தருணங்கள்

திரும்ப திரும்ப
என்னை உன்னிடம்
தவறவிடும் தவறுக்காக
ஏங்கிக் கிடக்கிறது
உன்னிடம் என்னை
தவறவிட்ட தருணங்கள் !
ஒரு தடயவியல் நிபுணரின்
பூதக் கண்ணாடியென
அபரிமிதமான ஆவல்களுடன்
தொலைத்தலின்
அடையாளங்களைத் தேடியலைந்த
எத்தனையோ தருணங்களில்
தொலைத்தலின் முகவரியறிந்து
நீயே என்னை
பத்திரப்படுத்தியிருக்கிறாய் !
பத்திரப் படுத்தியயென்னை
மிகு பிரயத்தனம் கூடிய
சிரத்தையுடன்
கச்சிதமாய் அளவெடுத்து
பொருத்தமாய் வடிவமைத்தாய் -
ஆனால்
உடுத்திப் பார்க்க மறுத்து
உனக்குள் மட்டும்
அணிந்து கொள்கிறாய் !
நாம்
தொலைந்து போன
பிராந்தியமெங்கும்
காணாமல் போன
தருணங்களின் மீது
மீளவும் கிடைத்துவிடக்கூடாதென்னும்
தவிப்புகளின் தணல்கள்
கொழுந்து விட்டெரிகிறது !
மீண்டும் ஒரு
தொலைப்பிற்கு ஏங்கி
பிறரறியாமல்
இருவரும்
அலைவுருகிறோம் -
எதிர்காற்றில்
படபடக்கும்
முள் செடிப்
பாலித்தீன் பைகளென .