சுயம் விரும்பி
தச்சனாக நான் மாறி
பதம் பார்த்து
மரம் சேர்த்து
இதயம் கோர்த்து
இழைப்புளியால்
இழைத்தேன் ஓர்
நினைவு நாற்காலி
நான் மட்டும் அமரவே.
ஒரு சித்தாளென
காதலும் கவிதையும்
குழைத்துப் பூசி
அடுக்கு மேல் அடுக்காய்
எண்ணச் செங்கல் வைத்து
எழிலரண் எழுப்பினேன்
நான் மட்டும் வாசம் செய்ய.
சிற்பியாகி
விழி கொண்டு நீ செய்யும்
சிருங்கார ஜாலமெல்லாம்
என்றும்
அழியாச் சிலையாக்க
சிற்றுளியால்
செதுக்கி வைத்தேன்- அதை
என் கண்களுக்கே
காட்சிப் படுத்தினேன்.
ஓவியனாய்
எண்ணங்களால் ஆன
வண்ணங்களினால் உன்
கன்னச் சிவப்பையும் கொஞ்சம்
தொட்டெடுத்து
தீட்டிவிட்டேன் ஓர்
நினைவோவியம்
என் நெஞ்சத்தின்
இடுக்கொன்றில்
மாட்டிக்கொள்ள.
குயவனாய்
கொஞ்சம்
மனமெடுத்து
பார்வையால்
நினைவூற்றிப் பிசைந்து
காலச் சக்கரத்தில்
சுழற்றியெடுத்து
கவின் பானையாய்
சுட்டெடுத்து விட்டேன் - அதில்
அமுதமும் சமைத்துண்டு
அமரனாகி விட்டேன் இன்று !