பயங்கர வாதம்
ஒன்று போல உருவம்------------------------------------------ அது ஒன்றே சான்று ,
உலக மனிதர் அனைவரும்
ஒருதாய் மக்கள் என்பதற்கு !
@@
பிறையும் சிலுவையும்
பிறவியில் ஏதடா ,
அம்மணம் ஒன்றே
அடையாளம் நமதடா !
@@
போதனை எல்லாம்
பொய்வழி தானடா,
போகும் வழி ஒன்றே
மெய் வழியாமடா !
@@
உலகம் உயிர்களின்
உறைவிட மாமடா,
உணவு ஒன்றே
உன்தேவை யாமடா !
@@
பொன்னும் பொருளும்
ஆள்வது ஏனடா ,
போதும் என்ற மனமே
பொன்மருந் தாமடா !
@@
ஆசை பேராசை
அழிவின் கூறடா ,
அன்பு ஒன்றே
அறவழி யாமடா !
@@
உயிர்களை அணைத்து
ஒன்றி வாழடா,
இயற்கை அதுதரும்
இன்ப வாழ்வடா !
@@
மனித நேயத்தில்
வாழ்வது திடமடா ,
மனிதரைக் கொல்பவன்
மன நிலை முடமடா !
@@
கொன்று வாழ்வது
என்ன வாழ்வடா ,
கொல்பவன் சாவதும்
கொலையில் தானடா !
@@
அழிக்க நினைத்தால்
அழிந்துவிடு அனைவரோடும்,
அடுத்து வரும் மனிதனாவது
புது உலகில் வாழட்டும் !