மகாகவியின் கரங்களால் ஓர் விருது - வினோதன்

சென்னையில் பயணிக்கும் அனைவருக்கும் பழக்கப்பட்ட வாகன நெறிசல் ஏனோ 03.05.2014 அன்று எனக்கு மட்டும் மாகன நெறிசலாகி என் சாபத்துக்கு ஆளானது , ஏனெனில் நான் காண விழைந்து விரைந்து கொண்டிருந்தது, தளத்தில் முதுபெரும் கவிஞர் அய்யா காளியப்பன் எசேக்கியல் அவர்களை. தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்குமுன்னரே நின்றுகொண்டிருந்த அய்யாவை ஓடியபடியே என் கண்கள் கண்டுகொண்டன, அய்யாவின் கண்களும் அதுபோலவே.

நான் அய்யாவை பார்ப்பது இதுதான் முதல்முறை என்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. உடனே மூன்று சக்கர வாகனமொன்றை அணுகி விழாத் தளத்தை விரைவாக சென்றடைந்தோம். இடையே அய்யாவுடனான உரையாடல் என் வயதை குறைத்துக்கொண்டே வந்தது, அவ்வளவு எளிமையான பேச்சு. அய்யாவின் கவி வரிகளை படித்திருந்த எனக்கு, அய்யாவை படிக்க படிக்க கவிதையை விடவும் பிடித்துப்போனது.

நுழைவாயிலை அடைந்ததும் எனக்கு அங்கிருந்த யாரையும் தெரியவில்லை, அய்யா எனக்கு படம் வரைந்து பக்கம் குறிக்காத குறையாக அனைவரையும் பற்றி விவரித்துகொண்டிருந்தார். சற்றென்று என் விழிகளுக்கள் ஒரு உருவம் ஆணித்தரமாய் உட்கார்ந்தது. வெளிர் பச்சை உடையில் ஒரு வெண்பா ஓடி வந்து அய்யாவை ஆரத்தழுவியது. அது இந்த "இரட்டை வரிக் கோட்டிற்கு" கவி வீதிகளில் விலாசம் வாங்கித் தந்த அய்யா அகனார். முன்பு புதுவையில் கண்ட பொலிவை எங்கோ விசிறிவிட்டு, புதுப் பொலிவுடன் புறப்பபட்டிருப்பர் போலும். கட்டாய இலையுதிர் காலத்தை சிரம் எற்றிவிட்டிருந்தார்.

மூவரும் தேனீர் அருந்தியபடி பேசிகொண்டிருந்தோம், அப்போது எனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட முகங்களான பேராசிரியர் ரவிக்குமார் அய்யாவையும், அய்யா சீனு.ராமசாமி அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. அப்போது ஒரு குட்டி உலா போல சென்றோம், அகன் அய்யாவின் வாகனம் வரை நடந்து சென்று அதிலிருந்து காளியப்பன் அய்யாவிற்க்கும் எனக்குமான புத்தகங்களை மறக்காமல் எடுத்து வந்து கொடுத்தார்.

அந்த அரங்கைப் பற்றியும் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அவ்வளவு எழில் மிகு அரங்கம். நவீனத்துவமும் பாரம்பரியமும் இரண்டறப் பிணைந்து கிடந்தது. அங்கெ சில மாணவிகள் நடனம் கட்டுக் கொண்டிருந்ததையும் கண்டேன். கால்களால் கூட கவிதை எழுதலாம் என நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

விழா அரங்கினுள் உள்ளேறிய போது, என்னால் அந்நாள் அக்காவென்று அழைக்கப்பட்டு பின் அந்தாளே அம்மாவென அக்காவாகிய அம்மாவால் திருத்தப்பட்ட கவிஞர். சியாமளா அம்மாவை சந்தித்தோம். ஏனோ புதிதாய் சந்தித்த உணர்வு கொஞ்சம் கூட இல்லவே இல்லை. வெகு சகஜமாக பேசிக்கொண்டு இருந்தோம். காளியப்பன் அய்யா, நான், சியாமளா அம்மா என வரிசையாக அமர, சில பல மனக் கணக்குகளை போட்டபடி அகனார் பின் வரிசையில் மறந்தார்.

விழா மேடையை "அமிழ்தத் தமிழ்" இளவரசன், தூரிகை ஓவியர் அமுதபாரதி, முனைவர் சிலம்பொலி செள்ளப்பனார், கவிஞர் முத்துலிங்கம், இலக்கிய வீதி இனியவன், பசுமை நம்பி துரை.முனுசாமி இன்னும் பல அறிஞர் பேரு மக்கள் அலங்கரித்தனர். மின்னலென ஓருருவம் வேகமான நடையோடு உள்ளே புகுந்தது சூரியன் சட்டென மேடையேறி எளிமையாய் அமர்ந்தது, நிலா சூரியனுக்கு கீழ் எதிரே அமர்ந்தது, ஆம் மகாகவி ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள் தன் துணைவியாருடன் வந்திருந்தார்.

மேடையோர் எல்லோரின் நாவுகளிலும் தமிழ் விளையாடியது. கேட்க கேட்க இந்த மாதிரியான விழாக்கள் எங்கு நடந்தாலும் ஓரமாய் நின்றாவது கேட்க வேண்டும் என்ற உணர்வு வந்தது. ஓவியர் அமுதபாரதி அவர்களுக்கும், இயற்கை விவசாய் துரை. முனுசாமி அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

இடையில் சட்டென எங்கள் வரிசையில் சிரிப்பொலியுடன் ஓர் ஒருவம் என்னையும் தாண்டி சியாமளா அம்மாவையும் தாண்டிப் போய் அமர்ந்தது, அது சாந்தி அக்கா. மேடையில் யாரும் சிரிக்கும் படி பேசினால் முதலில் அக்கா தான் சிரிப்பார், இரண்டாவதாய் நான்.

இறுதியாய் ஒலிவாங்கியை உள்வாங்கியது மகாகவியின் கரங்கள், சிரிப்பு மழை, சிந்தனை மின்னலுடன். நிறைய கருத்துக்களை மிக எளிமையாக, எலோருக்கும் புரியும்படி, ரசிக்கும்படி தெரிவித்தார். தனது பேரக் குழந்தைகளுக்குகாகவே இரண்டு தனித்தனி புத்தகங்கள் எழுதிய ஒரு மாபெரும் படைப்பாளியை கண் குளிர கண்டு, காது குளிர கேட்ட நிம்மைதியை விழா அளித்தது. முன்னதாக அய்யாவின் கரங்களால் நானும், காளியப்பன் அய்யா அவர்களும், ஏனைய பிறரும் விருது வழங்கப் பெற்றோம். அத்தனை சான்றோர் பெருமக்கள் அலங்கரிந்த மேடையில் நாமும் விருது பெறுகிறோம் என்ற உணர்வு என்னை காற்றைவிட இலகுவாக்கி சற்றே பறக்க வைத்தது.

மகாகவி என்னுள் விதைத்த மிக முக்கியமான விடயம் எல்லோருக்குமானது, எழுத எடுக்கும் கருப்பொருளில் சமூகத்தையும் அவ்வப்போது சேர்த்து கொள்ளுங்கள். நிகழ்வுகளை காட்சிப்படுத்துங்கள், வேறு கோணங்களில் உலகை உற்று நோக்குங்கள். என் இனிவரும் கவிதைகளில் சிலபல மாறுதல்கள் இருக்குமாய் நீங்கள் உணர்ந்தால் அது மாகவியின் வார்த்தைகளால் விளைந்தது என்றுணர்க.

எல்லாம் முடிந்தபின், என் முதுகுக்குப் பின்னால் உரிமையோடு ஒரு குரல் அழைக்க, திரும்பிய எனக்கு உச்சபட்ச இன்ப அதிர்ச்சி, ஆம் அது தோழி தாரகை. எனக்கு நன்கு அறிமுகப்பட்ட ஒரு நட்பின் நடப்பு. முடியாது, முடிந்தால் வருக என உரிமையோடு வேண்டுகோள் விடுத்தேன். அவரது பலமும் எனது நலம் விரும்பியுமான அவரது கணவர் அவர்களையும் அன்று கண்டு கலந்துரையாடியது பெரு மகிழ்ச்சி. விழா முடிந்தவுடன் அவரவர், பறக்க அக்கா சாந்தியும், அம்மா சியாமளாவும் ஒரு றெக்கை கொண்டு பறந்தனர் கை காட்டிவிட்டு. பின்னர் தோழி தாரைகையும், அவரது கணவரும் கை காட்டிவிட்டு பறந்தனர். பின்னர் அகனார் தனது வாகனத்திலேயே என்னையும். காளியப்பன் அய்யாவையும் தி.நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, சில வார்த்தைகள் பேசினார், இத்தகைய குருவொருவர் கிடைக்க நான் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும் என உணர்த்திவிட்டு போனார் தனது செய்கையினால்.

மறுபடி அய்யாவும் நானும் தாம்பரம் நோக்கி பயணப்பட்டோம். நிறைய பேசினோம், பாதி-பாதியை பாதி பாதி உண்டுகொண்டே. பின்னர் நான் கிண்டி இரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். பின்னர் எனது வீட்டிற்கு தஞ்சைக்கு பயணப்பட்டேன். ஒன்றே ஒன்றுதான் ஓடிக்கொண்டு இருந்தது பேருந்து அல்லாமல், அது தமிழும், தமிழால் நான் பெற்ற உறவுகளும்.

எங்களின் சங்கமப் புள்ளியாம் எழுத்திற்கும், வந்திருந்த என் உறவுகளுக்கும், எனை கைபிடித்து தூக்கி விடும் அகனாருக்கும், அகம் முழுதும் நிரந்த கிடக்கும் தமிழுக்கும் என் கோடான கோடி நன்றிகள் !

மேலும் ஆண்டுதோரும் தளத்தின் பல உறவுகளும் சங்கமிக்கும் விழாக்களை எடுக்க வேண்டுமென அய்யா அகனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

எழுதியவர் : வினோதன் (5-May-14, 9:09 pm)
பார்வை : 108

மேலே