பிரிவின் வலி

இதுதான் நம் கடைசி சந்திப்பு
என்று உணராத அந்த கடைசி சந்திப்பில் கூட
நாம் இருவரும் சிரித்ததாய் நினைவிலில்லை..
நீ பிரிந்து சென்ற கனம்கூட
எதையும் உணரவில்லை நான்..
இனி பார்க்கவே முடியாது என்று உணரும்போதுதான்
ரணமாய் வதைக்கிறது..
மரணம் ஒன்றும் அத்தனை ரணமாய்
இருக்கப்போவதில்லை என்று உணர்த்திவிடுகின்றன..
நேசித்த ஒருவரின் நிராகரிப்பிலும் விலகலிலும்
வாழும் ஒவ்வொரு நொடிகளும்..
மழைக்கால பின்னிரவு ஊதக்காற்றின் உந்துதலில்
ஈரத்தை சுமந்தபடி சலனமில்லாது மிதக்கும் சருகாய்
உன் தீரா நினைவுகளுடன் கடத்தி நகர்கிறேன்
ஒவ்வொரு தனிமை இரவையும்..
அத்தனையும் ஆனாலும்...
வாழ்வு அலுத்துப்போகும் கனங்களில்
நீண்ட தனிமையில் இருக்கும்
இலையுதிர்கால நிர்வாண மரங்களில் தோன்றும்
ஒரு இளம்பச்சை தளிர் காத்திருத்தலின்
நம்பிக்கையை விதைத்துப் போகிறது..
எதுவுமே நடக்கப்போவதில்லை என அறிந்தும்..!