வாழா வாழ்வு - கே-எஸ்-கலை

ஏதுமில்லை ஏதுமில்லை
இந்த வாழ்வில் ஏதுமில்லை !
சூதுமில்லை வாதுமில்லை
சொத்து சுகம் போதவில்லை !

காசுபணம் இல்லையென்றால்
கணக்கெடுக்க நாதியில்லை !
சொத்துசுகம் சேர்த்தபோதும்
சொந்தவாழ்வில் சோதியில்லை !

அந்தி வானம் கண்டதில்லை !
ஆற்றங்கரைப் போனதில்லை!
வாசல் வந்து நின்றதில்லை
வாசப் பூக்கள் ரசித்ததில்லை !

பிள்ளை முகம் தொட்டதில்லை
ஆசை முத்தம் பெற்றதில்லை !
மனைவி மடி சாய்ந்ததில்லை
மரணம் வரை ஓய்ந்ததில்லை !

அயலான் நலம் கேட்பதில்லை
அவனும் முகம் பார்ப்பதில்லை !
அவசரமாய்ச் செத்துப் போனால்
அள்ளிப் போக யாருமில்லை !

ஓடி ஓடி உழைத்துப் போவார்
தேடி தேடி களைத்துப் போவார்
ஆயுள் முடிந்துப் போகும் நாளில்
ஆறடியே கொண்டு போவார் !

வாய்க்கரிசி போடும்வரை
தேவையிங்கு ஓய்வதில்லை !
வாழ்க்கை முடிந்து போகும்வரை
யாருமிங்கு வாழ்வதில்லை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (28-Apr-14, 11:32 pm)
பார்வை : 163
மேலே