ஏதாச்சும் செய்யணுமே

மேனியெல்லாம்
வாய்களாக
பிளந்து கிடக்குது பூமி..!!
மரங்களாக
மாற்றம் கொள்ள
ஏங்கிக் கிடக்குது வெதெங்க..!!
பட்டுப் போன
மரம் அங்கே
வேர் பரப்பிக் கிடக்குது..!!
வெட்டுபட்ட
மரம் ஒண்ணு
வெடிச்சு போயி கிடக்குது..!!
குளம் ஒண்ணு
மீனெல்லாம் திண்ணு
முள்ளு கக்கி வச்சுருக்கு..!!
கொலகார வெயிலு
உசுரயெல்லாம்
தேடிப் பிடிச்சு கொல்லுது..!!
ஓடி ஒளியுது
எறும்புக் கூட்டம்
கெடச்சதெல்லாம் அள்ளிக்கிட்டு..!!
ஒடஞ்சு போன
நத்தக் கூட்ட
ஓய்விடமா வச்சுகிட்டு
தேடி பாக்குது ஒரு வண்டு
தெச எங்கும்
பறந்து பாத்து
ஏமாந்து
திரும்பி வந்து பதுங்கிக்குது..!!
காஞ்சு போன
மண்ண சீச்சி
கட்டையா போன
புழுவ கொத்தி
ஒடஞ்சி உதுந்து
விழக் கண்டு
ஒட்டுன வயித்தோட
உசுரோட்டம் இல்லாம
கர ஒதுங்கப் பாக்குது
ஊரோரம் காகம் ஒண்ணு..!!
முப்போகம்
பாத்த பூமி
மூலைக்கு மூல
காவேரி பாஞ்ச பூமி..!!
வழியெல்லாம்
நெல்லு புல்லா
வளந்து கெடந்த பூமி..!!
பாக்கும் தெசயெங்கும்
பச்சையாவே
தெரிஞ்ச பூமி
பசியறியா
பறவைங்க
பறந்து திரிஞ்ச பூமி..!!
மரத்து
இலையெல்லாம்
குலுங்கிக் கெடந்த பூமி
பல வண்ணப்
பூவெல்லாம்
சிரிசிருந்த பூமி..!!
வானம்
பாக்காத பூமி
வெயிலுக்கும்
வேகாத பூமி..!!
மீத்தேன்
எடுக்க வந்ததுமே
வாயப் பொளந்து செத்ததென்ன..!!
பூவக் காணலியே
புல்வெளியைக் காணலியே
ஆறக் காணலியே
அதோட தடத்தையும் காணலியே
வரப்பக் காணலியே
வயல்வெளியும் காணலியே
மாறும் அந்த
வானிலையும் காணலியே
தேடிப் பாத்தாலும்
எதுவுமே காணலியே..!!
தலமுற தலமுறையா
வாழ்ந்துவந்த
மனுசப் பயகூட்டம்
போனதெங்கே தெரியலியே
அவன் வளத்த
மிருகமெல்லாம்
வாழ்ந்த தடமுந்தான்
தேடியும் கெடக்கலியே..!!
வழிமுற செஞ்சு வச்சி
கட்டிவச்ச நிலக் கோட்ட
சிதஞ்சி விழப் பாக்க
முடியாம போனாங்களோ..!!
சீரழிஞ்சித்தான் செத்தாங்களோ..!!
அடுத்த
தலைமுறைக்கு
போயித்தாய் நான் பாத்தேன்
எவனோ
பணத்த தோண்டி எடுக்க
பலி போட்டு வச்சுருந்தான்
பல எனத்து உசுரையும்
உசுரான நெலத்தையும்..!!
பிடி
சோறு இல்லாம
சோழ நாடு
பாழாப்போக
பாக்கக் கண்டு
பதறி அடிச்சு
ஓடிவந்து
பாத்தத பாத்தபடி
எழுதிவச்சேன்
மனசு தாங்காம..!!
பாத்ததெல்லாம்
வெறும்
கனவாகிப் போக
ஏதாச்சும் செய்யணுமே..!!