சிறப்புக்கவிதை-34 உதிரும் மனிதம் ரத்னமூர்த்தி கவிதைகள்

சிறப்புக் கவிதைகள் குறித்தான விமர்சனத்தில்...
என்னையும் பங்கு கொள்ளும்படி திரு.அகன் சார்
என்னிடம் கேட்ட பொழுது எனக்கு சந்தோஷமாகிவிட்டது. தளத்தின் மிகச் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து எனக்குப் படிக்கக் கொடுத்து...என் கருத்தையும் ஒரு பொருட்டென மதித்துக் கேட்பது......என் தவங்கள் வரங்களாகிக் கொண்டிருக்கின்றன இந்த எழுத்துத் தளத்தில்.

இரத்தின மூர்த்தியின் கவிதைகளை நான் தளத்தில்
வாசித்து வந்துள்ளேன். மூன்று தொகுப்புகள் வெளியிட்டுள்ள ஒரு இளைஞர், திரைப்படத்துறையில் கண் பதித்துள்ளவர், நிறைய
வெகு ஜன, இலக்கியப் பத்திரிக்கைகளில் தன் கவிதைகள் வரக் கண்டவர்...என நான் அறிந்த அளவில்...இரத்தின மூர்த்தியின் கீர்த்தி பெரிதுதான்.

எனக்காக அளிக்கப்பட்ட இரத்தினமூர்த்தியின்
இந்தக் கவிதையும்..."உதிரும் மனிதம்" அதையேதான் உறுதி செய்கிறது.
வளரும் நூற்றாண்டுகளில் தொலையும் மனிதம் குறித்து...எல்லோரையும் போலவே அவருக்கும் கவலை இருக்கிறது. கவிஞரானபடியால்...எல்லோருக்கும் அதை உணர்த்திச் சொல்லும் திறமையும் இருக்கிறது.

கவிதை...அத்தனை அழகாகத் துவங்குகிறது.

"தனது கூட்டைத் துறக்கும் பறவையானது
சுயநலச் சிறகுகளை உதிர்த்துவிட்டு
பறக்கிறது கூட்டிற்குத் துணையாக"....

தான் வசிக்கும் உலகத்தில்...சுயநலச் சிறகுகளை உதிர்த்து விட்டு...அவைகளை தான் வாழும் கூடான உலகிற்கெனப் பரிசளித்துவிட்டு...உலகம் விட்டு நீங்குகிறது மனிதம்...ஒரு பறவையென.

எல்லாக் கூடுகளிலிருந்தும் நீங்கும் மனிதம்
சுய நலச் சிறகுகளை பூமியில் உதிர்த்தபடி இருக்கிறது.ஆனால்-

"கூடுகளோ பறவைகளுக்காகக்
காத்திருக்கின்றன".

...... உலகம் மனிதத்திற்காகக் காத்திருக்கிறது. மனிதமோ சுயநலத்தை பூமியில் உதிர்த்தபடி நீங்குகிறது...சுயநலங்களை வரவேற்கும் மனிதர்கள் நிரம்பிவிட...

உலகில்
சுயநலங்களே வசிக்கின்றன. இப்போது இந்தப் பூமி..மனிதமற்ற கூடாகி விட...

"நாம் பறவைகளற்ற
கூடுகளாகிறோம்"....


...........நாம் என்ன செய்யப் போகிறோம்?...என்ற கேள்வியை நமக்குள் எழும்பச் செய்தபடி இந்தக் கவிதையை நிறைவு செய்திருக்கிறார் ரத்தினமூர்த்தி.

வாழ்தலின் அர்த்தம் என்பதே..."தான் வாழ்தல்" எனச் சுருங்கி விட்ட உலகத்தின் முன்பு இந்தக் கேள்வியை வைத்திருக்கிறார் இரத்தினமூர்த்தி.
சுயநலங்களை மட்டுமே...வாழ்ந்ததின் பலனாக
விட்டுச் செல்லும் மனித சமூகத்திடம் மனிதத்தின் அர்த்தம் குறித்து... வருந்தும் காலத்தின்.. பதிலற்ற கேள்விகளை எளிமையான வரிகளால்...எழுப்பிச் சென்றிருக்கிறார் இரத்தினமூர்த்தி. சுயநலங்களோடு வளர்வதையே...வாழ்தலின் பிறப்புரிமையாகக் கொண்டாடும் சமூகத்திடம்...
ஒரு எளிய புரட்சியாளனாகத் தன் வருத்தங்களை முன்வைத்திருக்கிறார் இரத்தினமூர்த்தி.

வாழ்வின் உன்னதங்களை இழந்துவிட்ட உலகில்...
இது மாதிரியான எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலமாகவே...தன் மனித நேயப் பண்பினையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இரத்தினமூர்த்தி. கவிதை என்பது கற்றவனின் ஆயுதம் என்பதை உரக்கச் சொல்லியிருக்கும் இரத்தினமூர்த்தியின் இந்தக் கவிதைக்கு வாழ்த்துச் சொல்லி அவரின் வெற்றிகளை அவரது இந்த எண்ணங்களே தரும்
என்பதையும் இந்தப் பகுதியில் நான் நம்பிக்கையோடு பதிவு செய்கிறேன்.

நல்ல கவிதையைத் தந்த கவிஞருக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : rameshalam (30-Apr-14, 4:05 pm)
பார்வை : 171

மேலே