சிறப்புக் கவிதை 48 திஜோசப் ஜுலியஸ் ரயில் சாளரக் காட்சி
அளந்த செம்மன் செம்மிய மலையினைப்
பிளந்து நடவு செய்ததைப் போலவே
சரிவில் சரசர சரசம் செய்தன
சரியாய் ஆறு தென்னை மரங்கள்.
காதுமடல் வழி வீசிடுங் காற்று
குறுகுறு வென்று குளிரை ஈந்தது
சாதுவா யென் கைகட்டிட வைத்து
விறுவிறுப் புலகம் கூட்டிச் சென்றது.
நீலப் போர்வையை நீளமாய் விரித்து
தன்நிறம் மாறிய அடுக்கு மலைகளைத்
தூங்கிடச் சொல்லி தூரிகை வானம்
மஞ்சள் குழம்பினை மிளிரச் செய்தது.
வக்கா வக்காவெனக் கத்திப் பறந்த
வெள்ளாங் குருகுகள் குளத்தினை விட்டு
அக்காக் குருவிக்கு போட்டி தானென
முக்கிப் பறக்க முயன்று தோற்றன.
பீலியைக் கொண்டு வருடும் தென்றலும்
சீலம் பிதுங்கிடும் சோலைகள் எழிலும்
குமரியின் எல்லையைக் கடந்த பின்னரும்
குமிழ்ப்புடன் நெஞ்சில் கூடாரம் அடித்தன..