வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 24

கவிஜியின் அடுத்த கவிதை....

"இரகசியக் குறியீடு".


குறியீடுகளே...இரகசியமானவை. அதிலும் இது...
இரகசியக் குறியீடு. நுட்பமாகத் துவங்குகிறது...
இந்தக் கவிதை.

"அவளின் இரகசியக் குறியீட்டில்...
என் பெயர் இரகசியமாகவே வைக்கப்படுகிறது".

கடவுளைப் போலவே....தன்னை ஒளித்துக் கொண்டு விடுகிறது...எந்தக் காதலும். உணர்வுகளால் ஆனதானாலும்...தன்னை வெளிப்படுத்த விரும்புவதே இல்லை...எந்தக் காதலும். இரகசியமாகவே வைத்துக் கொள்கிறது...
விரும்புவதையும்...விரும்புபவனையும்.

"....முத்தங்களில் தேங்கிவிடும்
காலம் எனது...
ஓடிவிடும் காலம் அவளுடையது..."

காதலின் நினைவுகளால்....தேங்கிவிடுகிறது காலம். பெண்மையைப் போல் இயல்பாய் இருப்பதில்லை ஆண்மையின் காதல்.
தவித்தலும், தன்னிலை மறத்தலும்...ஆகிவிடும்
ஆண்மையின் காதலைப் போல் அல்லாமல்...
இயல்பாய் காலத்தினூடே தன்னை இழக்காமல்
பயணிக்கிறது...பெண்மையின் காதல்.

ஊடலில் துவங்கி...இனிமையாய்ப் பயணிக்கும்...
இந்தக் காதலில்...

"புரிந்து கொள்ள என்ன இருக்கிறது...
விழிகளில் ஊடுருவும் நொடிகளில்"...

என்கிறார் கவிஜி.

என்னைப் பொறுத்த வரை...அதில்தான் ஒளிந்திருக்கக் கூடும் புரிந்து கொள்ளவே முடியாத காதல்.
மாற்றி...மாற்றி...எத்தனை பேர் எத்தனை விதமாய்..."அண்ணலும் நோக்கினான்...அவளும் நோக்கினாள்..." என எழுதத் துவங்கிய காலத்திலிருந்து...எழுத ஆசைப் படும் யாரையும்
தன் மாயக் கட்டிற்குள் வைத்திருக்கும் இந்தக்
காதலைப் புரிந்து கொள்வதில் சிரமம்தான் இருந்திருக்கும் யாருக்கும்.

கடைசியாய்...

"அவள் என்னும் பறவைக்காக
எனது இரகசியமாய்ப்
பாதுகாக்கப் படுகிறது என்னுயிர்"...


காதலின்...தன்னிலை மறத்தலில்...அவளின் இரகசியக் குறியீட்டில்...அவளுக்காக...இரகசியமாய்ப் பாதுகாக்கப் படுகிறது...காதலனின் காதலும்...காதலனின் உயிரும்...என முடித்திருக்கிறார்...கவிஜி.

வாழ்வில்...அநேகமாய் எல்லோரும் கடந்து வந்திருக்கும் ஒரு விஷயத்தை...கவிதையாக்கி இருக்கிறார் கவிஜி.
எல்லோருடைய வாழ்விலும் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியக் குறியீட்டை...கவிதையால் திறந்து...நம்
நினைவுகளை நனைக்கிறார்.. கவிஜி. வெகு இயல்பான உணர்வான காதல்...வெகு இரகசியமாய்ப் போற்றப்படும்...நம் கலாசாரத்தின் தன்மையை அழகாகச் சொல்லி இருக்கிறார் கவிஜி.

இலையுதிர் காலங்களுக்கும் பசுமையை நிரப்பிச் செல்லும் இந்தக் கவிதையை....

என் கண்களில் பூசிக் கொள்கிறேன்...
பழைய பசுமைகளை...நிரப்பியபடி.

மீண்டும் வருவேன்...
காலத்தின் பெரும் துணையோடு.

எழுதியவர் : rameshalam (29-Apr-14, 6:12 pm)
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே