சிறப்புக்கவிதை 47 பழனிகுமார் ஓவியமான ஓர் காவியமே

குளத்தின் அருகில் குடமுடன் ​குமரி
குளித்து முடித்த குற்றால அருவி !
குளிர்ந்த நெஞ்சுடன் கூரிய பார்வை
குளுகுளு வண்ணமுடன் ஒருபாவை !

குனிவிழி வழியுது கனிரசம் நிரம்பி
குனட்டு குணவதி குறுநகை அரும்பி !
குணிமிகு மங்கையின் நலம் விரும்பி
குறிப்பறிந்து குனகுவாள் மனம் ததும்பி !

​கயல்விழி அவள் களிப்பின் விளிம்பிலா
இயல்பான அழகுள்ள இயற்கை வடிவிலா !
நயமுள்ள நங்கை நாணத்தின் நாணலா
வயப்பட்ட வாலிப நெஞ்சின் நினைவிலா !

ஓவியமாய் அமர்ந்துள்ள ஒரு காவியமே
ஓரவிழிப் பார்வை ஓராயிரம் சொல்லுதே !
ஓடையின் ஓரத்தில் ஒதுங்கிட்ட மயிலே
ஓங்கிடும் உன்குரலை ஒலித்திடு குயிலே !

மனங்களை மயக்கிடும் மங்கையே சொல்லடி
மனதில் மறைந்துள்ள உன் மன்மதன் யாரடி !
காதலால் கவர்ந்திட்டு கரம்பிடிப்பவன் எவனடி
காந்தமாய் இழுத்திட்ட கன்னியும் நீதானடி !

( குனி =வில் , குனட்டு = குறும்பு )
( குணி =நற்பண்புடையவள் )
(குனகுதல் = கொஞ்சி பேசுதல் )

எழுதியவர் : பழனிகுமார் (27-Apr-14, 10:18 pm)
பார்வை : 72

மேலே