துடிப்படங்கும் பிரபஞ்சம் - கே-எஸ்-கலை
சுவாதியின் இடத்தில்
ஒரு குழந்தையோ
ஒரு கிழவியோ
ஒரு கர்ப்பிணியோ
ஒரு விதவையோ
ஒரு திருடனோ
ஒரு குருடனோ
ஏன்...
ஒரு பாத்திமாவோ
ஒரு விக்டோரியாவோ
இருந்திருந்தால் கூட
சிதறடித்துப் போயிருக்கும்
அந்த வெடி குண்டு !
இப்படி தான்
ஒவ்வொரு முறையும்
வெடி குண்டு
எதுவும் யாரும்
எனக்குச் சமமே என்று
சமத்துவம்
போதித்துக் கொண்டிருக்கிறது !
மனிதத்தைக் கடித்து
மதங்கள் துப்பிச் செல்லும்
கோரத்தின் தேகமே
வடியும் குருதியாய்
காட்சி தருகிறது
எங்கேயும் எப்போதும் !
வெண் புறாவுக்கு
ஆசைப்பட்டு காத்திருக்கும்
வானத்தில் - பசியாறிப்
பறந்துக் கொண்டிருக்கிறது
பருந்துக் கூட்டம் !
இன்னும் லட்சக் கணக்கில்
கேடயங்களாகவும்
பகடைக் காய்களாகவும்
அப்பாவிகள் இருக்கிறார்கள் !
லட்சங்கள் சொச்சமாய் மாறி
மிச்சமின்றிப் போகும் நாளில்
யுத்தங்கள் ஓய்வெடுக்கும்
பயங்கரவாதம் துயில் கொள்ளும் !
அன்றைக்கு....
வெடிகுண்டின் பிடியில்
துகிலுரிந்து துடித்துக் கிடக்கும்
பிரபஞ்சத்தின் உயிர்
துடிப்படங்கிச் செத்துக் கிடக்கும் !