மேமே தினம்

ஒரு கோணல் வீதியில்
கொண்டை ஊசி விற்கப் போனவன்
வீடு திரும்பினான்
கிழிந்த ஆடைகளோடு....

அந்தி சாயும் வேளையில்
ஆல மரத்தடியில்
துண்டை விரித்துப் படுத்துக்கிடந்தான்
பாய் விற்பவன்...

அள்ளி அள்ளிச் சுத்தம் பண்ணினான்
அழுக்கேறிய ஆடைகளோடு
தள்ளித் தள்ளியே சென்றன
வெண்ணிற ஆடை மனிதங்கள்...

மெய் வருத்தக் கூலி இல்லை
பொய் பொருந்தக் கூலி வரும்
மினுக்கும் விளம்பரங்கள்
கணக்கின்றி கால நேரமின்றி...

செல்வத்தில் மிதந்தவர்கள்
சில்லறையையும் விட்டு வைக்கவில்லை
அந்தரத்தில் ஆடுது
கூடையில் கூவி விற்போர் வாழ்க்கை...

கோடிக் கோடி என்றனர்
அவனுக்குத் தெரிந்ததெல்லாம்
அந்தத் தெருக் கோடியும்
அடுத்த வீட்டுத் தனுக்கோடியும் தான்...

மேய்ப்பவன் கரங்களில்
ஓய்வின்றி உளைச்சலின்றி
உழைப்பவன் பாடு
என்றும் மே... மே...தினமே

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (30-Apr-14, 8:34 am)
Tanglish : maay maay thinam
பார்வை : 225

மேலே