மனோகரச் சுவனம்

மெலிந்த நிலவிடைப்
பனியுடுத்தி
கனவுபூட்டிக் கரைகின்றாள்
காதலி - காதலன்
வான் நோக்கும்
மணியிடைப் பார்வைக்காய் ...!

&&&&&

செங்கடல் திரிக்கும்
மந்தாரப் பொழுதொன்றில்
மனமேடை
தாலாட்டும் - சிங்காரத்
தென்றலாய்
அவன் நயனங்களின்
தேரோட்டம் ....!

&&&&&

ஆனி
மாதத்துப் பிள்ளைநிலா
யௌவனம் மேவி
நாணி நிற்க - உன்
தாள்திறந்து விளிக்கும்
தாளகதியில்
சரணடைந்து மாலையிடுவாள்
மையல் மொழியில் ...!

&&&&&

மழையும் மழைசார்ந்த
மேகத்திணையில்
கோலமிடும் விரலணிந்த
கணையாழிக் கல்லின்
பவளச் சிவப்பில்
இதயமூற்றிக் கிடக்கின்றான்
தையலின் கனவில் .....!

&&&&&

இடியொத்த
மௌனத்தின் நடையில்
காம்பீரியச் சலவையுன்
தீண்டும் பார்வை - அதில்
தூண்டா மணிவிளக்குகளாய்
தோள் நிறைக்கின்றது
விரிகூந்தல் ....!

&&&&&

எழுதியவர் : புலமி (26-Apr-14, 3:09 pm)
பார்வை : 109

மேலே