சிறப்புக்கவிதை 49 இராசந்தோஷ் குமார் அன்புள்ள மனைவிக்கு --மடல்

அன்புள்ள மனைவிக்கு- மடல்
அன்புள்ள மனைவிக்கு..!

நீ இங்கு நலம்.!
நான் அங்கு நலமா?
உன் நினைவுகள்
இங்கு எனை
மென்று மென்று
கொன்று கொக்கரித்து
கொழுத்து கொண்டிருக்கிறது.

அங்கு எப்படி?
விரதமிடும் உந்தன்
ஆசைகளில் எந்தன்
நினைவு தங்கரதம்
உனை மோகப்பதம்
செய்கிறதுதானே?

உந்தன் வயிற்றில்
எந்தன் காதல் சாட்சி
என்ன செய்கிறான்...?
இந்த எட்டாவது மாதத்தில்..!

சத்தான உணவுகள் உண்டாயா?
மருத்துவரின் ஆலோசனைகள் கேட்கிறாயா?
அருகில் நானில்லாத கோபத்தில்
நம் குழந்தை உனை உதைக்கிறானா?
நீ சொல்வதை அவன் கேட்கிறானா?
அவன் சொல்வதை நீ உணர்ந்தாயா?
உன்னிதயத்தோடு அவன் இதயம்
துடிக்கும் சத்தம் கேட்கிறது.. அன்பே..!
இங்கிருக்கும் என் இதயத்தில்…!

என்னுயிரே...! என் தங்கமே..!
நாளை நம் ஜனநாயகத்திற்கு
வளைகாப்பு நாள். ஆம்
தேர்தல் நாள்..!
வாக்கு சீர் செய்திட
மறந்துவிடாதே செல்லமே..!
நம் மகளோ மகனோ
நாளைய இந்நாட்டு மன்னர்கள்.
நிம்மதியான நம் வாழ்விற்கு
ஜனநாயகம் பெற்றெடுக்கும்
அரசின் துணையும் தேவையே
என் செல்லமே...!

சின்னத்தை பார்க்காதே..!
சின்னத்திற்குரிய வேட்பாளன்
என்னத்தை செய்வான் ? என்று
அறிந்து தெளிந்து
நாட்டின் பிணிப்போக்கும்
மதச்சார்பு நோயற்ற
ஊழல் சதையற்ற
ஓர் ஆட்சி பெற்றிட
நம் பிள்ளையும் நீயும்
நல்லமுறையில்
வாக்களியுங்கள்..!


எனதருமை குட்டிம்மா...! -உன்
வயிற்றில் விளையாடும்
நம் பிள்ளைக்கு
தொந்தரவு இல்லாமல்
அதிராமல் குலுங்காமல்
பூப்போல உன் பாதத்தை
அடிமேல் அடிவைத்து
வாக்குச்சாவடிக்கு சென்று நீ
ஜனநாயக கடமையை ஆற்று..!
விரலில் இடும் மையில் நாட்டின்
உயிர் இருக்கிறது கண்ணே..!

மீண்டும் அடுத்த
மடலில் காதலுடன்
வருகிறேன்…!

இப்படிக்கு,
பல கோடிகள்
தாண்டிய ஆசைகளுடன்
பலப்பல கோடி
உணர்வு முத்தங்களுடன்
உன் கணவன்
மலேசியாவிலிருந்து......!

--------------------------------------------------------------------
-

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (27-Apr-14, 10:25 pm)
பார்வை : 89

மேலே