மனதிலே நிற்கிறாள் அர்ஷயா
கண்டிடும் காட்சியால் கண்கள்
கண்ணீரால் மறையுது !
மலராத மொட்டின் வாட்டம்
மனதைத் தொடுகிறது !
புரியாத நெஞ்சின் சோகத்தால்
புண்ணாகிறது உள்ளம் !
புன்னகை துறந்த புதுமலர்
புண்பட்ட நெஞ்சானது !
தந்தையின் நிலையறியா தங்கம்
தன்னிலையே மறந்தது !
உயிரில்லா உடலைப் பார்த்து
உணர்வின்றி கையசைக்குது !
பாசமுள்ள அப்பாவை பறிகொடுத்து
பரிதவிக்கும் பரிதாபம் !
தியாகி பெற்றுடுத்த திருஉருவம்
உருகி தவித்திடும் காட்சியிது !
நாட்டிற்காக உயிர் நீத்தவரின்
உதிரம் உறைந்து நிற்கிறது !
விழிகளில் வழிந்திடும் சோகத்தால்
விழிகள் நீரால் நிறைகிறது !
முடிவில்லா தீவிர வாதத்தால்
முடிகிறது பலரின் வாழ்வு !
மதியிலா மதவெறியின் உச்சத்தால்
மண்ணில் மறைந்தது மனிதம் !
மாறிடுமா மடிந்திடுமா மதவெறி
பூமியில் நிலைக்குமா மனிதநெறி !
நெஞ்சிலே நிலைத்தார் முகுந்தன்
மனதிலே நிற்கிறாள் அர்ஷயா !
வீர வணக்கம் தீரன் முகுந்தனுக்கு !
பாசக்கரம் அவர்தம் குடும்பத்திற்கு !
( சமீபத்தில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட தமிழக இராணுவ வீரர் முகுந்தன் அவர்களின் இறுதி சடங்கின் போது அவரின் ஒரே மகள் அர்ஷ்யா தன தந்தைக்கு இறுதி விடை கொடுக்கும் காட்சியே இது. )
பழனி குமார்