சிறப்புக்கவிதை 13-கூழாங்கற்கள் - நகதுறைவன்

கூழாங்கற்களின் வழவழப்பு போல நேசங்களின் தன்மையை வரையறுத்துப் பார்க்கின்றது ந.க .துறைவனின் கூழாங்கற்கள் என்னும் புதுக்கவிதைகள்...

விரிதல் மற்றும் குறுகுதல் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தூக்கிப்பிடித்தலில் தொங்கு பாலமாக வளைந்து கிடக்கின்றது இந்த நேசம்... இந்த நேசத்தின் பிடிகளில் தான் பிணைந்து வைக்கப்படுகின்றது உறவுகளின் தொடக்கங்களும் முடிவுகளும் ...

எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்பதற்குள் , முதுமையின் கைபிடித்து நடக்கத் தொடங்கிவிடுகின்றது வாழ்க்கை....அதுவரையில் பார்த்த முகங்கள் , பழகிய முகங்கள் , தவறவிட்ட முகங்கள் ,தவறித் தேடிய முகங்கள் ,உறவு முகங்கள் ,முறிந்த உறவு முகங்கள் என்று உள்ளூரச் சிதைகின்றது மனம் ..அதன் நிழல் படர இருளுகின்ற மரணப்படுக்கையில் எந்த அர்த்தங்களையும் தேடிக்கொண்டிருப்பதில்லை உணர்வுகள்.....

இங்கு கவிஞர் நேசிப்பின் புரிதலை , அறிதலை , தெரிதலை உணர்கின்றார் தனது வரிகளின் மூலம் உணர்த்துகின்றார் ....
இந்த நேசித்தலில் சின்னதும் பெரியதுமாக எத்தனை எத்தனை வருத்தங்கள் , கோபங்கள் , பிரிவுகள் ..எதிர்ப்பார்ப்பு , நம்பிக்கை இவற்றின் பின்னடைவுகளில் முறிந்துவிடக் காத்திருக்கின்றது ஒவ்வொரு நேசங்களும்....காலத்தின் போக்கு , சூழ்நிலை மற்றும் வாய்ப்பு இம்மூன்றுக்குமான இடைவெளிகளில் நேசங்கள் தங்களின் பிறழ்வுகளை உருக்கி நிறைத்துவிட்டுப் போகின்றன வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு ....

ஒரு பிரிதலின் மூலம் நேசத்தின் பலம் மற்றும் பலவீனம் பற்றிக் கூறுவதில் தொடங்குகின்றது கவிதை....பிரிதல் உறவுகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் பலம் .....அதேபோல் பிரிந்தவரை இறுதிவரை சேர்க்காமலே தோற்றுவிடுதல் அதன் பலவீனம்....பிரச்சனைகள் யாவுமே நான் வருகிறேன் என்று உரத்த குரல் எழுப்புவதில்லை....கையாளப்படும் விதங்களின் சூட்சுமம் அறியாதவர் தவறிழைத்தவராகிறார்....இப்படிப் பிரிந்தவர் மீண்டும் எங்கேனும் சந்திக்கவேண்டி வரும் போது பேசலாம் அல்லது பேசாமலும் திரும்பிவிடலாம் ஏதோ ஒரு காரணத்தின் பிடியில் இருவரும் விடுபடத் தயாராகுவதில்லை.....எனில் சேர்ந்தால் புதுப் பூவொன்று மலர்வதாய் நேசம் மடல்கள் விரிக்கின்றது ...இல்லையெனில் மீண்டும் பிரிவதில் எல்லாவற்றையும் பிரித்துக்கொண்டு மொத்தமாக தனது வழியை நோக்கிப் புறப்படுகையில் அதனை துறவாகக் கொள்கின்றது நேசம்....தனித்திருப்பதன் பொருளிலும் விளங்கிக்கொள்ளப்படுகின்றது துறவின் ஆணித்தரம் ....

தவிர்க்க முடியாத ஒன்று காதல்..நேசத்தின் களிப்புறவாக அரும்பத் தொடங்குகின்றது காதல்....நேர்மையான நேசிப்பு ..ஒளிவு மறைவில்லாத எதார்த்தங்களின் வழியே கண்கொண்டு பார்க்கின்ற நேசிப்பு...இதில் சமயம் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை காதல்....அதன்படி காதலை முரண் என்கின்றது கவிதையின் மையம் ...எதிர்பாராக் காதல் முரணாகவே சித்தரிக்கப்படுகின்றது இருவேறு எண்ணக்கூறுகளுக்கிடையில்....

"குழந்தைகளின்
நேசிப்பில்
எந்தக் கல்மிஷமும்
இருப்பதில்லை.
கூளமாய் மண்டிக்
கடக்கிறது
மனிதர்களின்
நேசிப்பில்
ஆயிரமாயிரம்
கல்மிஷங்கள்…!! “

இறுதியில் இப்படித்தான் அர்த்தப்பட்டுப் போகின்றது நேசம் ....குழந்தைகளின் நேசிப்பில் காணமுடிகின்ற தூய்மையை அதே குழந்தை மனிதனாய் மாற்றம் காணும்போது , அவனது நேசத்தின் பருமனில் கூளங்களே மண்டிக்கிடக்கின்றதாய் சலித்துக்கொள்கின்றது கவிதையின் தீர்வு....புதுக்கவிதைகள் மூலம் நேசங்களின் முனைகளைக் கூர்தீட்டிப் பார்க்கின்றது "கூழாங்கற்கள்".....

எழுதியவர் : புலமி (30-Apr-14, 12:10 am)
பார்வை : 91

மேலே