்தம் கையில் கிடைத்த ஆயுதம் – காலம் விதித்த களம் என்ற வட்டத்தில் கருவாச்சியின் இயல்பான போராட்டம் மட்டுமே இதில் இயங்குகிறது. அவ்வண்ணமே கருவாச்சியின் வாழ்வியலோடு கலந்து வரும் கலாசாரத் தீர்ப்புகளும், நம்பிக்கைகளும் காலத்தின் குரலேயன்றி, கலைப்படைப்பின் கருதுகோள் அல்ல. (பாயிரம், க.கா.)

ஆணாதிக்க மரபிலிருந்து பெண் என்ற கருத்துரு மெல்ல மெல்ல விலகி வருகிறது. மாறிவரும் யுக சந்தியின் மையத்தில் நிற்கிறாள் பெண். இதுவரை பெண் என்ற தத்துவத்தைப் பெரும்பாலும் வடிவமைத்தது அவள் உடல் தான். பெண் தன் உடலைப் பின்னிழுத்துக் கொண்டு தன் உள்ளத்தை மட்டும் முன்னிறுத்தத் தலைப்பட்டுவிட்டால் இருநூறு முந்நூறு ஆண்டுகளில் இயற்கைக்குப் புறம்பான சில கலாசார அதிர்ச்சிகளைச் சந்திக்கக்கூடும் சமூகம்.

திருமணம் என்ற உறவுமுறை சிதைந்து, குடும்பம் என்ற நிறுவனம் உடைந்து, பெண் தன் உடல்வழியே பிள்ளைபெறும் முறை குறைந்துவிடவோ மறைந்து விடவோ கூடும்.

இவை நேர்ந்துவிடக் கூடாது என்று சமுதாயத்தின் ஒரு கூட்டம் பிரயத்தனம் அல்லது பிரார்த்தனை செய்யலாமே தவிர, இவை நேரவே நேராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

கருவாச்சி காவியம்
கருவாச்சி காவியம் பெண்களின் துயரங்களைத் தொகுத்துக் கூறுவதாய் உள்ளது. வைரமுத்து தான் கண்டதையும், அறிந்ததையும் கொண்டு பெண்களின் துயரத்தை இக்காவியத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.

“கருவாச்சி என்பாள் ஒரு கற்பனைப் பாத்திரம் அல்லள். கருவாச்சியின் முற்பகுதி வாழ்க்கை எங்கள் குடும்பங்களுக்குள் நிகழ்ந்த நிஜம். பிற்பகுதி வாழ்க்கை எங்கள் கிராம வெளிகளில் வெவ்வேறு பெண்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கை” (க.கா., பாயிரம்) என்று கூறப்படுவதன் மூலம் பெண்கள் பட்ட துயரங்கள் ஒரு பாத்திரத்தில் ஏற்றி கவிஞரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது அறியமுடிகிறது.

“எதிர்வரும் நூற்றாண்டுகளில் பெண்ணியம் காணவிருக்கும் மாற்றங்களுக்கான காரணங்களின் ஓர் ஆவணமாகவும் கருவாச்சி காவியம் திகழும்” (பாயிரம், க.கா.) என வைரமுத்து குறிப்பிடுவதன் மூலம் பெண்ணியம் பற்றியும், கருவாச்சி காவியம் படைக்கப்பட்டதின் நோக்கம் பற்றியும் அறியமுடிகிறது.

இக்காவியத்தில் கருவாச்சி, கருவாச்சியின் தாய் பெரியமூக்கி, சொர்ணக்கிளி, வளவிக்காரச் சுப்பஞ்செட்டியாரின் பெண்கள் கனகாம்பரம், பவளம், கொண்ணவாயன் காதலி அய்யக்கா ஆகியோர் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாய் காணப்படுகிறார்கள்.

கருவாச்சி
கருவாச்சிக்குத் திருமணமாகி பதினோராம் நாளே அவளுடைய கணவன் கட்டையனால் திருமண உறவிலிருந்து அத்துவிடப்படுகிறாள். அவள் பழிவாங்கப் படுவதற்காகவே திருமணம் செய்து கொள்ளப்படுகிறாள் பழிவாங்கவும் படுகிறாள்.

“இப்போது இருக்கும் இந்திய மணவாழ்க்கையானது பல வழிகளிலும் பெண்மக்களுக்குப் பாதகமாகவே அமைந்துள்ளது. தனக்குத் தேவையில்லாத போது தனது மனைவியை ஒதுக்கி வைத்துக்கொள்ள ஆண்களுக்கு உரிமை அளித்திருக்கும் இச்சமூகம் பெண்களுக்கும் அதே உரிமையைக் கொடுக்காமலிருப்பது வருத்தத்தக்கது”. (பெரியார், குடி அரசு, 29.12.1929) என்னும் பெரியாரின் கருத்து நோக்கத்தக்கதாகும்.

பஞ்சாயத்தைக் கூட்டி முதலில் கருவாச்சியைக் கட்டையன் குடும்ப உறவிலிருந்து அத்துவிடக் கேட்கும் பொழுது ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அமைதியாக இருக்கிறாள் கருவாச்சி. அதன் பிறகு “மஞ்சப்பூவக் காமிச்சு சாமிகூட நம்மபொழப்புல சாம்பலடிச்சிருச்சே மகளே”.

பெரியமூக்கி அழுது கண்ணத் தொடைக்க, கருவாச்சி லேசாப் பெரண்டு படுக்க, சீல வெலகுன எடத்துல முதுகுத் தோலு சிவீர்னு வெந்து கெடக்க யாத்தே! இது என்னாடின்னு கத்திட்டா ஆத்தா.

அங்க கூட்டாளிக்கிட்டக் கட்டையன் சொல்லிக்கிட்டிருக்கான் கருவாச்சி முதுக வேகவச்ச கதைய. தலக்கறியில கெடந்த ஒரு பட்டமொளகாய நச்சுன்னு கடிச்சு நறநறன்னு மென்னு முழுங்கி அந்த ஒறப்பு மூளையில வேல செய்யிற போதே பட்டச் சாராயத்த இன்னொரு மண்டு மண்டிட்டுப் பழிவாங்குன சேதியச் சொல்றான் பாவி.

கல்யாணமான ரெண்டாம் நாளும் கம்பங்காட்ல வேலையிருக்கு வாடீன்னேன். “குட்டியாடு மாதிரி கூடவே வந்தா, நல்ல ஏறு வெயிலு. போய்ச் சேர மத்தியானாமாகிப் போச்சு. காடு கரையயல்லாம் சுத்திக் காட்டிட்டு கரிச்சாம் பாறைக்குக் கூட்டி வந்திட்டேன். உச்சி வெயிலு, சும்மா கொதிக்குது பாறை. அரிசியை எறிஞ்சாப் பொறியாப் போயிரும்…… அம்புட்டுச் சூடு, படுடீன்னேன் வெந்துபோற வெயில்யா மாமான்னு கேட்டா. எல்லாம் ஒரு சாஸ்திரம் தாண்டின்னேன், சரின்னும் முந்தானைய விரிச்சுப் படுத்தா. அதையும் உருவி எறிஞ்சேன். முடிஞ்சு பாத்தா வெந்து கெடக்கு அவ முதுகுத்தோலு”. (க.கா. அத்தி. 11)

இது போன்ற பல்வேறு கொடுமைகளை கருவாச்சி அனுபவிக்கிறாள். இந்நிலையானது இத்தனைக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு மனதிற்குள்ளாகவே வைத்துக் கொள்ளும் பாங்கானது ஆணுக்கெதிராகப் பெண் வாய் பேசாமல் அடங்கிச் செல்லும் பாங்கையே காட்டுவதாயுள்ளது. இங்கே “நமது நாட்டில் அடுத்தவீட்டுப் பெண்களும் பெற்றோரும் மணமக்களுக்கு மாமி வீட்டில் நல்ல அடிமையாய் இரு. அடித்தாலும் உதைத்தாலும் வருத்தப்படாதே. புருஷன் மனம் கோணாமல் நட என்று உபதேசம் செய்து மணமகன் வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாயிருக்கின்றது. இதனுடைய கருத்து அவர்களை ஆடவர்களுக்கு எப்பொழுதும் அடிமைகளாகவும் ஒருவித சுதந்திரமாவது அல்லது உரிமையாவதில்லாதிருக்கும்படி செய்வதற்கே ஆகும். அவர்களுடைய உபதேசங்களைக் கேட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லும் அந்தப் பெண்ணும் தன்னை ஓர் அடிமையென்றே கருதி புருஷன், மாமனார், மாமி, நாத்தி இன்னுமிருக்கக்கூடிய பந்துகளுக்கும் பயந்து, அவர்களுடைய பிரியத்தைச் சம்பாதித்தலிலேயே தன்னுடைய வாழ்க்கையை நடத்தி உயிருள்ள பிணமாக வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் உபத்திரவங்கள் அளித்த போதிலும் அவைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டியவளாகிறாள்” என்னும் கருத்து நோக்கத்தக்கதாயுள்ளது.

மேற்கண்ட கட்டையனின் கொடுமைகளாலும் மன அழுத்தத்தினாலும் பேய் பிடித்தவளாகக் கருவாச்சி காணப்படுகிறாள். அதற்கு உடுக்கையடித்து மருத்துவம் செய்யப்படுகிறது. ஊரார் கருவாச்சிக்கும், கட்டையனுக்கும் கணவன் மனைவி என்ற உறவை அத்துவிடும் போது கருவாச்சி தாலியைக் கழற்றித் தர மறுக்கிறாள். அப்போது,

ஏண்டி! தாலி கழுத்தில கெடந்தா என்னைக்கிருந்தாலும் ஒன் புருசன் ஒன் கவுட்டுக்குள்ள வந்திருவான்னு பாக்கிறயா? கத்துறான் கட்டையன்.
இல்ல, இந்த சென்மத்துல நீ எனக்குப் புருசனுமில்லத் இந்த பூமியில பெறந்த எந்த ஆம்பளையும் எனக்கு புருசனாகப் போறமில்ல.
பொழச்சிருவியாடி இந்த பூமியில…… ஆம்பள தொண இல்லாம?
பொழைக்கிறேன்….. பொழைச்சுக் காமிக்கிறேன்.
பந்தயம் போடுறியா? செயிச்சுருவியா?
செயிக்கிறேனோ இல்லையோ…. நான் தோக்கமாட்டேன் மாமா?
ஊரே அருளேறி நிக்கிது. ஆம்பளைக பொம்பளைக கண்ணுல கண்ணீரா முட்டுது (க.கா. 51-52).
என்னும் கருவாச்சியின் பேச்சு எந்த ஆணையும் சாராமல் தனது வாழ்வைத் தானே வெற்றியோடு நடத்துவது என்னும் முடிவைக் காட்டுகிறது. தான் பட்ட கொடுமைகளைக் கூட சொல்ல மறுத்தவள் இப்போது தன் கணவனையே எதிர்த்து சவால் விடுவது பெண்ணியத்தின் முதல் கூறு எனலாம்.

கருவாச்சி தான் சவால் விட்டது போலவே வாழவும் போராடுகிறாள். ஆனால் கட்டையனும் அவனுடைய கையாட்களும் அவள் செய்யும் தொழிலுக்குப் பங்கம் விளைவிப்பவர்களாகவே காணப்படுகின்றனர். மழை பெய்து உழவு ஓட்ட கருவாச்சியும் பெரியமூக்கியும் உழவு ஓட்டுபவர்களைக் கூப்பிட யாரும் உழவு ஓட்டச் செல்லக் கூடாது எனக் கட்டையன் மிரட்ட யாரும் உழவு ஓட்ட வரவில்லை. இறுதியாக ஒரு வாய்பேச இயலாதவனையும் வெளியூரைச் சேர்ந்த தன் உறவுக்காரன் ஒருவனையும் கெஞ்சி கூத்தாடி தன் வயலை உழவு ஓட்டுகிறாள் பெரியமூக்கி. இதை அறிந்த கட்டயனும் அவனது ஆட்களும் உழவு ஓட்டுபவர்களிடம் வம்பிழுத்து உழவு ஓட்டி முடிக்கும் முன்னே அதைத் தடுக்கின்றனர். உழவு ஓட்டாத மீதி நிலத்தை பெரியமூக்கி தன் ஒற்றை பசுமாட்டை ஒருபக்கமும், கருவாச்சி மறுபக்கமும் நின்று கலப்பையை இழுக்க பெரியமூக்கி உழவு ஓட்டுகிறாள். இவ்வாறு ஆணாதிக்க நிலையைத் தாண்டி தாயும் மகளும் விவசாயம் செய்கின்றனர்.

வரதட்சனைக் கொடுமை
பெண் பொன்னோடு வந்தாலே ஆண் சமூகம் அன்பைக் காட்டுகிறது. எல்லா ஆண்களும் வரதட்சணையை எதிர்பார்க்காவிடினும் காதல் திருமணமல்லாத உறவு திருமண முறைகளில் வரதட்சணை முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிய திருமண முறைகள் கட்டாயமாக்கப்பட்டதே தம்முடைய செல்வங்கள் தங்களுக்குள்ளேயே இருப்பதற்காகத்தானே.

கண்ணாடி வளையல் வியாபாரம் செய்யும் சுப்பஞ்செட்டியாருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் கனகாம்பரம், இளையவள் பவளம், மூத்தமகளைத் தன் உறவுக்காரனமான முத்துகாமுவிற்கு அவன் கேட்டுக் கொண்டபடி ஒரு பெட்டிக்கடையும், வைர மோதிரமும், போட்டுவிடுவதாக உறுதி கூறி மாப்ள! குருவி மாதிரி சேத்த காசவச்சுப் போட்டுக் குடுத்திடறேன் பொட்டிக்கடையை. தங்கச் சங்கிலி ஒண்ணு எரவல் தாரேங்கிறா பெரியமூக்கி. பொண்ணு கழுத்துல போட்டு அனுப்புறேன். வைர மோதிரம் குடுத்துட்டு வாங்கிக்கிறேன் என அப்போதைக்கு மூத்தவளின் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

ஆனால் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகியும் சுப்பஞ்செட்டியாரால் வைர மோதிரம் போடமுடியவில்லை. இந்நிலையில் கனகத்தை அடித்து விரட்டி விடுகிறான் முத்துகாமு. அவள் தன் தகப்பன் வீட்டுக்கு வந்து விடுகிறாள்.

பாலியல் வன்கொடுமை – படுகொலை
கருவாச்சி காவியத்தில் பாலியல் பலாத்காரம், படுகொலை செய்த நிகழ்வுகளும் காணப்படுகின்றன. சொர்ணக்கிளி சடையத்தேவருடைய அண்ணன் மகள். சடையத்தேவர் உள்ளிட்ட ஏழு அண்ணந்தம்பிகளுக்கும் ஒரே பெண் பிள்ளையாய் சொர்ணக்கிளி விளங்குகிறாள். பெரியமூக்கியினுடைய அண்ணன் மகன் செயில்ராசு. ஒரு நாள் மாலையில் பருத்தி சாக்கைச் சுமந்து வரும் சொர்ணக்கிளியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான். அவள் எவ்வளவோ கெஞ்சியும், போராடியும் அவளால் மீற முடியவில்லை. இறுதியாக மூச்சுப் பேச்சற்று கிடக்கிறாள். உடனே அவன் அவள் இறந்துவிட்டாள் என நினைத்து பருத்தி சாக்கில் அவளைக் கட்டிக்கொண்டு எங்கயாவது பாழுங்கெணத்துல போட்டுட்டுக் கண்காணாத சீமைக்கு ஓடியே போயிடணும் என நினைத்துக் கொண்டு தூக்கிச் செல்கிறான். அந்நிலையில் மூட்டைக்குள்ளிலிருந்து உயிரோடிருக்கும் சொர்ணக்கிளி முணகுகிறாள்.

அடியே சொர்ணம்! ஒரு வகைக்கு நீ செத்தது நல்லது. எனக்கு சாட்சியிருக்காது. இப்ப நீ பொழச்சது கெட்டது. ஒன்னிய இப்படியே விட்டா நான் காடு கடக்குமுன்ன என்னியக் காணாப் பொணாமாக்கிப் பிடுவானுக ஒங்கப்பன்மாருக. அதுனால நீ செத்தது செத்ததாகவே இருக்கட்டும்.

இடுப்புல சூரியத் தேடினான், காணோம். பதட்டத்துல எங்கேயோ விழுந்து போச்சு, வரப்பு மேட்ல ஒரு கத்திக்கல்லு, அந்தக் கல்ல மண்ணோட பேத்தெடுத்த கொலகாரப் பாவி. கும்புட்டுக் கெடந்தவ தலையில நச்சு நச்சுன்னு குத்தி ரத்தம் ஒழுகவிட்டான்.

அவ கத்திக் கதறி ஊர்ச்சாமி பேரையெல்லாம் கூப்பிட்டு அழுதுபார்த்தா, ஒரு சாமியும் வரல, உண்மையாவே செத்துப்போனா (க.கா.1) என்னும் நிலை பெண் அனுபவித்த உச்சக்கட்ட கொடுமையை உணர்த்துகின்றது. எவ்வளவு ஈவிரக்கமற்ற செயல் இது. இங்கே இந்த வன்முறைகளில் (பாலியல்) ஈடுபடும் கட்டற்ற ஒழுக்க மீறல் அவர்களின் தனித்த பண்புடன் பிறப்பதில்லை. மாறாக இந்த ஆணாதிக்கச் சமூகம் உற்பத்தி செய்கின்றது. இந்தக் குற்றத்தின் பொறுப்பாளிகள் நாம் எல்லோரும் என்பதை உணர்ந்து கொள்வதும், அதை மாற்ற நாம் போராடுவதும் அவசியம். குற்றவாளியைக் கைது செய்தல், தண்டனையைக் கொடுத்தல், கண்டன அறிக்கைகள், கறுப்புக் கொடிகள் ஆகியவை எல்லாம் சிலர் பிழைக்கவும், நாளை மறந்து போகவும் மட்டுமே நடக்கும். இதன் சமூக ஊற்று மூலத்தைக் கண்டறிவதும், அந்த நோயைத் தீர்க்க போராடுவதுமே இக்கொலைக்கு முன் உள்ள பிரச்சினை. நாளை இன்னுமொரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகாத சமூகத்தைப் படைக்க போராடாத வரை இது போல் நடப்பதற்குத் துணைபோகின்றோம் என்பதை மறந்தாலும், மறுத்தாலும் அவர்களும் குற்றவாளிதான் எனும் கருத்து நோக்கத்தக்கதாகும்.

முடிவுரை
இவ்வாறு கருவாச்சி காவியத்தில் பெண்கள் சூடு வைக்கப்பட்டதும், கைகளில் காயப்படுத்தப்பட்டதும், உடலெல்லாம் முட்களாக்கி வேதனை அடைய செய்யப்பட்டதும் அறியமுடிகிறது.

குழந்தை பிறக்காமைக்கு யார் காரணம் என்று அறியாமலே ஆண், மனைவியின் தங்கையை இரண்டாம் திருமணம் செய்த கொடூரமும், பெண் போகப் பொருளாய் பார்க்கப்பட்ட நிலையும், வரதட்சணைக் கொடுமையும் அறியப்படுகிறது.

மகனின் காதலியைக் கொடுத்த கடனுக்காக அப்பன் திருமணம் செய்து கொண்ட சமூக அவலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவும், கொலையும், கருவாச்சி காவியத்தின் மூலம் பெண்ணின் நிலையை அப்படியே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது பெண்ணியத்தின் தேவையை வலியுறுத்துவதாயுள்ளது.

எழுதியவர் : கவிப்பேரரசு வைரமுத்து (26-Apr-14, 12:45 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 349

மேலே