ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -6
தானப் பொருத்தம்.
”ஐ” என்ற தனி எழுத்து அரசன், அழகு, ஐந்து எனப் பொருள் தரும். அரசன், உபாத்தி, தாய், தந்தை, தமையன் ஆகியோர் தமிழில் ஐங்குரவர் எனப் போற்றப் பெறுகின்றனர். மெய், வாய், கண், மூக்கு, செவி, எனும் ஐம் புலன்களும் உண்மையில் அறிவு வாயில்கள் ஆகும். ஆனால் வள்ளுவரின் பார்வையில் இவை ”பொறிவாயில்” என ஆசையின் ஊற்றுக்கண் ஆக சித்தரிக்கப்படுகிறது. மேலும் ஐந்து என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவை ஐங்கரன் ஆகிய பிள்ளையாரும், குமரகுருபரர் சொல்லும் “மாசிலாமணி”யும்., சிவஞானச் சித்தர்கள் சொல்லும் “நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரமும் ஆகும். இவ்வாறு ஐந்து என்ற சொல் தமிழில் மிகச் சிறப்பான இடம் வகிக்கிறது. இடம் என்பதை கணிதத்திலும் இலக்கணத்திலும் நாம் தானம் என்கிறோம். கணிதத்தில், முதல் (ஸ்)தானம், இரண்டாம் தானம் எனச் சொல்வது போலவே இலக்கணத்திலும் எழுத்துக்கள் அமைந்து இருப்பதை தானம் என்கிறோம்.
தமிழ்ப் பாக்கள் எழுதும்போது குற்றெழுத்துக்கள் ஆகிய அ இ உ எ ஒ ஆகிய ஐந்துடன் அவற்றினை ஒத்த நெடில் ஆகிய அஆ இஈ உஊ எஏ ஒஓ என்பவற்றுள், இ வருத்தானத்தில் ஐயும் உ வரும் தானத்தில் ஒளவுமாகச் சேர்ப்பது ஐந்தானமாகும். இதுவே தானப் பொருத்தம் எனப்படும். இவை முறையே பாலன், குமரன், இராசன், மூப்பு, மரணம் என ஐம் பெயரிட்டு மங்கலச் சொல் முதல் எழுத்து மூப்பு எனும் தானத்திலும் மரணம் எனும் தானத்திலும் வரின் தகாதென்றும் தவிர்த்தல் வேண்டும்.
உதாரணமாக, கம்ப இராமாயணத்தில் பாட்டுடைத் தலைவன் இராமன் என்பதால் இகரம் வரும் தானம் பாலதானமாகக் கொண்டு கம்பர் எடுத்த மங்கலச் சொல் என்று உலகத்தின் முதல் எழுத்து குமார தானம் ஆயிற்று எனக் கொள்ள வேண்டும். இப்படி வகைப்படுத்தும் முறை, அஆ-பாலன், இஈ-குமரன், உஊ-ராசன் எஏ- விருத்தன் (மூப்பு) ஒஓ-மரணம் என சொல்லப்பட்டது. பாட்டுடைத்தலைவன் பேர் முதல் எழுத்தை அகர ஆகாரமாய்க் குறித்து மொழிக்கு முதல் எழுத்தளவே, தானத்தடைவே அந்தாதியாய் எண்ணிப் பால குமார ராச ஆகியவை பொருந்தும் தானம் என்றும் விருத்தன் (மூப்பு), மரணம் இவை பொருந்தா தானம் என்றும் கொள்ள வேண்டும்.
இந்த தானப் பொருத்தம் பற்றிக் கூற வந்த முத்து வீரியம்,
அ ஆ இ ஈ ஐயு, உ ஊ
ஒளவும் எ ஏ ஒ ஓ என்றிவை
பாலன் குமரன் இராசன் மூப்பு
மரண முறையே ஐந்தும் எண்ணும்
மூப்பு மரணமும் முதற்சீர்க்காகா.
இதனையே சற்று விளக்கமாக கூற வந்த பொருத்த விளக்கம்,
குறில் நெடில் இரண்டா இஉஐ ஒளக்கொள
அறிதரப் பகுப்புழித் தானம் ஐந்தே.
அவைதாம்
பாலன் குமரன் அரசன் மூப்பு
மரணம் என்மனார் மாணு மோரே.
பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் முதற்கண்
நாட்டிய வக்கரம் பால னாக்கிப்
போற்றிய மங்கலப் பொருத்தச் சொல்லில்
காட்டிய முதலக் கரம்வரு காறும்
எண்ணுழிப் பாலனும் குமரனும் அரசனும்
நண்ணுழி நன்மை என்மனார் புலவர்.
மூப்பும் மரணமும் தேதென மொழிப..
தானம் என்பதற்கு கொடை, தேன் நீராடல், மதம், யானை மதம் எனப் பிற ஐவகைப் பொருளும் கூறுவர் ஆயினும் தானம் இங்கு எழுத்தின் இடத்தை, சேரும் இடத்தைக் குறிப்பிடுவது ஆகும். “சேரிடம் அறிந்து சேர்” என்பர் பெரியோர். நல்லோருடன் சேர்ந்தால், நட்பு கொண்டால், நல்ல குணம் வரும். நற்குணம் வந்துவிட்டால், மோகம் அகலும். மோகம் அகன்றால் மனச் சஞ்சலம் தீரும்., மனச் சஞ்சலம் தீர்ந்தால் வாழ்வில் விடுதலை அல்லது முக்தி பெறலாம் என்பதையே,
சத் சங்கத்வே நித் சங்கத்வம்
நித் சங்கத்வே நிர் மோஹத்வம்
நிர் மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி. என்கிறார் சங்கரர்.
சத் சங்கம் என்பது ’சத்’ உண்மையைக் குறிப்பது. ஆங்கிலப் பழமொழி ஒன்று உள்ளது. “உன் நண்பன் யாரெனச் சொல், நீ யாரென நான் சொல்கிறேன்” என்பதும் இதனையே குறிக்கிறது. சேர்க்கை என்பது எப்படி முக்கியத்துவம் அடைகிறது எனின், சேர்க்கையினால், நமது குணம் மாற்றம் அடைந்து முந்தைய நிலை மாறி, புதிய நிலைக்கு சென்று விடுகிறது. மஞ்சள் வண்ணத்துடன் நீல வண்ணத்தைக் குழைத்தால், பச்சை வண்ணம் கிடைக்கிறது. நிறமற்று நிலத்தில் விழும் மழை நீர் கரிசல் மண்ணில் கரிய நிறமும், செம்மண்ணில் விழும்போது செந்நிறமும் பெறுவதை நாம் காண்கிறோம். தனக்கென தனி வண்ணம் இல்லாத நீர் சார்பு காரண்மாக வண்ண மாற்றம் அடைதல் போல் மனிதரும் இறைவன் மீது அன்பு கொண்டால், எண்ண மாற்றம் அடைவர் என்பதையே ‘சத் சங்கம்” என்கிறோம்.
பதி என்பது இறைவன், பசு என்றால் உயிர், பாசம் என்பது மண் பெண் பொன் ஆகிய மூன்று மலங்கள் ஆகும். இதில் பதி சத்து நிலையானது, பச்நம் எனபது அசத்து- நிலையற்றது. உயிர் அதாவது பசு ஈவற்றில் எதைச் சேர்கிறதோ அதன் தன்மையை அடைகிறது. எனவே அதனை சத சத்து என்பர். எனவேதான் இறைவனைப் பற்றி யோசிக்கும் உயிர் அறிவு பெறுகிறது. உயிர்கட்கு நிரந்தரமான நிலையாமையால், அறிவு இன்மையால், இறைவன் ஒருவரே சத்து சித்து ஆனந்தப் பரம்பொருள் ஆகிறார். அவரே பேரறிவாளன். என்பர். அதனாலேயே வள்ளுவர் “வாலறிவன்” என்பார்.
சேருமிடத்தில் வசதி போல் சேர்ந்து விட்டுப் பின் தூக்கி எறிந்து விடுவதிலும் பயன் இல்லை. சேருமிடத்தில் நிலைத்து இருக்க வேண்டும். “ நானே திராட்சைக் கொடி, நீங்கள் அதன் கிளைகள். நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் நிலைத்து இருப்பின் மிகுந்த கனி கொடுப்பீர்கள். நான் இன்றி உங்களால் ஒன்றும் செய்ய இயலாது” (யோ:15:5) எனும் கிறிஸ்துவின் அருள் மொழிகளும் இதனையே வலியுறுத்துகின்றன.” தம சோமா ஜ்யோதிர்கமய”-- இருளிலிருந்து ஒளிக்குச் செல்லவே நாம் விரும்ப வேண்டுமே அல்லாது ஒளியில் இருந்து இருளுக்குச் செல்வதை அல்ல என்பதையே சத் சங்கத்திற்கு மாறானது குசங்கம் –தவறான சேர்க்கை எனச் சொல்லப்படுகிறது.