பகுத்தறிவுப் பொக்கைகள்

வாருங்கள்
வானளந்த மதியீனங்களே
விதை பிளந்து
மரமூன்றிய கதையினை
ஒப்புவித்தல் கதைக்குதவாது

இவர்கள்
இப்படித்தானென்று
எதைக்கொண்டு
வெற்றிலை குதப்புகிறீர் ?!

வாய்ப்பூட்டுச் சட்டங்கள்
இயற்றும் வரை
சுருட்ட வழியில்லாத
வால்
சென்றவிடமெல்லாம்
தீமூட்டும்

அகல விரிந்த
நெஞ்சமாம் - அதில்
திண்ணையோரப்
பொல்லாங்குகள் தொடுப்பது
யார் காதுகளில் வைக்கவோ ?!

இருளகற்றப் பிறந்தவராம்
உயர்த்திப் பிடியுங்கள்
அரிக்கன் விளக்குகளை
இல்லையேல்
வெளிச்சம் அம்மட்டும்

எதுவெனச் சொல்வீர்
பகுத்தறிவென்று ?!

ஆற விரும்பாத
காயங்களெனத் - தையல்
பிரித்தலையா ?

சாதியின் பெயரைச் சொல்லி
சத்தமிட்டு
வழக்காடும் - உமது
கருப்பு அங்கிக்குள்
கிழிசல்கள் தொங்குவதையா ?!

கொள்ளுண்ட
குதிரைகளாய்த் திமிறாதீர்
எள்ளுருண்டைப்
பொறுமையென
நசுக்காதீர்

ஆதிக்கக் குரலும்
அடிமையாக்கும் குணமுமாய்
இரட்டைத் தலை
பூதங்களாய் - ஆளை
விழுங்கும் பேயன்களே ,

எது பகுத்தறிவென
ஆராய்வீர்
பின் கழற்றுவீர்
அழுக்கு முகமூடிகளை !

கனியில்லா மரத்தில்
கல்லடிகள் - இதுவென்று
பலமாகினர் சிலர்
கொழுத்தப் புழுக்களாய்
சதசதப்புத் திடலில் ..

கடவுளைக் கொல்லுங்கள்
முடியுமட்டும் - கணக்கில்
சேராது

எது பகுத்தறிவென
ஆராய்வீர் - பின்னர்
முழங்கட்டும்
புரட்சிப் பேரிகைகள் ...

சதை திரண்ட
வெறுப்பின் சுளைகளை
மூலிகைச் சாறாக்கி
விற்றதில் - உளப்பிணி
முற்றியவர் வைத்தியரோ ?!

எழுதி ஏட்டைக்
கெடுத்ததன் பிம்பங்களாகிப்
பாடம்புகட்டுவதாய்
விலையாகாதீர் - பகுத்தறிவின்
பெயரில்
பல்துலக்கும் பொக்கைகளே.....!

எழுதியவர் : புலமி (1-May-14, 12:06 am)
பார்வை : 115

மேலே