பாட்டி இல்லாத வீடு

பாட்டி பாக்கு இடிக்கும்
சத்தமே – எங்களுக்கு
அதிகாலை எழுப்பும் மணி!

அப்பா அடிக்க
வரும்போதெல்லாம்
பாட்டியே எனக்குப்
பாதுகாப்பு வளையம்!

கண்ணாடி விளக்கோடு
காலைவரை
காவல் செய்வாள்
கன்றையும் மாட்டையும்!

ஆடு கோழி கூட
அவள் சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் அறிந்த
பாஷைகளோ பல…

கால்மேல் கால் போட்டு
யார் இருக்கக் கண்டாலும்
நினைத்துக் கொள்வேன்…
“அன்போடு கண்டிக்க
அவர்களுக்கு ஒரு
பாட்டி இல்லையோ?” என்று

திருநீறு பூசி உச்சி முகர்ந்து
சிறுபிள்ளையாய்
கையசைக்கும் பாட்டி
தாத்தா சாவிற்குப்பின்
நான் ஊருக்குக் கிளம்பும்
வேளைகளில்
எதிரே வராததில் இருக்கிறது
அவளது அறியாமையும்!
என் மேலுள்ள
அளவற்ற அக்கறையும்!

பாட்டியின் ஆசையே
என் திருமணத்தைப்
பார்ப்பதும்
பின் இறப்பதும் தான்!
காரணம் கேட்டால்
“செத்தால்தான்
உனக்குப் புள்ளையாகப்
பொறக்க முடியும்”
என்பாள் அந்த மகராசி!

கால ஓட்டத்தில்
இல்லாமல் போனது
மண்பானை சமையல்
மக்காச்சோளக்கூழ்
மரக்குதிர் மட்டுமல்ல!
தன் கைவைத்தியத்தால்
பல நோய்களை
எங்கள் வீட்டுப் பக்கமே
வராமல் செய்த
என் பாட்டியும்தான்!

பாட்டி கொடுத்த கசாயம்
அன்று கசந்தது
ஏனோ இன்று
இனிக்கிறது!

இப்போதெல்லாம்
அடிக்க ஓங்குகின்ற அப்பா
அழுதே விடுகின்றார்
தடுக்க வராத
தாயை நினைத்து…

தாத்தா பாட்டி இல்லாத வீடு
இக்காலப் பெற்றோருக்கு
வேண்டுமானால்
சுதந்திரமாய் இருக்கும்!
ஒருபோதும்
(பேரப்)பிள்ளைகளுக்கு
சொர்க்கமாய் இருக்காது!

எழுதியவர் : நாவிஷ் செந்தில்குமார் (30-Apr-14, 11:47 pm)
பார்வை : 63

மேலே