உரையாடல்
ஒருவருக்கொருவர்
அறிமுகமாகி
வேலையின் தன்மை,
உடன் பிறந்தோர்,
ஊர் செல்லும் வழிகள்,
செய்தித்தாள் சலிப்பு,
திரைப்பட விமர்சனம்
என நட்பு பேசி…
நகர வாழ்க்கை,
பன்றிக் காய்ச்சல்,
காமன் வெல்த் ஊழல்,
வயல் வாய்க்கால்கள்,
இயற்கை வேளாண்மை,
அரசியல் நிலவரங்கள்
என சமூகமும் பேசி…
பல்கிப் பெருகிய
உரையாடல்
ஒன்று…
‘அவர்
உங்களுக்கு சொந்தமா?’
என்ற கேள்வியை
எதிர்கொண்டதோடு
முடிவிற்கு
வரநேர்ந்துவிட்டது!