துப்பாக்கி எப்போது பூப்பூப்பது

இக்கவிதை, கி.பி. 1984ாம் ஆண்டு ஈழ விடுதலைப்போர் உச்சத்திலிருந்தபோது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது
கொடி மரத்து வேர்கள் என்ற கவிதைத் தொகுப்பில் எழுதிய கவிதை இது!
ஈழத்து விடுதலைப்போர் முனையில் இருக்கும் தன் காதலனுக்கு ஒரு காதலியின் கடிதமிது!

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது?

அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே
என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு
கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?
நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது
மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்
அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.
காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது
மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.
இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே
உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது?
இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?
ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.
இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை
ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்
ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை
அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

எழுதியவர் : கவிப்பேரரசு வைரமுத்து (26-Apr-14, 11:40 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 108

மேலே