கன்னியின் கன்னி முயற்சி
கவிதை எழுத ஆசை பிறந்தது
கருவைத் தேடி மனது அலைந்தது
எண்ணப் பறவை சுற்றித் திரிந்தது
என்னுள் ஏக்கம் பொங்கி வழிந்தது !
எங்கு தேடியும் கிட்டாமல் தவித்தது
எட்டாக் கனியாய் உளமும் நினைத்தது
கிறுக்கிய தாளை கசக்கக் கிழிந்தது
கிடுகிடு வெனவே குப்பை நிறைந்தது !
வான்நிலா பாட ஆர்வம் எழுந்தது
வரியுள் சிக்கிட அடம் பிடித்தது
பரிதியும் எழுத்தில் பதிய மறுத்தது
பக்குவ மில்லா நிலையும் புரிந்தது !
இயற்கை வனப்பு விழியில் பதிந்தது
இதமாய் தொடங்க தடங்கல் வந்தது
அலைகடல் அழகு வசியம் செய்தது
அருவியின் இரைச்சல் சுருதி சேர்த்தது !
தெவிட்டா இன்பம் செவியில் பாய்ந்தது
தென்றல் வருடிட மேனி சிலிர்த்தது
பூக்கள் மலர்ந்திட புன்னகை விரிந்தது
பூவையென் உள்ளமோ விண்ணில் பறந்தது !
இத்தனை பார்த்தும் கவிதை வரவில்லை
இதற்கு மேலெழுத எனக்கு வழியில்லை
இதயத்தில் முதல்முதல் காதல் பூத்தது
இடைவிடா இன்பமாய் கவிமழை பொழிந்தது !!!