புரியாத பயணம்

தினமும் எழுதுகிறேன்
முடியாத கவிதைகளை
பார்க்கிறார்கள்... பார்க்கிறார்கள்
படிக்கதான் தெரியவில்லை
கன்னங்களில் வரி.. வரியாய்...
பசி எடுக்கவில்லை
சாப்பிடுகிறேன்.. சாப்பிடுகிறேன்
வகை வகையான உணவு
அன்பாய் ஊட்டுகிறார்கள்
கனவுகளில்... விருந்தாய்...
அழகழகு கோட்டைகள்
உயரமாய் கட்டுகிறேன்
அண்ணாந்து பார்க்கின்றேன்
அத்தனையும் சரிந்தபடி
அடித்தளமிடாத யாவும்
மண்ணோடு மண்மேடாய்....
வண்ண வண்ண கோலங்கள்
வாசலிலே போடுகின்றேன்
அழிந்தழிந்து போகிறது
மார்கழியில் போடவில்லை
கார்க் காலக் கோலங்கள்
மழை நீரில் சிதைந்தபடி....
கடற்கரையில் விரலினிலே
ஓவியந்தான் தீட்டுகிறேன்
ஓவியம் முடியும் முன்னே
அலையடித்து போனதுபார்
முடிக்காத ஓவியத்தில்
தெரிந்த முகம் பாதியிலே....
குறைகளை சொல்லி அழ
தோழி அவளை தேடி நின்றேன்
அவளெதிரில் வந்து நின்றாள்
என்குறை சொல்லுமுன்னே
அவளழுது புலம்புகின்றாள்
என் அழுகை வாயடைத்து...
போகாத ஊருக்கு
ஆகாத பயணங்கள்
வேண்டாம் என்கின்றேன்
முகம் திருப்பிக் கொள்ள
எதிரியாய் என் கால்கள்
முன்னோக்கி நடைபயில...
போகும்வரை போகட்டும்
ஆனவரை பார்க்கிறேன்
எல்லைக்குள் இருப்பவள் நான்
எல்லைவரை வந்துவிட்டேன்
இருக்கும்வரை எழுதிவிட
இன்னும் கொஞ்சம் பயணங்கள்...