மௌனமே மௌனமாய்

மௌனமே ...மௌனமாய்......
சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக இருப்பது போன்ற, பிரமிப்பான தோற்றத்தை
கொண்டிருந்தது அந்த நீதிமன்றம்.அதன் முகப்பின் உச்சியில்,பிரான்ஸ் தேசத்தின்
தேசியக்கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது.
"ஹலோ...ஐ ஆம் ஆஹாஷ்"
"ஓ.. அது நீங்கள் தானா !..எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்று தெரிந்தும்,தோழமையுடன்
நீங்கள் , என்னுடன் பழகும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது "- என்று பிரஞ்சு மொழியில்
பேசிக்கொண்ட அந்த வழக்கறிஞர் , அவனுடன் கை குலுக்கிக்கொண்டார் .
"எங்கே உங்கள் கட்சிக்காரர் ?..இன்னும் காணவில்லை ? - என்று ஆகாஷ் போட்டிருந்த கூலிங் கிளாசை மேலே உயர்த்தினான் .
"அதோ "- என்று , அவர் கண்களால் ஜாடை காட்ட , அங்கு திவ்யா ஆளையே முழுங்கும்
ஆடைக்குள் தன்னை ஒளித்துக்கொண்டு , அழகாக நடந்து வந்து கொண்டிருந்தாள் .
"எப்படி இருக்கிறாய் ?"- என்று பிரஞ்சு மொழியில் ஆகாஷ் ,அவளிடம் கை குலுக்க முயன்ற போது, அவளோ அவன் பக்கம் வந்து கன்னத்தில் கன்னம் வைத்து ,
"நான் நலம் .நீ எப்படி இருக்கிறாய் ?"- பதிலுக்கு அவளும் பிரஞ்சு மொழியில் கேட்டாள்.
"ம்..ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் " - என்றான்
"எப்படியும் இந்த வழக்கு உன் வாழ்க்கைக்கு சாதகமாக அமையப்போவது இல்லை. நன்றாக யோசித்துதான் முடிவு எடுத்தாயா ?"- அவளது பார்வையில் ஏளனம் தெரிந்தது.
" சாதகமோ ?..பாதகமோ ?..சந்தோசம் தராவிடிலும் நிச்சயம் நிம்மதி தரும் "- அங்கு பிரஞ்சு மொழி விளையாடியது .
"அப்படியா !..சரி பார்ப்போம்"- என்றவள், அவன் காதருகில் வந்து,
"இப்போது நீ பிரஞ்சு நன்றாக பேசுகிறாய்"என்று அவனை பாராட்டிவிட்டு, நீதி மன்றத்துக்குள் நுழைந்தாள்.
அவளது அந்த பாராட்டு , அவனை எரிச்சலடைய செய்த போதும்,அவளே பாராட்டுமளவிற்கு இருந்த தனது வளர்ச்சியை எண்ணி அவனது மனம் பெருமிதம் கொள்ளவே செய்தது.
ஒருபக்கம் அவளை வெறுத்த போதும் , மறுபக்கம் அவளுடன் பழகிய, வாழ்ந்த அந்த இனிமையான நாட்களை, அவன் அடிக்கடி அசை போடாமல் இல்லை.
ஆகாஷ் இலங்கையை சேர்ந்தவன் . வீட்டிற்கு ஒரே ஆண்மகன். தந்தை இருக்கும்வரை எதிர் கால சிந்தனை அவனிடத்தில் இருந்தது இல்லை .எல்லாமே தந்தைதான் .தாயகத்தின் போர் சூழலால் தந்தை கொல்லப்பட , அப்போதுதான் உலகம் அவனிற்கு புரிய ஆரம்பித்தது . தாய் , தங்கைகள் அவனை நம்பி இருக்க , உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டான். தாய் நாட்டில் உழைப்பதற்கு அவனிற்கு வழி தெரியவில்லை . பூர்வீக சொத்தை விற்று , பிரான்ஸ் நாட்டை தஞ்சம் அடைந்து நாலு வருடங்கள் ஓடி விட்டது.
பிரான்ஸ் வந்ததும் , வேலை ஒன்று அவனுக்கு கிடைக்க , அதை தக்க வைத்துக்கொண்டான் . அப்போதுதான் அவன் இந்த திவ்யாவை சந்திக்க நேர்ந்தது . அவன் வேலைக்கு செல்லும் போதும் , திரும்பும் போதும் , அவளை சந்திக்காத நாட்களே இல்லையெனலாம் . நாட்கள் , கிழமைகள் , மாதங்கள் , என்று தொடர இருவர் முகங்களும் பரிச்சயமானது .
ஒருவரை ஒருவர் காணுகின்ற போது ஏற்படுகின்ற , சந்தோச சஞ்சலமோ , இல்லை ,! காணாத போது , மனதில் ஏற்படுகின்ற தவிப்பையோ, இனக்கவர்ச்சி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிட முடியாது. பார்வைகள் தந்த பரிதவிப்புக்கள் , பக்கத்தில் இல்லாத போதும் தோன்றுகின்ற புன்சிரிப்புக்கள் , இவை எல்லாம் காதல் என்றால் அவர்களும் அதில் விழுந்திருக்க வேண்டும் .
திவ்யா பிரான்சிலேயே பிறந்து வளர்ந்தவள் .பூர்வீகம் பாண்டிச்சேரி .தாய் தந்தை தமிழ் என்பதால் , அவளிற்கு தமிழ் நன்றாகவே பேச வரும்.சிறு வயதிலையே விடுதியில் தங்கி படித்ததால் , துணிவு அவளிடத்தில் கொஞ்சம்அதிகம்.திருமணவிடயத்தில் கூட , பெற்றோரின் முடிவுக்கு அவள் காத்திருக்கவில்லை . மாறாக வீடைவிட்டு வெளியே வந்து ஆகாஷை திருமணம் செய்து கொண்டாள்.
திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் ஹனிமூன் என்று , மிகவும் சந்தோசமாக ஊர் சுற்றினார்கள்.ஹனிமூன் முடிந்து, அவள் வேலை செய்ய ஆரம்பித்த போதுதான் ,ஆகாஷின் நண்பனான விஷ்வாவை, அவள் தனியே சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் சில உண்மைகள் அவளுக்கு புரிய ஆரம்பித்தது .
விஷ்வா விஷமுள்ளவன் . அவனிற்கு திவ்யா மீது ஒரு கண் . இவ்வளவு சீக்கிரம் ஆகாஷ், அவளை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவான், என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை . பத்து வருடமாக பாரிஸில் வாழ்ந்த எனக்கு கிடைக்காத வாழ்க்கை, நாலு வருடம் வந்த ஆகாஷுற்கு கிடைப்பதா ? மனதில் ஏற்பட்ட புழுக்கம், ஆகாஷின் கடந்த கால நிலையை , அவளிடத்தில் விஷமாக கக்கிவிட்டான் .
கொஞ்ச நாளாகவே அவள் மனசில் ஏற்ப்பட்ட புழுக்கம் , அவனுடன் சரியாக முகம் கொடுத்து பேச முடியாத சூழலை உருவாக்கி இருந்தது .
"கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருகிறீர் ..வேலை செய்யற இடத்தில ஏதும் பிரச்சனையா ? இல்லாட்டி அம்மாட ஞாபகம் வந்துட்டுதா ?"- என்று அவன் வஞ்சகம் இல்லாமல் கேட்டான்.
" ஒண்ணும் இல்ல " - என்று அவள் மழுப்பிவிட்டு அவன் வாயாலே உண்மைகள் வரட்டும் என்று பொறுமையோடு இருந்தவளுக்கு , மனப்புழுக்கம் இடம் தரவில்லை.
"அவசரப்பட்டு உங்களை கட்டிக்கிட்டேன் போல தெரியுது " - என்று அவள் குத்தலாக சொன்ன போது , சிரித்துக்கொண்டு அழகாக தலையை வாரிக் கொண்டிருந்தான் .
"அழகு மட்டும் இருந்தா போதுமா ?...ஒரு மனுசருக்கு நாகரீகம் தான் முதல் அழகு."
" அப்ப.. எனக்கு நாகரீகம் இல்லை எண்டு சொல்லுறீரா ? "
"உங்களிற்கு நாகரீகம் மட்டும் இல்ல என் மேல காதல் கூட இல்லேன்னு சொல்லுறேன் "
"நீர் உம்மட மனசில என்னத்தையோ நெச்சு கதைக்கிறீர் .. என்னெண்டு சொன்னாதானே விளங்கும் எனக்கு " ".. உங்க ஊர்ல ஒரு பொண்ண லவ் பண்ணி இருந்தீங்களாமே"
"இல்ல அது வந்து ... நான் லவ் பண்ணினது உண்மை ஆனா இப்ப அது இல்லை "
" இல்லேன்னா என்ன அர்த்தம்?
"அது கல்யாணம் செய்திட்டுது
"எப்ப "செயஞ்சதுன்னு... தெரியுமா ?
"ஆறு மாசம் இருக்கும் "
" அப்போ என்னை நீங்க லவ் பண்ணி எவ்வளவு காலம் ? அதே ஆறு மாசம் இல்லே.. ..அவள் கல்யாணம் பண்ணிக்கிற வரை அவள் உங்க மனசில இருந்திருக்க அப்படிதானே ? " சீச்... சீ.. " - அவள் சொல்வதை அவன் பெரிசாகவே எடுக்கவில்லை
" உங்க மனசு அவ்வளவு சீக்கிரம் எப்படி மாறும் ? நீங்க என்ன குரங்கா ? மரத்துக்கு மரம் தாவ ?- அவள் சொல்வதை கேட்க அவனிற்கு சிரிப்பா இருந்தது .
"சாட மாடைய என்னை குரங்கு எண்டு சொல்ல உமக்கு சந்தோசம் போல .. புருஷன் எண்டு , எனக்கு கனக்க மரியாதை தர வேண்டாம். போடா வாடா எண்டு சொன்னாலும் எனக்கு ஓகே. ஆனா குரங்கு எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவரா இருக்குடி "- என்று அவன் வஞ்சகமில்லாமல் முகத்துக்கு கிரீம் போட்டு கொண்டிருந்தான் .
"நீங்க என்னை கட்டிக் கிட்டது விசாவுக்காகத்தானே? "-அவனுக்கு பகீர் என்றது .
" சத்தியமா இல்லை விரும்பித்தான் செய்தனான் "அப்போதுதான் அவனுக்கு புரிந்தது அவள் சீரியசாக பேசுகிறாள் என்று ,
"இல்ல .. பொய் ,உங்க கிட்ட எவ்வளவு பணம் வாங்கினேன்னு .. அந்த விஷ்வா கேட்கிறான் .என்னை கட்டிக்கிறதுக்கு முன்னாடி காசு கொடுத்து ,விசாவுக்காக நீங்க கல்யாணம் பண்ணிக்க ட்ரை பண்ணினீங்களா இல்லையா ? " - அவள் கண்களில் கோபம் தெரிந்தது.
"அது வந்து ... நான் எல்லாம் உமக்கு சொல்லோணும் எண்டு இருந்தனான் .. எப்படி சொல்லுறதெண்டு எனக்குத் தெரியேல ஆறுதலா சொல்லுவோம் எண்டு இருந்திட்டேன் .. நான் ஒரு கேர்ள லவ் பண்ணினது உண்மைதான். இல்லை எண்டு நான் சொல்லேல, அப்ப எனக்கு வயசு பதினேழு .அதெல்லாம் சின்ன வயசில வந்த காதல்.அதோட நான் தான் லவ் பண்ணினான் ஒழிய, அது என்னை லவ் பண்ணேல . அப்பா என்னை விட்டு போனதுக்குப் பிறகு விருப்பம் இல்லாத , அந்த பிள்ளைய சுத்துறத நான் விட்டுட்டேன். இப்ப அது வேற யாரையோ கல்யாணம் செய்திட்டுது. மற்றது நான் விசாவுக்காக காசு குடுத்து ட்ரை பண்ணினேன் . அதுவும் உண்மைதான். சத்தியமா சொல்லுறேன் நான் உம்மை விசாவுக்காக கல்யாணம் செய்யேலே, ப்ளீஸ் என்னை நம்பும் ." - என்று அவன் சொல்வதையும் ,சொல்லும் தோரணையையும் அவளால் நம்ம முடியவில்லை .மாறாக அவள் கண்களில் நீர் தழும்பி நின்றது .அவள் முதன் முதலில் முணுமுணுத்த வார்த்தை
'நீ என்னை ஏமாற்றி விட்டாய் -' என்றுதான் .
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில், திவ்யாவை அவன் திருமணம் செய்து கொண்ட பின்தான் , பிரான்சில் அவனால் நிரந்தரமாக தங்க முடிந்தது. அதற்கு முன் விசாவுக்காக பணத்தை கொடுத்து பதிவுத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் அவன் குழப்பியதெல்லாம் உண்மைதான் .
தங்கைகளின் எதிர்காலத்தை எண்ணி அவன் கட்டாயம் பிரான்சில் தங்க வேண்டிய சூழ்நிலை . பணத்தைக் கொடுத்து , பதிவுத் திருமணம் செய்து , தன் பொருளாதாரத்தை உயர்த்தி , தங்கைகளுக்கு ஒரு வழி பிறக்கும் என்று கனவு கண்டான் . அப்போதுதான் திவ்யாவை அவன் சந்திக்க நேர்ந்தது .
உண்மையிலையே அவன் திவ்யாவை மனதார விரும்பினான் .முதலில் ஏற்பாடு செய்யப்பட்ட பதிவுத் திருமணம் தடைப்பட நேர்ந்தது .அந்த பதிவுத் திருமண ஏற்பாட்டால் கிடைக்க வேண்டிய கமிசன் பணம் விஷ்வாவிற்கு கிடைக்கவில்லை . பணம் கிடைக்காத ஏமாற்றம் , பொறாமை எல்லாவற்றையும் ஒன்றாக விஷ்வா , விஷமாக திவ்யாவிடம் கக்கி விட்டன் .
திவ்யாவின் மனசில் விரிசல் வளரவும் , வெறுப்பு வளரவும் , பதிவுத் திருமணம் காரணமாகிவிட்டது .
'இவன் தன் சுயநலத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டான் ' என்று அவள் அடி மனதில் வேரூன்றி இருந்தது .ஆனாலும் அவனை அவள் ஆழமாக நேசித்து இருந்தாள்.சில நேரங்களில் ஆழமான நேசம் கூட,வெறுப்பையும் விஷமான சொற்களையும் கொட்டச் செய்யும்.அது அவள் விடயத்தில் உண்மையானது .
'வெறுப்பை அவனிடத்தில் எப்படிக் காட்டுவது ?'- முதலில் வார்த்தையில் மரியாதையைக் குறைத்தாள்.
"இதோ பார் .. என் பக்கத்தில நிக்கிறதுக்கு கூட உனக்கு அருகதை கிடையாது , நான் படிச்ச படிப்புக்கு இஞ்சினியர் , டாக்டர்ன்னு மாப்பிள்ளை கிடைச்சு இருக்கும் ,போயும்
போயும் , கிளினிங் வேலை செய்கிற உன்னை , புத்தி கெட்டுப்போய் கட்டிக் கிட்டேன் ..வெளியில சொல்லவே வெட்கமா இருக்கு "- என்பாள்.
"இதில வெக்கப் பட என்ன இருக்கு .. பிச்சை எடுக்கேல , பொய் சொல்லேல , களவு எடுக்கேல "- என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவளே முந்திக் கொண்டு,
"அப்போ ஏமாற்ற தெரிஞ்சு இருக்கல்லவா"- என்பாள் குத்தலாக ,
"நீர் .. இங்கயே பிறந்து வளர்ந்தனீர் ,உம்மட படிப்புக்கு நல்ல வேலை கிடைச்சது ,எனக்கு அப்படியே! "- அவன் பேச்சை மாற்ற நினைக்க ,
" இந்த இறுமாப்பான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல ,பிரெஞ்சுல பேச ஒரு வார்த்தை வராது உனக்கு."
" இப்ப நான் பிரெஞ்சு படிச்சு என்ன செய்யப் போறன்.. ஊர்ல என்னை நம்பி அம்மாவும் ரெண்டு தங்கச்சியும் இருக்கினம் "
"அப்போ !என்னை கட்டிக்கிட்டது இந்த விசாவுக்காகத்தானே .? அதுதானே உண்மை ."
" ஐயோ !..எப்படி நான் உமக்கு விளங்கப்படுத்துறது எண்டு எனக்கு தெரியேல ,அதையும் இதையும் ஏன் முடிச்சு போட்டு கதைக்கிறீர் "என்று அவன் ஆதங்கப்பட்டுக் கொண்டான்.
அவளது குத்தலான பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகமானது.அவளுடன் முட்டி மோத முடியாத சுயநல பலவீனங்கள் , நாட்டு நிலைமை , குடும்ப கஸ்ரம் , என்ற கையாலாகாத்தனம் அவனை மௌனிக்கச் செய்தது .
அவன் செய்த ஒரே தவறு தன் விடயங்களை , கல்யாணத்துக்கு முன் அவளிடம் பகிர்ந்து கொள்ளாததுதான் . சொன்னால் விசாவுக்காக யாராவது இப்படி செய்வார்களா ? தன்னை அவள் கேவலமாக நினைக்க மாட்டாளா ? என்ற சுயநலமான, அசண்டையான போக்கும் ஒரு காரணம் .
'சரி கொஞ்ச காலம் போகட்டும் அவளது கோபம் தணியட்டும் '- என்று சில நாட்கள்
மௌனமாக இருந்தான் .
ஒரு நாள் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு , காதலின் ஆசையால் , அவளைத் தொட முயற்சித்த போது,
" இங்கும் உன் சுயநலம் தான். உன் ஆசையை தீர்த்துக்கொள் "- என்று அவள் ஆர்வம் இல்லாமல் சொன்ன போது ,'அவள் சொன்ன கூற்று உண்மையாகிவிடும்" - என்று அன்றிலிருந்து படுக்கை அறைப் பக்கம் அவன் செல்லாமலே விட்டான். சில பிரிவுகள் கூட விரிசல்களை அதிகப்படுத்தும் .
''பிரிவுகள் இருந்தாலும் , இரவு சாப்பாட்டிற்கு அவனிற்காக காத்து இருப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.ஏனெனில் பகலில் இருவரும் வேலை செய்வதால் ,இரவு மட்டும் தான் , ஒன்றாக சாப்பிட்டுக் கொள்ளவும், சண்டை பிடிக்கவும், நேரம் சரியாக இருந்தது. எங்கே போகிறேன் ? எப்போது வருவேன் ? என்று சொல்லத் தோன்றாதளவிற்கு விரிசல்கள் வளர்ந்திருந்தது.
அப்படித்தான் ஒருமுறை அவளிடம் ஏதும் சொல்லிக்கொள்ளாமல் தனது பாலிய நண்பனை சந்திக்க தூர இடம் அவன் போய் இருந்தான் .
அன்று வழக்கத்திற்கு மாறாக, அவள் மனதில் ஏதோ ஒரு புது சந்தோசம் . முகத்தில் ஒரு புதுப்பொலிவு , தன்னை அவள் கண்ணாடியில் பார்த்து சிரித்துக்கொண்டு , அவனிற்கு பிடித்ததெல்லாம் சுவையாக சமைத்து, நாள் முழுவதும் சாப்பிடாமல் அவனிற்காக ஏங்கி காத்திருந்தாள் .அவன் வரவில்லை . பசித்த போதும் அவனை விட்டு சாப்பிட அவளது மனம் இடம் தரவில்லை.
எதிர் பார்த்தாள். ஏமாந்தாள்.ஏமாற்றத்தின் விளிம்பில் இருந்தவளுக்கு , அவனிற்கு தன் மீது அக்கறை இல்லை என்றே எண்ணத்தோன்றியது . ஒரு டெலிபோன் கூட பண்ணத்தோன்றவில்லை . என்ற ஆதங்கம் ஆத்திரமாய் வெடித்துக்கொள்ள, பசியோடு அப்படியே உறங்கிப்போனாள் .
ஆனால் அவனோ , வெளியில் நண்பனோடு நன்றாக குடித்து விட்டு , பூனைபோல் மெதுவாக வீட்டிற்குள் வந்து , சோபா மேல் கொஞ்சம் உறங்கிப் போய் இருந்திருப்பான்.அப்போது யாரோ அவனது சட்டை காலரை பிடித்து உலுப்புவது போன்ற பிரம்மை ஏற்பட , துள்ளி எழுந்தான் .
அது பிரம்மையல்ல .அங்கே அவள் , அவன் எதிரே நின்று கொண்டு ,
" வீட்டில ஒருத்தி இருக்கான்னு.. கொஞ்சமாது நெனைப்பு இருக்கா உனக்கு ? இதென்ன சத்திரமா ? உன் இஷ்டத்துக்கு வந்து போறதுக்கு. ஒருபோன்கூட பண்ணத்தோணல, சாப்பிட்டாயான்னு.. ஒரு வார்த்தை கேட்க தோணிச்சா ? நான் மட்டும் இல்ல ... உன் வாரிசு கூடத்தான்"- வார்த்தைகள் வெளிவர முடியாமல் விக்கினாள். அதை அவள் சொன்ன போது அவன் முகத்தில் சந்தோசம் ஏற்பட , அவளை அணைத்து தோளில் தலை சாய இடம் கொடுக்க வேண்டும் போலிருந்தது அவனிற்கு. எட்டி அவள் கைகளைத் தொட ,
"தொடாதே ..குடிக்க வேற கத்துக்கிட்டே , மொத்தத்தில் நீ என்னை ஏமாத்திட்டே குடிக்கிறவங்களை கண்டாலே .. எனக்கு சுத்தமா புடிக்காதுன்னு உனக்கு தெரியாத ? லவ் பண்ணும் போது எனக்கு என்ன சொன்னே ? தண்ணி என் லைவ்ல தொட்டதே இல்லேன்னு பொய் சொன்னே .. எதுக்கு பொய் சொன்னே ...உன்னை எவ்வளவு நல்லவன்னு நம்பினேன். அப்பா , அம்மா பேச்சைக் கூட கேட்காம உன்னை கட்டிக்கிட்டேன்" - என்று கோபத்தை அடக்க முடியாமல் அவனை திட்டி விட்டு நீளமான கூந்தலை எடுத்து முடிந்து கொண்டு சமையல் அறைப்பக்கம் போனாள்.
"சாப்பாடு ஒரு கேடு "- சமையல் அறையில் பாத்திரங்கள் உருண்டு உடையும் சத்தம் கேட்டது .
மனம் பொறுக்க முடியாமல் அவனும் சமையல் அறைப் பக்கம் தலையை நீட்ட , அவனுக்கு பிடித்த உணவுகள் எல்லாம் நிலத்தில் சிந்திக்கிடந்தன .
அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று அவனிற்கு புரியவில்லை .காதலிக்கும் போது பலங்களை மட்டும் வீராப்பா பேசுபவர்கள் பலவீனங்களை பகிர்ந்து கொள்வதில்லை.
'எவ்வளவு அன்பும் ஆசையும் இருந்திருந்தால் எனக்காக பார்த்துப் பார்த்து சமைத்திருப்பாள். அவளை இவ்வளவு நேரம் காக்க வைத்தது எவ்வளவு குற்றம் ? '
"சாரி திவ்யா .. "என்று அவன் அவளை நெருங்க முற்பட ,
"கிட்டே வராதே உன்னை பார்க்கவே ..அருவருப்பா இருக்கு குடி நாத்தம் குடல புடுங்குது" -ஆவேசமா ரூம் கதவை அடித்து சாத்தி விட்டு , தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
அவனிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் வேறு பசியில் இருக்கிறாள் . சிந்திக் கிடந்த உணவுகளையெல்லாம் அள்ளி எடுத்து குப்பையில் போட்டுவிட்டு , ஏதோ யோசனை வர கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வீதிக்கு இறங்கினான் .
அவளிற்கு உண்விற்காக அலைந்தான் .எல்லா சாபாட்டுக் கடைகளும் மூடி இருந்தது. அந்த தெருவை விட்டு , பக்கத்து தெருக்களெல்லாம் சாப்பாடு தேடி ஓடினான் . அவளை விட்டு தான் மட்டும் வெளியில் சாப்பிட்டது தவறு என்று , அவனிற்கு அப்போதுதான் உறைத்தது.
குடும்ப வழ்க்கையில் அவனிற்கு ஏதாவது அனுபவம் உண்டா இல்லையே ! அன்பாக இருந்தால் , அன்பாக இருக்கிறேன் .விலகி நடந்தால் விலகி நடக்கிறேன் .இதுதான் அவனுக்கு தெரியும் .
வேணும் என்றால், வேண்டாம் என்றும். வேண்டாம் என்றால் வேண்டும் .என்ற சூத்திரம் அவனிற்கு புரியவில்லை.பெண்ணின் மனதை யார்தான் புரிந்தார்கள் ? அவன் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? எங்கேயோ தேடிப்பிடித்து சாப்பாட்டை வாங்கி வீடு திரும்பினான் . அப்போதும் அவளது ரூம் பூட்டப்பட்டிருந்தது .
"திவ்யா ப்ளீஸ் கதவை திறவும் நான் செய்தது பிழைதான். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் "- கதவை பலமாகத் தட்டினான் .
"சாப்பாடு வாங்கி வந்திருக்கிறேன் . எனக்காக வேண்டாம் ,எங்கட பிள்ளைக்காகவாவது சாப்பிட வேணும் ப்ளீஸ் .. கதவை திறவும் ".
-ஆவேசமாக கதவை திறந்தவள் பத்ரகாளி போல நின்றாள்.
"இப்ப கூட நீ சுயநலம் தான். பிள்ளைன்னதும் எப்படி துடிச்சு போறே ".
"இல்லை திவ்யா, அப்படியாவது உம்மை சாப்பிட வைக்கோணும் எண்டுதான் ".- என்று சொன்னவன் வேறு வழி தெரியாமல் அவளை இழுத்து அணைத்து முத்த மழை பொழிந்தான் .
"விடு என்னை. நீ என்னை தொட்டாலே, அருவருப்பாயிருக்கு . கம்பளி பூச்சி உடம்பெல்லாம் ஓடுறது போல இருக்கு ... இதுக்குத் தானே சாப்பாடு வாங்கி வந்தே.... காமப் பிசாசு நீ.....லவ் பண்ணுறது ஒருத்திய கட்டிக்கிறது இன்னொருத்திய.. விஷ்வா எல்லாம் என்கிட்டே சொன்னான் ,விசாவுக்காக தானே என்னை கட்டிக்கிட்டே அதுதானே உண்மை .இன்னும் என்னென்ன இருக்கோ உன் லைப்ல !"
."-அணைத்திருந்த அவன் கைகளை உதறி எறிந்து விட்டு விலகிப் போனாள் .
'அவளுடன் இனி என்ன பேசினாலும் சமாதானமாவது போல் தெரியவில்லை . ஒன்றுக்கு இன்னொன்றை முடிச்சுப் போட்டுக் கொண்டே போகிறாள்.
அவளது மனதிலே தோன்றிய குழப்பங்கள் அதிகரித்ததே அன்றி, குறைந்ததாக
தெரியவில்லை .அவளையும், அவள் மனசையும் தொட அவனால் முடியவில்லை. தொட்டால் சுயநலம் என்கிறாள் .கோபம் தணிந்து தானாக இரங்கி வருவாள் என்று அந்த இரவு ரணமாக சோபாவில் விழுந்து கிடந்தான் . தூக்கம் அவனிற்கு இல்லை. விஷ்வாவை நினைத்த போது கண்கள் சிவந்து , கோபம் தலைக்கேறியது.
'ஏன் அவன் அப்படிச்செய்தான் ?'- என்ற கேள்வி எழ மறுநாளும் அவளிடம் ஏதும் சொல்லாமல் கிளம்பி இருந்தான் . காலையில் அவள் எழுந்து பார்த்த போது, அவன் அங்கு இருக்கவில்லை .சொல்லிக் கொள்ளாமல் அவன் எங்கே போய் இருப்பான் ? வேதாளம் முருங்கை மரத்தில் ஏறின கதைதான். அவனை நினைக்கும் போது கோபமாகவும், வெறுப்பாகவும் , இருந்தது அவளிற்கு . அன்று அவள் அவனிற்காக காத்திருக்கவில்லை.எனக்கென்ன தலை எழுத்தா ? அன்பும் அக்கறையும் இல்லாத ஒரு சுயநலவாதிக்காக காத்திருக்க , என்று எண்ணியவள் , இன்னைக்கு நான் லேட்டா வரணும் அவன் காத்திருக்கட்டும்'- என்று மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு , அவள் தாய் வீடு சென்றிருந்தாள்.
நள்ளிரவாக, அவன் சிந்தனையும் வர, ஒரு டாக்ஸி பிடித்து வீடு வந்தாள். இன்னைக்கு அவன் என்ன செய்யப் போகிறான் காத்திருந்தால், கஷ்டமும் ,கோபமும் வரும். நல்லா வரட்டும் 'என்ற இறுமாப்போடு வீட்டிற்குள் நுழைந்தாள்.
அங்கு அவன் வந்ததிற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை .கோபத்தில் சோபா மீது தொப்பென்று விழுந்தாள். இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடணும் . சண்டை பிடித்தாலும் ஒரு வீட்டிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மனசு அப்படித்தான் .வாரத்தில் கிடைத்த இரண்டு நாள் விடுமுறையும், அவனுடன் கழியவில்லை .காதலிக்கும் போது ஒரு நாளைக்கு எத்தனை முறை ஃபோன் பண்ணுவான் .
இப்பவெல்லாம் அவன் மாறி விட்டான் .அவனிற்கு தேவை என்னுடைய உடம்பு. நான் இடம் கொடுக்கவில்லை என்றதும் என் மீது அவனிற்கு அக்கறை இல்லாமலே போய் விட்டது . சரியான சுயநலவாதி அவன். '- என்றவாறு பைத்தியம் பிடித்தது போல அவள் தனக்குத் தானே புலம்பித்தீர்த்தாள்.
சோபாவில் அவள் கொஞ்ச நேரம் அயர்ந்திருப்பாள், கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவன் தள்ளாடிய படி உள்ளே வந்தான் . ஆத்திரத்தில் எழுந்து அவன் கிட்டே போனபோது, சிகரெட் நாற்றம் வீசியது .
" குடிக்க வேற ஆரம்பிச்சாச்சு .. இன்னைக்கு சிகரெட் புதுசா ஆரம்பிச்சுட்டீயா ? நாளைக்கு ஒரு பொண்ணை கூட்டி வருவீயா ?" - என்று அவள் சொன்ன போது , பளார் - என்று அவள் கன்னத்தில் அறை போட்டான். அவள் அதை எதிர் பார்க்கவில்லை .
"என்னடி நீ பெரிய அழகு ராணியே !எத்தனை நாள் நான் இந்த சோபாவில .படுத்திருந்தனான்..நேற்று எவ்வளவு கத்தினேன் இப்ப என்னடி என்னில பெரிசா அக்கறை என்னை லவ் பண்ணித்தானே செய்தனீர்? லவ் எண்டா.... நம்பிக்கை வரோணும்.
நான் உம்மட்ட சில விஷயங்கள் சொல்லாம விட்டது, என்ர பிழை .எத்தனை நாள் என்னை குத்திக் குத்தி காட்டினீர் ! இவ்வளவு காலம் நான் பொறுமையா இருந்தனான்
நான் சொல்லுறத நம்ப மாட்டீர் .. யாரடி அந்த விஷ்வா ? அவன் சொன்னா நம்புறீர் இண்டைக்கு ரெண்டுல ஒண்டு கேட்க தான் தண்ணி அடிச்சிட்டு வந்தனான் "
- அப்படி ஒரு கோபத்தில் அவனை ஒரு நாளும், அவள் பார்த்தது இல்லை . பூனை போல எவ்வளவு மென்மையாக இருந்தவன். இப்போது புலி போல சீறுகின்றான். குடி போதையில் வேறு இருக்கின்றான். அழுது கொண்டு ஓடியவள் ரூம் கதவை தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டாள்.
அவளை பின் தொடர்ந்து சென்றவன் ,
"திவ்வியா ப்ளீஸ் கதவை திறவும். நான் செய்தது பிழைதான். தெரியாம கை வைச்சிட்டேன். இண்டையோட உமக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை ஒரு முடிவுக்கு வரோணும். நான் சத்தியமா அடிக்கமாட்டேன். ப்ளீஸ் கதவை திறவும். "- என்று அவன் பலமாக சத்தம் போட , மேல் வீட்டில் குடியிருப்பவன் தடியால், டொக்.. டொக்..- என்று சத்தம் எழுப்பினான்.- -அதன் அர்த்தம் 'சத்தம் அதிகமாக இருக்கிறது. அமைதியாக இருக்கும்படி '.
"உனக்கும் இருக்குடா ஒரு நாளைக்கு "- தமிழில் சத்தமாகக் கத்தினான் ஆகாஷ் .
இப்போது அவர்கள் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது .
" வீட்டிற்கே வாறீயா.. இருடா இப்ப வாறேன் "- என்றவாறு ஒரு இரும்புக்கம்பியை எடுத்துக்கொண்டு வெளிக்கதவை திறந்தான் .
அங்கே இரண்டு போலீஸ் நின்றது . அதிர்ச்சியடைந்த அவன்; கையில் இருந்த இரும்புக்கம்பியை அவர்கள் கவனிக்காத வண்ணம், ஒரு மூலையில் செருகினான் .
"நீங்கள்தானா ஆகாஷ் ?"- என்று வந்தவரில் ஒருவர் பிரெஞ்சில் கேட்டார் .
"ஆம் "- என்றவன் அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவில்லை .
"எங்களுடன் கொஞ்சம் போலீஸ் ஸ்டேசன் வரை வர வேண்டும் "- ஏன்,? எதற்கு ?என்று அவனிற்கு கேட்கத் தோன்றவில்லை .
வெளியில் யாரோ பிரெஞ்சில் பேசுவது கேட்டு , திவ்யா ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து ,
"என்ன பிரச்சனை"- என்று போலீசிடம் கேட்டாள்.
அவள் கன்னத்தில் கை அடையாளமும் ,அவன் குடி போதையில் இருப்பதையும், போலீசார் கவனிக்காமல் இல்லை .
"இன்று இவர் ஒருவரை அடித்து இருக்கிறார் . அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , இவரை கைது செய்ய வந்து இருக்கிறோம் ".
"யார் அவர் ?பெயர் என்ன ?" - என்று அவள் பிரெஞ்சில் கேட்க ,
"வி ஸ்..வ ..நா..தன் ,"- அந்த போலீஸ் ,பெயரை இழுத்துச் சொன்ன விதம் அவளிற்கு நன்றாக புரிந்து விட்டது . ஆகாஷ் நன்றாக குடித்து விட்டு விஷ்வாவையும் அடித்துவிட்டுத்தான் வீடு வந்திருக்கிறான்.
" திவ்யா..நான் உம்மட்ட ஒண்டு சொல்ல வேணும் " - அவன் பேச்சை அவள் காதில் போடுவதாக இல்லை .
"தாராளமாக நீங்கள் அழைத்து போகலாம் "- மிகவும் அமைதியாக சொன்னாள்.
போலீஸ் அவனிற்கு விலங்கு மாட்டவில்லை . அந்த நள்ளிரவிலும் , அக்கம் பக்கத்து வீட்டார்கள் தலையை நீட்டி வேடிக்கை பார்க்க , அவளிற்கு வெட்கமாக இருந்தது. கதவை பூட்டிவிட்டு படுக்கையில் சாய்ந்தாள்.தலையணை அவள் கண்களால் ஈரமாகியிருந்தது .
இரண்டு நாள் கழித்து அவன் வீடு வந்தான் .வீட்டு சாவியை எடுத்து திறக்க முயற்சி செய்தான் . சாவி உள்ளே நுழைய முடியாமல் அடம் பிடித்தது .சாவி போடாமலே கதவு திறந்தது . திவ்யா கதவை திறந்தபடி வாசலில் நிற்க , அவள் கண்கள் வீங்கி இருந்தது. எதுவுமே புரியாமல் அவன் உள்ளே நுழைய முற்பட்ட போது , குறுக்கே இருந்த அவளது கை தடுத்தது.
"உனக்கு...இந்த வீட்டில இடம் இல்ல .."- அப்பாவி போல அவளை நிமிர்ந்து பார்த்தான் .
" உன்னை நான் .. நம்பினது போதும் . உன்கிட்ட என்ன நல்ல பழக்கவழக்கம் இருக்கு நான் உன் கூட சேர்ந்து வாழ? தப்பு செய்ததெல்லாம் நீ..தண்டனை மத்தவங்களுக்கா ?உண்மைல உனக்கு என் மேல காதல் இருந்தா ..எல்லாத்தையும் தூக்கிப் போட்டுப் போ ... அப்படி நீ போகமாட்டே ஏன்னா.. உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.உடம்பு சுகத்துக்கும், விசாவுக்கும் ஆசை பட்டுத்தானே என்னை கட்டிக்கிட்டே ......போகட்டும் .பத்தாயிரம் யூரோ கட்டி நீ எடுக்க வேண்டிய விசா.. நான் உனக்கு போட்ட பிச்சையா இருக்கட்டும். கனவிலும் என்னை தொடலாம்ன்னு நெனைக்காதே... என் கண் முன்னால நிக்காதே.. ...என்னை நிம்மதியா இருக்க விடு "- என்று சொல்லி முடித்து தேம்பி அழுதாள்.
"திவ்யா "என்று அவள் கைகளை பிடிக்கப் போக ,
"தொடாதே ப்ளீஸ் போயிடு "- அவள் கையெடுத்து கும்பிட்டாள்.
அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை .
காதல் என்பது , நம்பிக்கை என்னும் உயிரினில் உருவானது .எப்போதுஅந்த ,
நம்பிக்கை என்னும் உயிர் பிரிகிறதோ , அப்போதே காதல் செத்துவிடுகிறது. அவன் விடயத்திலும் அதுதான் நடந்தது.
தனது காதல் உண்மை என்று அவளிற்கு உணர்த்துவதற்கு அவனிற்கு வேறு வழி தெரியவில்லை . அதனால் தான் அவனாக கேட்ட விவாகரத்து அந்த நீதி மன்றம் வரை அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது .
எத்தனையோ லட்சங்கள் கொட்டி தன் தங்கைகளை கரை சேர்க்க வேண்டும் என்று வெளிநாடு வந்தவனுக்கு , காதல் வந்து இருக்கக் கூடாதுதான் .தனது கடமையை
மறந்ததிற்கும், தனது உண்மையான காதலுக்கு சாட்சியாக எதுவும் சொல்ல முடியாமல் திராணியற்று மௌனமாய் நிற்பதற்கும் ,தனக்கு கிடைக்க வேண்டிய சரியான தண்டனை இதுவே என்றும், தானாகவே இந்த விவாகரத்தை கோரியிருந்தான் .அவனது நண்பர்கள் அவனை 'அவள் தான் உனக்கு சிட்டிசன் வரும் வரை உன்னை டைவர்ஸ் செய்யப்போவதில்லை என்று கூறி இருக்கிறாளே , அப்படி இருக்க ,நீதான் கண்ணை திறந்து கொண்டு , கிணற்றில் குதிக்கப் போகிறாயா?'- என்று கோபமாய் விமர்சனங்கள் செய்த போது,- அவன் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் ,
' எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் , அதை நாம் இழப்பதற்கு '- என்று பகவத்கீதையில் அன்று கண்ணன் சொன்னதை ,இவன் இங்கு தன் நண்பர்களுக்கு ஞாபகப்படுத்தி ,விவாகரத்தில் உறுதியாக இருந்தான் .
அவன் விவாகரத்து கோருவான் என்று அவள் துளியளவும் எதிர்பார்க்கவில்லை .தன்மானம் இடம் தராததால் அவளும் பச்சை கொடி காட்டி விட்டாள்.
நீதி மன்றத்தில் இருவரும் நின்றார்கள் .மனப்பூர்வமாக விவாகரத்திற்கு சம்மதம் சொன்னார்கள் .எப்படியும் இரண்டு வருடம் இழுபடும் என்று அவள் நினைத்தாள். நடந்தது வேறு,
ஏற்கனவே குடி போதையில் அவளை அடித்ததை, போலீசில் அவன் அதை ஏற்றுக் கொண்டதாகவும், அவளை தான் விசாவுக்காக தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அவனது வாதம் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது .
விவாகரத்து அங்கே உடனே வழங்கப்பட்டு , அவனது விசாவும் ரத்து செய்யப்பட்டது.
நாடு கடத்தப்பட வேண்டிய பிரஜைகளில் அவனது பெயரும் குறிப்பிடபட்டது .
'நீங்களாக எதுவும் செய்ய வேண்டாம் .நானாகவே உங்கள் நாட்டை விட்டு சந்தோசமாக வெளியேறுகிறேன் '- என்று எழுதிக் கொடுத்தான் .
அவன் புறப்படும் நாள் அறிந்து அவளது மனது சஞ்சலப்பட தொடங்கியது . அவனது அந்த முடிவை அவளும் எதிர்பார்க்கவில்லை .
அவன் சுயநலவாதியாக இருந்திருந்தால் , இங்கு அவன் கள்ளமாக இருந்திருக்கலாம். இல்லை , வேறு நாடு சென்றிருக்கலாம் .அவனாகவே விவாகரத்து கோரி தன் தலையில் தானே மண்ணை வாரி இறைக்கத் தேவை இல்லை .ஏதோ அவன் மனம் உடைந்து இருப்பது போன்ற தோற்றம் , என் காதல் உண்மை என்று சொல்வது போன்ற , அவனது கண்களில் தெரிந்த தெளிவு , அவள் மனதை ஏதோ செய்தது .
ஏர்ப்போட்டிற்கு ஓடினாள். அவள் கலங்கிய கண்களுடன்,அவன் கண்களை சந்தித்த போது, அந்தக் கண்கள் ஆயிரம் கதைகள் பேசியது .
'உனக்கும், எனக்கும், எல்லாமே முடிந்து விட்டதா?..இல்லையே !கணக்கு வழக்கு ஒன்று என் வயிற்றில் இருக்கிறதே , அதற்கு நீ... என்ன சொல்லப் போகிறாய்? - என்பது போன்ற கலங்கிய பார்வையில் அவனை பார்த்தாள்.
'என் பார்வையை நீ புரிந்து கொள்ளாத போது, உன் பார்வையை மட்டும் நான் எப்படி புரிந்து கொள்ள முடியும் '- என்பது போன்று அழகாக தலைக்கு மேலே இருந்த கூலிங்கிளாசை கீழே இறக்கிவிட்டான்.
மௌனங்கள் பேசிக்கொள்ள , கண்கள் கலங்கிக் கொண்டன .
சில இத்தாலியர்கள் கூட அவன் பழகியதால் , அவள் காதருகே வந்து,
"அ தீயோ "- (கடவுள் இடத்தில் சந்திப்போம்)"- என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்து புறப்பட்டான் . அவன் காதல் உண்மையெனில் தாய் நாடு சென்றும் அவளிற்காக காத்திருப்பான் . அதே போல் அவள் காதலும் உண்மையெனில் , அவன் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவனைத்தேடி அங்கு அவள் செல்வாள் .
காலம் மருந்தாகும். பிரிவுகள் அன்பை பெருக்கும் .
ஒன்று கூடும் காலம் அதிக தூரத்தில் இல்லை .
-நன்றி -
- என்றும் மாணவனாக -
எஸ் .ஜி .உதயசீலன்.

எழுதியவர் : S.G.uthayaseelan (4-May-14, 5:53 pm)
Tanglish : mowname mounamaai
பார்வை : 363

மேலே