வெண்மை பூசிய எனது இரவுகள்-வித்யா

எப்போதெல்லாம் கருமை
அச்சுறுத்துகிறதோ...
அப்போதெல்லாம்
என்னிரவுகளுக்கு
வெண்மை பூசிக்கொள்கிறேன்.....!

எதையும் மறைக்காத
கணவன் தன் காதலியை
வர்ணிக்கும் போதெல்லாம்
பொய் புன்னகைக்கு
உயிர் கொடுத்து
மெய்க்கண்ணீரை
பொய்யாக மரிக்கச்செய்கிறேன்..........!

இறந்த கால நிழலொன்று
நிகழ்கால நிஜம் வீழ்த்தி
எதிர்காலம் சிதைத்ததை
அறிந்தவளாய் மௌனம் காக்கிறது
என் படுக்கையறை சுவர்கள்.......!

விதியென என்மீது
நீ காட்டும் தங்கமுலாம் பூசிய
கரிசணங்கள் சற்றே ஆறுதலானாலும்
ஒரு ஓரத்தில் வலிக்காமலில்லை......!

யாரோவாகிப்போன நான்
என்னவனின் அவனவளை
யாரோவென நினைக்கவில்லை......!

பொம்மை தொலைத்து அழும்
சிறு குழந்தையென பாவித்து அணைத்துக்கொள்கிறேன் உன்னை....!

உன்னை முழுதாய்
உள்வாங்கும் முயற்சியில்
தோற்று போன எனது நான்கள்......!

நான் நீயாக
நீளும் ஒவ்வொரு நீட்சியுடனும்
விஷத்தின் வீரியமும் அதிகரித்து
எனை கொல்லாமல் கொல்கிறது......

நீ நேசித்த
எல்லாவற்றையும் நானும்
நேசித்தேன்......
உன் காதலியையும் சேர்த்துதான்........!

நான் பூசிய வெண்மை சுமக்கும்
இரவுகள் என் கண்ணீர் குடித்த
நன்றிக் கடனுக்காக அனுதினமும்
கொஞ்சம் கொஞ்சமாக எனை கொன்று
என் காதலை காப்பாற்றி கொண்டிருக்கின்றன.......!

எழுதியவர் : வித்யா (2-May-14, 4:54 pm)
பார்வை : 231

மேலே